வெண்பா மேடை - 138
சீர்முதல் ஒற்றைக் கொம்புறு வெண்பா
கொக்கெனக் கொத்துவதேன்? செல்லமே! கெண்டைவிழி
சொக்கித் தொடுப்பதுமேன் கொக்கியை? - செக்கெனயென்
நெஞ்சமேன்? கொல்லுதடி பெண்ணேவுன் பொன்னழகு!
கொஞ்சவே சொற்கள் கொடு!
பாட்டரசர் கி.பாரதிதாசன்
சீர்முதல் இரட்டைக் கொம்புறு வெண்பா
சோலையெழில் சேயிழையே! தோகையெழில் தேவதையே!
கோலவெழில் போதைதரும் கோதையே! - சேலையெழில்
தேக்குதடி தேனுாற்றை! தேவியுன் சேலழகு
சேர்க்குதடி வேதனையைத் தேர்ந்து!
பாட்டரசர் கி.பாரதிதாசன்
கொம்பு முட்டும் வெண்பா
தொன்மொழியே! தேவே! தொழுமொழியே! தொண்டொளியே!
தென்மொழியே! தேனே! செழிப்பழகே! - பொன்மொழியே!
தேரழகே! செந்தமிழே! செம்மொழியே! சேர்ந்தெனக்கே
பேரழகே! பேறே பெருக்கு!
வெண்பாவின் தளை காணுமிடத்தில் நிலைமொழி ஈற்றெழுத்தும், வருமொழி முதலெழுத்தும் கொம்புடைய எழுத்தே வரவேண்டும்.
விரும்பிய பொருளில் இவ்வகை வெண்பக்களைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாக்களைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019
Aucun commentaire:
Enregistrer un commentaire