mercredi 31 mars 2021

வழிநடைச்சிந்து

 


சிந்துப்பா மேடை - 17

 

வழிநடைச்சிந்து

 

போக்குவரத்து ஊர்திகள் இல்லாத பண்டைக்காலத்தில்  மக்கள் பெரும்பாலும் நடந்தே பயணம் செய்தனர். பயணக் களைப்புத் தெரிய வண்ணம் பாடிக் கொண்டு வழி நடந்தனர். அவ்வகைப் பாடல்கள் வழிநடைச்சிந்து  எனப்பெயர் பெறும்.

 

சென்றடையும் இடத்தின் சிறப்புகளையும், காணச்சொல்லும் இறைவன், இறைவி, தலைவன், தலைவி மேன்மைகளையும், செல்லும் வழியிடையில் உள்ள அழகு காட்சிகளையும் தன்னுடன் நடந்து வரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவிக்கும் வண்ணம் இப்பாடல் அமையும். சபரிமலை செல்பவர்கள் சரணங்களைச் சொல்லிக்கொண்டு செல்லும் செயலுக்கு ஒப்பாகக் கொள்ளலாம்.

 

வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளையுடையன வாகவும், பலவகை  நடைகளையுடையனவாகவும்  பாடப்பட்டுள்ளன.

 

வழிநடைச்சிந்தின் இலக்கணம்

 

வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய

ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்திப்

பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்

அடியும் நடையும் அமைவுறப் பெற்று

வழிநடைச் சிந்தென வகுக்ககப் படுமே

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 48 ஆம் நுாற்பா]

 

வழிநடைச்சிந்து - 1

 

முட்டுவழிச் சாலையினைத் தாண்டி -  வாழ்வில்
மோதுவினை நீங்கிடவே முன்னவனை வேண்டி

எட்டுவழிச் சந்தையிலே தோண்டி - வாங்கி

ஏற்றிடுவாய் தலைமீதே என்னழகைத் தீண்டி

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

அடி : ஆதிதாளம் [ஓரடிக்கு எட்டுச் சீர்கள்]

சீர் : நான்மை நடை [ஒரு சீரில் நான்கு சிந்தசைகள்,  ஓரடியில் மொத்தம் 4x8=32 அசைகள்]

 

மேலுள்ள கண்ணியில் 'முட்டுவழி ' முதல் 'வேண்டி' வரை ஓரடியாகும். 'எட்டுவழி'  முதல் 'தீண்டி' வரை மற்றோர் அடியாகும். முட்டு - எட்டு என ஓரெதுகையால் இருவடிகளும் இணைந்து ஒரு கண்ணியானது.

ஒவ்வோர் அடியிலும் 1, 5,7ஆம் சீர்களில் மோனை அமையும்.

[முட்டு, மோது, முன்னவனே] [எட்டு, ஏற்றிடுவாய், என்னழகை]

 

ஒவ்வோர் அரையடியிலும் இயைபு வந்துள்ளது [தாண்டி, வேண்டி, தோண்டி, தீண்டி,]

 

நான்கு அரையடிகளிலும் 1, 2 ஆம் சீர்கள் ஒவ்வொன்றும் நான்கு சிந்தசையைப் பெறும். 3, 4, சீர்கள் ஒவ்வொன்றும் இரண்டு சிந்தசையைப் பெறும்

 

தனிச்சொல் ஈரசையாக வரும்.  தனிச்சொல் முன் உள்ள சீர் அவ்வரையடிக்குத் தேவையான அசைகளை நீண்டொலிக்கும். அடியின் இறுதி தேவையான அசைகளை நீண்டொலிக்கும்.

 

அசை பிரித்தல்

 

முட்/டு/வ/ழிச்  சா/லை/யி/னைத்  தாண்/டி/o/o  -  o/o/வாழ்/வில்
மோ/து/வி/னை  நீங்/கி/ட/வே  முன்/ன/வ/னை  வேண்/டி/o/o

எட்/டு/வ/ழிச்  சந்/தை/யி/லே  தோண்/டி/o/o -  o/o/வாங்/கி

ஏற்/றி/டு/வாய்  த/லை/மீ/தே  என்/ன/ழ/கைத்  தீண்/டி/o/o

 

மேலும் விளக்கம் பெறக் காணொளியைக் காணவும்
Paavalar Payilarangam - [you Tube]

 

விரும்பிய பொருளில் ,இவ்வகை வழிநடைச்சிந்து  ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

31.03.2021.

 

Aucun commentaire:

Enregistrer un commentaire