dimanche 9 janvier 2022

இரட்டைச் சடையழகி

 


இரட்டைச் சடையழகி

 

இரட்டைச் சடைகள்

இளமையின் தோரணம்!

 

பின்னல் சடைகள்

எனை வாட்டும்

இன்னல் படைகள்!

 

அழகின் விருதுகள்!

அவள்

அறிவின் விழுதுகள்!

 

முகத்தேர் வடமோ?

எனைக் கட்டும் சரமோ?

 

முடியா?

காதல் வழியா?

கற்பனைப் படியா?

 

சடையா?

அடிக்கும் சாட்டையா?

தொங்கும் அணியா?

தொற்றும் பிணியா?

 

மந்திரக் கோலா?

மாய வாலா?

 

பின்னல் சடைபோட்டு

அன்ன நடைபோட்டுக்

கண்ணால்

என்ன எடைபோட்டுச்

செல்கிறாள் - உயிரைக்

கொல்கிறாள்!

 

அரட்டைப் பருவம் - என்னை

அடக்கியது - அவள்

இரட்டைச் சடை உருவம்!

 

சடையின் முனையைக்

கட்டி வைத்தாள் - கொஞ்சம்

வெட்டி வைத்தாள்! - அழகைக்

கொட்டி வைத்தாள் - அங்கு

என் விழிகளை

ஒட்டி வைத்தாள்!  

 

வண்ண உடையைப்

பாடவா?

சின்ன இடையைப்

பாடவா?

அன்ன நடையைப்
பாடவா?

கன்னல் தொடையைப்

பாடவா?

பின்னல் சடையைப்

பாடவா?

 

கோடி கவியழகைக்

கொண்டவளே!

பாடிச் சடையழகை

வைத்த கவி!

வாழ்த்தும் புவி!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

09.01.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire