vendredi 21 novembre 2025

ஓம் ஓம் ஓம்

 


ஓம்.. ஓம்.. ஓம்

 

கலமுடைந்[து] ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்

பலமுடைந்து சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து

சென்றதுபோல் பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

என்றதுமே நீங்கும் இடர்!

 

காக்கும் வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்

தாக்கும்! துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற

கோது..மன நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

ஓதுமனம் காணும் ஒளி! 

 

பொய்யர் உறவால் புழுங்கி மனநொந்தேன்!

மெய்யர் எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி

வாழ்ந்த நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..

ஆழ்ந்த ஒளியால் அறி!

 

திருடும் தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்

உருளும்! உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்

முற்றும் ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..

பற்றும் பரம பதம்!

 

அடியாள் பலர்கொண்டே ஆடிய ஆட்டம்

இடியாய் விழும்நம் மிடமே! - படிபடியாய்

வந்த வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..

தந்த ஒலியே தவம்!

 

பட்ட அடியென்ன? நட்ட வினையென்ன?

சுட்ட நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்

ஆணைத் திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..

ஆனை முகனே அகற்று!

 

வறுமை வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்

கருமை மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை

உளங்கொண்டு பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..

வளங்கொண்டு ஞானம் வழங்கு!

 

பாட்டரசா வென்று பழித்திடுவார்! வீண்வெற்று

வேட்டரசா வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!

ஏட்டரசா! உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..

வீட்டரசா தீராய் வினை!

 

நாடி நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!

கூடிக் குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே

நிற்கின்றேன்! அத்தனையும்  நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..

கற்கின்றேன் உள்ளம் கனிந்து!

 

ஆசையலை சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்

வேசையலை சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்

தங்கும் அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..

தொங்குங் கரங்கொண்டு துாக்கு!

 

எங்குக் குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?

இங்குச் சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு

தடையின்றித் தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..

இடையின்றி வேண்டும் எழுத்து!

 

அம்மைத் தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!

வெம்மை வினைகளை வேரறுப்பாய்! - மும்மை

மலம்போக்கிக் காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..

நலந்தேக்கி ஞானம் நவில்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

27.08.2025

Aucun commentaire:

Enregistrer un commentaire