dimanche 21 juillet 2019

வேல் பந்தம் - 3

வேல் சித்திர கவிதை - 3
  
வா..வா..தே னே!வாழ்வே! வாழ்கவி கண்மிக..வா!
நாவோது நற்றேன்..தா! மாதர..வா! - மேவிரத
நா..வாழ் கவிகற்றே மேவி..வா! தாதுமிக
வா..வேழ்வா னே!தேவா! வா!
  
கண் - அறிவு, பெருமை
மா - செல்வம், வலிமை, அழகு
மே - மேன்மை
மேவுதல் - விரும்புதல்
தாது - மலர்
  
விளக்கவுரை
  
இனிமையான தேனே வாராய்! என் வாழ்வே வாராய்! வாழும் கவிஞனாகிய எனக்குப் பெருமை மிகுந்தோங்க வாராய்! நாவோதும் தமிழ்த்தேனைத் தாராய்! நல்லழகைத் தந்திட வாராய்! மேன்மையைத் தரும் தவத்துக்குரிய பாடல்களை நான் கற்றுக்களிக்க விரும்பியே வாராய்! வாழ்வு மலராக மலர்ந்து மணம்வீச வாராய்! ஏழுலகுக்கும் வானாக இருக்கும் தேவனே வாராய்!
  
வேலின் அடியில் பாடலைத் தொடங்கி, வேல் பகுதில் படுக்கைக் கோட்டில் ஏறிச் உச்சியை அடைந்து, வேலைச் சுற்றி, மீண்டும் உச்சியை அடைந்து, உச்சியிலிருந்து கீழ் இறங்கிப் பாடல் தொடங்கி இடத்தில் நிறைவடையும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.07.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire