samedi 29 février 2020

கேட்டலும் கிளத்தலும்



கேட்டலும் கிளத்தலும்
  
சொன்னபடிச் செய்தான் - சொன்னபடி செய்தான்
இவற்றில் எது சரி?
  
பாவலர் தென்றல்
  
--------------------------------------------------------------------------------------------------------------------------------
  
வினையை அடுத்துவரும் படி என்ற சொல்முன் வல்லினம் இயல்பாய் வரும். சொன்னபடி செய்தான், வரும்படி சொன்னான், போகும்படி கேட்டான்.
  
பெயரை அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகும். முறைப்படிச் செய்வான். சட்டப்படிக் குற்றம்.
  
சுட்டையும் வினாவையும் அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகாமலும் வரும், மிகுத்தும் வரும். அப்படி செய், அப்படிச் செய், இப்படி பார், இப்படிப் பார், எப்படி போவாய், எப்படிப் போவாய்.
  
அப்படி போகாதே! இப்படிச் சென்றிடுவாய்!
தப்படி இன்றித் தமிழ்தருவாய்! - செப்பும்
பெயர்வினை ஆய்ந்திடுவாய்! பீடுதமிழ் காப்பாய்!
எழிலணை செய்வாய் இசைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
29.02.2020.

சிந்துப்பா மேடை - 4


சிந்துப்பா மேடை - 4
  
ஆனந்தக் களிப்பு
  
எடுப்பு
வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்
தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!
            [வெண்மதி]
  
முடிப்பு
1.
பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே
   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!
என்னகக் காதலை மூட்டி - நாளும்
   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!
            [வெண்மதி]
  
2.
அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்
   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!
கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி
   கம்பனின் சொற்களில் போதையைக் கண்டாள்!
            [வெண்மதி]
  
3.
பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்
   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!
பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்
   பித்தேற்றி வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!
            [வெண்மதி]
  
4.
எத்தனை எத்தனை எண்ணம் - வானில்
   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!
தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்
   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!
            [வெண்மதி]
  
5.
மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்
   வாடிக் கிடப்பதும் நன்னெறி தானோ?
ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்
   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?
            [வெண்மதி]
  
இது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா. ஒவ்வொரு அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'பொன்முக' என்பது முதல் 'கூட்டி' என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன்சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா். எட்டாம் சீரும் இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது.
  
இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து ஒவ்வொரு அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காட்டி, கூட்டி, மூட்டி, மீட்டி என இயைபு அமைய வேண்டும்.
  
இப்படிப்பட்ட ஓர் அடி மட்டும் ஐந்தாம் சீரில் எதுகையோ மோனையோ பெற்று எடுப்பு அமையும். இரண்டடிக் கண்ணிகளே முடிப்புகளாக வரும். எத்தனை முடிப்புகளும் எழுதலாம்.
  
தாயுமானவர், வடலுார் வள்ளலார், பாரதியார், பாவேந்தர் முதலியோர் ஆனந்தக் களிப்புப் பாடி இருக்கிறார்கள். கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பில் சிறப்பான இயைபுத் தொடையைக் காணலாம்.
  
விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
29.02.2020.

dimanche 16 février 2020

வெண்பா மேடை - 158 - 159


வெண்பா மேடை - 158

காலோடி நடக்கும் வெண்பா!

வன்பாடல் செய்துறுக! வான்பாணி கண்டிடுக! 
நன்னாடல் நன்கறிக! நல்லுழைப்பு - என்றும்
உயர்வளிக்கும் சீர்வாழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

இவ்வெண்பாவில் உள்ள கால்கள் [ா] நீங்கிய பின்னே வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்நீங்குவதால் 'காலோடி நடக்கும் வெண்பா' எனப் பெயர் வைத்தேன். 

பாணி - காலம்
நாடல் - ஆராய்தல்

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று வன்மைதரும் பாடல் படைத்திடுக. விளைக்கின்ற வானிலையை [பாணி- காலம்] அறிந்திடுக. மண்ணையும், விதைகளையும் ஆராய்ந்து[நாடல்] தெளிந்திடுக.  என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்கமழும் வாழ்த்துகளை  உற்றிடுக.

காலோடிய வெண்பா

வன்படல் செய்துறுக! வன்பணி கண்டிடுக! 
நன்னடல் நன்கறிக! நல்லுழைப்[பு] - என்றும்
உயர்வளிக்கும் சீர்வழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

பாடல் - படல்
பாணி - பணி
நாடல் - நடல்
வாழி - வழி

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று பயிரைக் காக்கும் வன்மைப்படல் படைத்திடுக. வல்ல பணியை அறிந்திடுக. பயிர் நடலை நன்கறிக. என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்வழியை உற்றிடுவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

வெண்பா மேடை - 159

கால் முளைத்து நடக்கும் வெண்பா!

பண்டு கதையறிக! பட்டுக் கலையறிக!
தண்டு வினையறிக சந்தமுடன் - கண்டலுறும்
மண்ணறிக! நன்மன வன்னறிக! என்னுயிரே
பண்ணறிக நன்றே படித்து!

இவ்வெண்பாவில் காலுடைய சொற்கள் இல்லை. சில சொற்களில் கால்[ா] சேர்ந்தபின்னே  வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்சேர்வதால் 'கால் முளைத்து நடக்கும் வெண்பா' எனப் பெயர் கொடுத்தேன்.

பண்டு - நீதி
சந்தம் - அழகு
கண்டல் - தாழை
பண் - நிறை

என்னுயிரே நன்றே படித்து, நீதிநெறிக் கதையறிவாய். பட்டுடைக் கலையறிவாய். அழகடைய தண்டுணவின் செயலறிவாய்.  தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மனத்தின் வன்மை யறிவாய்.  நிறையறிவாய்.

கால் முளைத்த வெண்பா

பாண்டு கதையறிக! பாட்டுக் கலையறிக!
தாண்டு வினையறிக! சாந்தமுடன் - காண்டலுறும்
மாண்ணறிக! நன்மான வான்னறிக! என்னுயிரே
பாண்ணறிக நன்றே படித்து!

பண்டு - பாண்டு
பட்டு - பாட்டு
தண்டு - தாண்டு
சந்தமுடன் - சாந்தமுடன்[அமைதி]
கண்டல்[தாழை] - காண்டல்[வணங்குதல்]
மனம் - மானம்
வன் - வான்
பண்[நிறை] - பாண்[இசைப்பாட்டு]

என்னுயிரே நன்றே படித்துப் பாண்ரங்கனின் கதையறிவாய். பாட்டுக் கலையறிவாய். தாண்டும் பயிற்சி அறிவாய். அமைதியுறத் தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மானவான் அறிவாய்.  இசைப்பாட்டறிவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

samedi 15 février 2020

வெண்பா மேடை - 157   

படம் இதைக் கொண்டிருக்கலாம்: புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை
வெண்பா மேடை - 157
  
கொம்படைந்த வெண்பா
  
கொம்புடைந்த வெண்பாவுக்கு முரணாக அமைவது கொம்படைந்த வெண்பாவாகும்.
'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சாலை' என்ற சொல் கொம்பேற்றால் சோலை யாகும். இவ்வாறு கொம்பில்லாச் சொல்லையும் கொம்படைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்படைந்த வெண்பா' வாகும்.
  
கொம்பிலா்லா சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'தாள்' என்ற சொல் 'கால்' எனும் பெயரில் வந்துள்ளது. 'தோள்' என்ற சொல் 'புயம்' என்று வந்துள்ளது.
  
காலிங்குக் கொம்படைந்து காட்டும் புயமாகும்!
ஆலிங்குக் கொம்படைந்து மாராகும்! - பாலிங்குக்
கட்டுணவும் நல்லரசும் காணும்! பசுவாழும்
கொட்டிலும் பேழையாம் கூறு!
  
கால் - தாள்
தாள் - கொம்படைந்தால் தோள்
  
ஆல் - நஞ்சு
நஞ்சு - நெஞ்சு [மார் - மார்பு]
  
பால் - பாதி
பாதி - பொதி, போதி
பொதி [கட்டுணவு]
போதி [அரசமரம்]
  
கொட்டில் - பட்டி
பட்டி - பெட்டி [பேழை]
  
கொம்படைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.02.2020

vendredi 14 février 2020

வெண்பா மேடை - 156


வெண்பா மேடை - 156

கொம்புடைந்த வெண்பா

'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சோலை' என்ற சொல்லில் கொம்பு உடைந்துவிட்டால் சாலை யாகும். இவ்வாறு கொம்புடைய சொல்லையும் கொம்புடைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்புடைந்த வெண்பா' வாகும்.

கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.

கீழ்காணும் பாடலில் 'சோலை' என்ற சொல் 'பொழில்' எனும் பெயரில் வந்துள்ளது. 'சாலை' என்ற சொல் 'வழி' என்று வந்துள்ளது.

பொழிலுற்ற கொம்புடைந்து போகுவழி காட்டும்!
தொழிலுற்ற கொம்புடைந்து சூட்டும் - விழிச்சாலம்!
பாங்கிதன் கொம்புடைந்து பானைப் பெயர்கூட்டும்!
துாங்கல்தன் கொம்புடைந்து நீறு!

பொழில் - சோலை
சோலை - கொம்புடைந்தால் சாலை [வழி]

தொழில் - வேலை
வேலை - கொம்புடைந்தால் வலை [சாலம்]
விழிச்சாலம் - கண்ணுடைய வலை - துளையுடைய வலை

பாங்கி - தோழி
தோழி - கொம்புடைந்தால் தாழி [பானை]

துாங்கல் - சோம்பல்
சோம்பல் - கொம்புடைந்தால் சாம்பல் [நீறு]

கொம்புடைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.02.2020