dimanche 29 octobre 2017

திருமுருகா!

திருமுருகா!
  
வண்ணமயில் மீதமரும் வள்ளலே! என்னுடைய
எண்ணமயில் மீதமரும் இன்று!
  
வள்ளியுடன் வந்து வளரும் குழந்தையெனக்[கு]
அள்ளி அளிப்பாய் அமுது!
  
ஆறுமுகங் கொண்ட அணியழகா! என்வாழ்வில்
ஏறுமுகம் யாவும் இடு!
  
வெற்றிவேல் வேந்தனே! வேகும் வினைநீங்கப்
பற்றினேன் உன்றன் பதம்!
  
சேவற் கொடியுடையாய்! சிந்தை யுனைக்காண
ஆவற் கொளுமே அழுது!
  
பழனி மலைவாழும் பாலா! தமிழாம்
கழனி உழ..அருள் காட்டு!
  
ஓளவைத் தமிழுண்ட அன்புத் திருமுருகா!
கௌவும் கருத்தைக் கொடு!
  
செந்துார் வடிவழகா! சீர்மேவி நான்வாழ
வந்துார் அடியேன் மனத்து!
  
சோலை நகர்வாழும் துாயவனே! உன்னுடைய
காலை அடையும்நாள் காட்டு!
  
குன்றின்மேல் வாழும் குமரா!என் நெஞ்சமெனும்
மன்றின்மேல் வாழ்ந்திட வா!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
29.10.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire