வேல் சித்திர கவிதை
சித்திர கவி நுால்களில் ஐந்து வகையான வேல் சித்திரங்கள் உள்ளன. மயிலிட்டி க. மயில்வாகப் புலவர் எழுதிய நகுலேச்சர வினோத விசித்திர கவிப்பூங்கொத்து நுாலில் வஞ்சி விருத்தத்தில் அமைந்த வேல் சித்திரம் உள்ளது. இவ்வேல் முதல் அடியும் ஈற்றடியும் மாலை மாற்றாகவும், இடை இரண்டடிகள் மாலை மாற்றகவும் அமைந்துள்ளது. [பாடல் 32 எழுத்துக்கள், சித்திரம் 16 எழுத்துக்கள்]
பி.வி. அப்துல் கபூர் சாகீப் அவர்கள் எழுதிய சித்திர கவிமாலை நுாலில் இணைக்குறள் ஆசிரியப்பாவால் வேல் சித்திரம் அமைந்துள்ளது. [பாடல் 115 எழுத்துக்கள், சித்திரம் 90 எழுத்துக்கள்]
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் வேல் சித்திரம் நேரிசை வெண்பாவால் அமைந்துள்ளது. மிக்க கடினமாக எழுதும் முறையில் அமைந்துள்ளது. [பாடல் 55 எழுத்துக்கள் சித்திரம் 30 எழுத்துக்கள்]
செட்டிபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரக் கவுண்டர் பாடிய கந்தன் சித்திர பந்தன மாலை நுாலில் வஞ்சித்துறையால் வேல் சித்திரம் அமைந்துள்ளது. [பாடல் 33 எழுத்துக்கள் சித்திரம் 29 எழுத்துக்கள்]
சென்னையைச் சேர்ந்த உவமைப்பித்தர் அவர்களின் செந்தமிழ்த்தாய் திருவாயிரம் நுாலில் வெண்பாவால் வேல் சித்திரம் உள்ளது. வெண்பாவின் ஈற்றடி மாலை மாற்றாக அமைந்துள்ளது. [பாடல் 52 எழுத்துக்கள், சித்திரம் 40 எழுத்துக்கள்]
சித்திர கவிதை எழுத முயற்சி செய்வோர் எளிமையாக எழுதும் வண்ணம் குறட்பாவில் வேல் சித்திரத்தை நான் உருவாக்கி உள்ளேன். நம் பயிலரங்கப் பாவலர்கள் இவ்வகையை எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
வேற்கண் விடுகணை மேவி மதுவேறும்!
பாற்கண் படருமே பாட்டு!
இக்குறட்பா 26 எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்றிவரும் எழுத்துக்கள் [1-13] [7-18]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.07.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire