dimanche 28 juin 2015

வாணிதாசன் - பகுதி 2



வாணிதாசன் பாடல்களில் 
(புரட்சி - எழுச்சி - மலர்ச்சி - மகிழ்ச்சி)

தலைமைக் கவிதை

வாணிதாசன் பாடல்களில் புரட்சி

அடிமையுறும் நாட்டின்கண் புரட்சி தோன்றும்
     அறிவோங்கும் அறிஞர்கண் புரட்சி ஓங்கும்!
குடிமையுறும் துன்பத்தைப் பார்த்துப் பார்த்துக்
     குமுறுகின்ற புலவன்கண் புரட்சி ஆடும்!
மிடிமையுறும் வாழ்வுதனை மீட்க வேண்டி
     வினையாற்றும் வீரன்கண் புரட்சி துள்ளும்!
விடிவைதரும் கவியேறு வாணி தாசர்
     விளைத்திட்ட நூல்களிலே புரட்சி மின்னும்!

சீர்திருத்தம் புரட்சியினால் செம்மை சேரும்!
     சிந்தனையின் புரட்சியினால் மடமை சாகும்!
பார்திருத்தம் பெற்றிடவே எதிர்த்து நின்று
     படைநடத்தும் புரட்சியினால் பசுமை பூக்கும்!
பேர்திருத்தம் வேண்டுமெனக் கொள்கை பூண்டு
     பெயர்திருத்தப் புரட்சியினால் தமிழே ஆளும்!
ஊர்திருத்தம் அடைந்திடவே வாணி தாசர்
     உரைத்ததமிழ் கவிநடையின் புரட்சி என்பேன்!

வாணிதாசன் பாடல்களில் எழுச்சி

அறிவுக்குள் எழவேண்டும் எழுச்சி! நம்மின்
     ஆன்மாவும் பெறவேண்டும் எழுச்சி! உண்மைச்
செறிவுக்குத் தடைபோட்டே அடிமை யாக்கும்
     செயலொழிக்க வரவேண்டும எழுச்சி! ஓங்கும்
அறத்திற்குத் திரைபோடும் சாதிப் பேயை
     அழித்திடவே உறவேண்டும் எழுச்சி! வாழ்வின்
திறத்திற்கும் செயலுக்கும் வாணி தாசர்
     எழுதிவைத்த எழுத்தெல்லாம் எழுச்சி யென்பேன்!

விடுதலைக்குப் பாடுவதும் எழுச்சி! பெண்ணின்
     விலங்குடைத்தே உயர்த்துவதும் எழுச்சி! பாவப்
படுகொலைக்கு நிகராக வினைகள் ஆற்றும்
     பதவியரை அகற்றுவதும் எழுச்சி! என்றும்
கெடுதலைக்கு வழிகாட்டும் பழமை மாய்க்கக்
     கிளர்ந்தோங்கும் போராட்டம் எழுச்சி! வன்மை
மடு..கரைக்கு வேண்டும்!நாம் தீட்டும் வண்ண
     மதுக்கவிக்கு வேண்டும்நல் எழுச்சி யென்பேன்!

வாணிதாசன் பாடல்களில் மலர்ச்சி

புல்வெளியும் பூங்கொடியும் மலர்ச்சி காட்டும்!
     புன்னகையும் புகழ்அணியும் மலர்ச்சி ஊட்டும்!
நல்லொளியும் நன்னடையும் நன்றே பெற்றால்
     நம்முயிரும் ஞானத்தின் மலர்ச்சி சூட்டும்!
சொல்லொளிரச் சுவையொளிரத் தீட்டும் பாடல்
     தொன்மைமிகு செந்தமிழின் மலர்ச்சி மீட்டும்!
மல்லொளிர மாண்பொளிர வாணி தாசர்
     வடித்திட்ட வண்டமிழோ மலர்ச்சி காடு!

பருவத்தின் மலர்ச்சியிலே அழகு கூடும்!
     படித்தோங்கும் மலர்ச்சியிலே அறிவு சேரும்!
உருவத்தின் வளர்ச்சியைப்போல் உள்ளத் துள்ளே
     உண்டாகும் வளர்ச்சியிலே வாழ்க்கை ஓங்கும்!
அருவத்தின் நிலையுணர்ந்து புத்தன் சொன்ன
     அறிநெறியின் மலர்ச்சியிலே அகிலம் வாழும்!
கருவத்தின் துகளின்றி வாணி தாசர்
     கவியாவும் தமிழ்காணும் மலர்ச்சி யாகும்!

வாணிதாசன் பாடல்களில் மகிழ்ச்சி!

ஒழுக்கமுடன் வாழுவதே மகிழ்ச்சி! என்றும்
     ஒற்றுமையாய்த் திகழுவதே மகிழ்ச்சி! வேண்டித்
தொழுவதுடன் நற்பணிகள் நன்றே செய்து
     நலிந்தோரை உயர்த்துவதே மகிழ்ச்சி! வன்மை
அழுத்தமுடன் இருக்காமல் அன்பைச் சூடி
     ஆனந்தம் பாடுவதே மகிழ்ச்சி! நன்றே
பழுத்தவுடன் கமழ்கின்ற கனிகள் போன்று
     பசுந்தமிழில் பா..படைத்தல் மகிழ்ச்சி யென்பேன்!

மயிலாட்டம் மகிழ்ச்சியாகும்! இனிமை கொஞ்சும்
     மழலைமொழி மகிழ்ச்சியாகும்! கூவும் சின்னக்
குயிற்கூட்டம் மகிழ்ச்சியாகும்! கண்ணன் கொண்ட
     குழலோசை மகிழ்ச்சியாகும்! ஓங்கும் வண்ணம்
உயிர்கூட்டம் ஊட்டுகின்ற குறளின் பாதை
     ஒப்பில்லா மகிழ்ச்சியாகும்! உழவன் காக்கும்
பயிர்காட்டும் பசுமையென வாணி தாசர்
     பாடிவைத்த நூல்யாவும் மகிழ்ச்சி யாகும்!

தொடரும்
 

12 commentaires:

  1. வணக்கம் !

    செந்தமிழால் பொழிந்த நற் சீர் கண்டு உள்ளம் குளிர்ந்தது ஐயா !
    அருமை! வாழ்த்துக்கள் .

    RépondreSupprimer
  2. வாணிதாசன் அவர்களின் கவிதைகளை முழுமையாக படிக்க தூண்டிவிட்டீர்கள் ஐயா!

    RépondreSupprimer
  3. ஒவ்வொரு வரியும் சிறப்பு ஐயா... வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  4. அருமை! தொடர்கின்றேன்! நன்றி!

    RépondreSupprimer
  5. பன்முகநோக்கில் வாணிதாசன் கவிதைகளை ரசித்தேன். நன்றி.

    RépondreSupprimer
  6. அருமை ஐயா....
    தொடருங்கள் ஐயா...

    RépondreSupprimer
  7. Réponses

    1. வணக்கம்!

      சீர்வாணி தாசனார் செப்பிய நற்பாக்கள்
      கூர்வாளின் நுண்மையினைக் கொண்டனவாம்! - பார்போற்றப்
      பாடிக் களிப்போம்! பசுந்தமிழ்த் தேனாற்றில்
      கூடிக் குளிப்போம் குளிர்ந்து!

      Supprimer
    2. புதுவைக்குச் சீர்சேர்த்த பூந்தமிழ் வாணர்!
      பொதுமைக்குத் தோள்கொடுத்தார் பொங்கி! - புதுமைக்குப்
      போற்றிப் பொழிலமைத்தார் நம்வாணி தாசரைச்
      சாற்றித் தொழுவதே சால்பு!

      Supprimer
  8. அருமையான வாணிதாசன் கவிதை ரசித்தேன் ஐயா!

    RépondreSupprimer
  9. புரட்சி எழுச்சி புதுமையினை பாட்டில்
    தரமாய்த் கொடுத்தவாணி தாசர் -மரபினில்
    வாழ்த்தும் கவிமழை வள்ளலைக் கண்டிரோ
    வாழ்த்தில் வளமே வழங்கு.

    RépondreSupprimer
  10. ஐயா வணக்கம்.

    பொன்னுரைக்கும் கல்லேபோல் பொன்றாப் புகழுரைத்து
    மின்னல் ஒளிக்கவிதை மேதினியில் - நின்றெழவே
    கண்டார் விழுகின்றார்! கேட்டார் புகழ்கின்றார்!
    வண்டார் மலர்ப்பா வனப்பு.

    பாவரங்கக் கவிதை அனைத்தும் அருமை

    நன்றி

    RépondreSupprimer