mercredi 11 juillet 2018

வெண்பா மேடை - 77


வெண்பா மேடை - 77
  
வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை
  
1.
இயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்
வயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ
அயல்மொழி அகற்றல் அழகு!
  
2.
மரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே!
உரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே!
கரங்களைச் சேர்ப்போம் கணித்து!
  
3.
தொண்டு புரிந்திடுவோம்! தோழமை காத்திடுவோம்!
நண்டு செயலொழிப்போம்! நற்றமிழை நாளும்
மொண்டு குடிப்போம் முந்து!
  
4.
காவிரித் தாயே! கண்ணீர் துடைத்திடவே
தாவி..நீ வந்திடுவாய்! தண்டமிழ்ப் பாவலன்
கூவி அழைத்தேன் கொதித்து!
  
5.
கற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்
உற்ற கலையை உயிராய் உவந்திடவும்
நற்றவ நாதனை நாடு!
  
6.
சாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை
நீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை
ஓதித் திரிவாரை ஓட்டு!
  
7.
கையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்!
மையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ
தையூட்டும் இனிமையைத் தான்?
  
8.
நீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளாச் சதியினைக்
கூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை
ஓட்டி ஒழிப்போம் உடன்!
  
9.
போலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்!
பாலின் நிறமாகப் பளபளப்பார்! அன்னவர்தம்
காலில் விழுவதோ காப்பு?
  
10.
வாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்
துாக்குக் கயிறைச் சுழற்றுகிறார்! தீயவர்கள்
ஆக்கும் அரசை அகற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.
    
விரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
குறிப்பு
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.
  
தளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.07.2018

mardi 10 juillet 2018

கோனேரிக் கூத்தா!


கோனேரிக் கூத்தா!
வானேறி ஏன் சென்றாய்?

  
கோத்த மணியாகக் கோலக் கவிதைகளை
யாத்த இசைக்கவியே எங்குற்றாய்? - கூத்தின்
இருப்பாய் இருந்தனையே! உன்பிரிவைக் கேட்டு
நெருப்பாய்க் கொதிக்கிறது நெஞ்சு!
  
கோனேரிக் கூத்தா! கொடுமுலகின் துன்பத்தால்
வானேறிச் சென்றாயோ? வாடுகிறேன்! - ஊனேறி
என்றன் உயிரேறி நீ..இருந்தாய்! சொல்லாமல்
இன்றேன் பிரிந்தாய் இயம்பு?
  
ஓங்கி ஒலித்த குரலெங்கே? ஒண்டமிழைத்
தாங்கித் தழைத்த தலையெங்கே? - வீங்கிப்
புகழ்கொண்ட தோளெங்கே? பொங்கியழும் எம்மூர்
அகங்கொண்ட அன்பால் அதிர்ந்து!
  
ஒப்பனை வண்ணங்கள் உன்நினைவால் இங்குருகும்!
இப்பனை மார்பனை ஏன்பிரிந்தோம்? - அப்பப்பா
கூத்திடம் குன்றும்!நம் கோனேரி பாட்டின்றிப்
பாத்திரம் காணும் பழி!
  
பேச நினைத்தேன் பெருங்கவியே உன்னோடு!
பாசக் குயிலே! பறந்தனையே! - மோசத்
துயரில் முழுகுகிறேன்! தோழா!உன் பேரை
உயிரும் முனங்கும் உடைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.07.2018

காலை வணக்கம்!


இனிய காலை வணக்கம்!
  
திருவள்ளுவர் ஆண்டு 2049 செவ்வாய்க் கிழமை, ஆனி 26
10.07.2018
  
சந்தத் தமிழ்மொழியைத் தாங்கு தலைமீது!
சொந்த இனமோங்கத் தொண்டாற்று! - சந்தனமாய்
எங்கும் மணம்வீசு! ஈடில் குறணெறியைச்
சங்கப் புகழேந்தச் சாற்று!
  
சாதிப் பெயர்நீக்கு! சார்ந்த..மதப் புண்போக்கு!
நீதி நெறிமணக்க நெஞ்சாக்கு! - சோதியென
எல்லாம் எனவூக்கு! நம்மைப் பிரித்தாளும்
பொல்லாப் பகையைப் பொசுக்கு!
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

lundi 9 juillet 2018

வாடுகிறேன்!


வாடுகிறேன்!
  
கோடி முத்தம் கொடுத்தவளே!
   கோபம் ஏனோ உனக்கின்று?
பாடிப் பாடி உன்னழகைப்
   பருகும் புலவன் வாடுகிறேன்!
மாடி மீது நாம்கண்ட
   மகிழ்வை எண்ணி மனமேங்கும்!
ஆடிக் களித்த நாள்யாவும்
   அன்பே கண்முன் தெரியுதடி!
  
செல்லக் கிளியே! செங்கனியே!
   சீற்றம் ஏனோ உனக்கின்று?
சொல்லச் சொல்லச் சுவையேறிக்
   சொக்கும் புலவன் வாடுகிறேன்!
வெல்லம் கூடக் கசக்குதடி
   விழிகள் பேசும் கவியின்றி!
இல்லம் இருளில் முழுகுவதோ?
   இனிய நிலவே வந்திடுவாய்!
  
கொஞ்சிப் பேசும் பூங்குயிலே!
   கொத்தி உயிரைக் கிழிக்காதே!
நெஞ்சிக் குள்ளே ஆசையலை
   விஞ்சிப் பாயும் தடுக்காதே!
நஞ்சிக் கிழியும் துணியாக
   நாள்கள் நகரும் நீ..யின்றி!
வஞ்சிக் கொடியே வந்திடுவாய்!
   வளத்தை மீண்டும் தந்திடுவாய்!
  
வீசும் காற்றைத் தடுப்பார்..யார்?
   விரிவான் கதிரை மறைப்பார்..யார்?
பாச வுணர்வைச் சிறையிட்டுப்
   பதுக்கி வைக்க முடிந்திடுமோ?
பேசும் திருவாய் வாடுதடி!
   பெண்ணே உன்னைத் தேடுதடி!
வாச மலரே! வானமுதே!
   மழைபோல் இன்பம் பொழிவாயே!
  
சிங்கக் குட்டி என்பாயே!
   சிரித்து மனத்தைக் கொல்வாயே!
தங்கக் கட்டி என்பாயே!
   தமிழால் என்னை வெல்வாயே!
சங்கப் புலவன் என்பாயே!
   சந்தம் மீட்டச் சொல்வாயே!
சுங்கச் சிதறும் கற்கள்போல்
   துாய நெஞ்சை உடைப்பதுவோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.07.2018

வெண்டாழிசை - 5


வெண்பா மேடை - 76
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வந்த வெண்டாழிசை
  
மலர்விழியே!
  
1.
ஏங்கும் நினைவுகளை ஏவும் மலர்விழியே!
ஓங்கும் கனவுகளை ஊட்டுகிறாய்! வாடுகிறேன்
வீங்கும் ஆசை விளைந்து!
  
2.
வண்ணத் தமிழமுதை வழங்கும் மலர்விழியே!
எண்ணம் இனிக்க எழுதுகிறாய்! வாடுகிறேன்
விண்ணிகர் ஆசை விளைந்து!
  
3.
என்மேல் அம்புகளை ஏவும் மலர்விழியே!
பொன்மேல் பதித்த புதுமணியே! வாடுகிறேன்
உன்மேல் ஆசை விளைந்து!
  
4.
வேல்கொண்டு தாக்கும் விந்தை மலர்விழியே!
சூல்கொண்டு பாக்கள் சுரக்குதடி! வாடுகிறேன்
மேல்கொண்டு ஆசை விளைந்து!
  
5.
கூர்கொண்டு தாக்கும் கோல மலர்விழியே!
ஏர்கொண்டு என்னை உழுகின்றாய்! வாடுகிறேன்
வேர்கொண்டு ஆசை விளைந்து!
  
6.
வாள்கொண்டு தாக்கும் வல்ல மலர்விழியே!
நீள்கொண்டு தாக்கும் நிறையழகே! வாடுகிறேன்
வேள்கொண்ட ஆசை விளைந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் மூன்றுக்கு மேல் வெண்டாழிசை அமையும்.
  
விரும்பிய பொருளில் ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.07.2018