lundi 30 octobre 2017

முத்தமிழே!


முத்தமிழே!
  
ஓங்குபுகழ் ஒண்டமிழே! ஓதும் கவிசிறக்க
வீங்குபுகழ் ஆற்றலை வீசு!
  
அன்னைத் தமிழே! அருளமுதே! ஆருயிரே!
என்னை அளித்தேன்! இயக்கு!
  
செம்மொழித் தாயே! செழுந்தமிழே! உன்னீடாய்
எம்மொழியும் இல்லை எழில்!
  
தித்திக்கும் செந்தமிழே! தென்மொழியே! தேனுாற்றே!
எத்திக்கும் இல்லையுனக் கீடு!
  
முத்தமிழே! முக்கனியே! முல்லை மலர்க்காடே!
புத்தமிழ்தே! தாராய் புகழ்!
  
கன்னல் தமிழே! கவிஞன் வணங்குகிறேன்!
இன்னல் அனைத்தும் இறக்கு!
  
முன்னைத் தமிழே! முதன்மொழியே! என்பாட்டில்
பொன்னை மணியைப் புகுத்து!
  
சங்கத் தமிழே! தனித்தபுகழ்ச் செம்மொழியே!
பொங்கல் சுவையைப் பொழி!
  
தாயே! தமிழே! தழைத்தசுவைப் பாக்களை
வாயே இனிக்க வழங்கு!
  
இன்மொழியே! செந்தமிழே! என்றன் எழுத்தெல்லாம்
பொன்மொழியே ஆகப் புகல்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் - 30.10.2017
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
30.10.2017

2 commentaires: