dimanche 29 octobre 2017

செம்மொழியே!

செம்மொழியே!
  
சந்தமொளிர் தண்டமிழே! தங்கக் கவிபாடச்
சிந்தையொளிர் சீர்களைச் செப்பு!
  
வண்ணமொளிர் வண்டமிழே! வற்றாக் கவியூற்றை
எண்ணமொளிர் வண்ணம் இடு!
  
சீரொளிரும் செந்தமிழே! செப்பும் கவிதைகளைப்
பேரொளிரும் வண்ணம் பெருக்கு!
  
அன்பொளிரும் அந்தமிழே! ஆரமுதே! ஆருயிரே!
இன்பொளிரும் மாண்பை இயம்பு!
  
பண்பொளிரும் பைந்தமிழே! பாட்டரசன் என்னாவில்
மண்ணொளிரும் மாட்சி வழங்கு!
  
பொன்னொளிரும் பூந்தமிழே! நெஞ்சுள் குறள்நெறிகள்
நின்றொளிரும் வண்ணம் நிறுவு!
  
சிறப்பொளிரும் செம்மொழியே! திக்கெட்டும் உன்பேர்
பறந்தொளிரும் என்பேன் பணிந்து!
  
பூவொளிரும் பொற்றமிழே! பொங்கும் புலமையினால்
பாவொளிரும் நன்றே பழுத்து!
  
பண்ணொளிரும் எங்கள் பசுந்தமிழே! உன்னழகால்
கண்ணொளிரும் காதல் கமழ்ந்து!
  
பாரொளிரும் மேன்மை படர்தமிழே! எந்நாளும்
தாரொளிரும் வாழ்வினைத் தா!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.10.2017

1 commentaire:

  1. நீங்கள் மிகுந்த தமிழறிவு நிரம்பியவர். உங்கள் செய்யுள்கள் மிக நன்றாக இருக்கு. படிக்கப் படிக்க இன்பமூட்டும் தமிழ். வாழ்க பல்லாண்டு. (எனக்கு ரசிக்கத்தான் தெரியும்).

    சிறப்பொளிரும் செம்மொழியே! திக்கெட்டும் உன்பேர்
    பறந்தொளிரும் என்பேன் பணிந்து!

    இதில் மட்டும், சிறப் என்று வரும்போது பறப் என்றுதான் வரணும்னு நினைக்கறேன். அப்படி வரமுடியாதாகையால்,

    சிறந்தொளிரும் செம்மொழியே திக்கெட்டும் உன்பேர்
    பறந்தொளிரும் என்பேன் பணிந்து

    மிக apt ஆக இருக்குமா ஐயா? தவறாக எண்ணாதீர்கள்.

    RépondreSupprimer