mercredi 24 décembre 2014

கர்த்தர் வெண்பா மாலை



கர்த்தர் வெண்பா மாலை

1.
கன்னி மரிபெற்ற கற்பகமே! காதலினால்
பின்னித் தொழுதேன் பிதாமகனே! - மின்னிவரும்
விண்மீன் வழிகாட்டும் விந்தைச் செயற்படித்துக்
கண்ணீர் கசியும் கமழ்ந்து!

2.
விண்ணின் ஒளியே! விரிகடலே! மென்காற்றே!
பண்ணின் சுவையே! படர்தீயே! - புண்ணியனே!
கண்ணின் மணிபோல் கருத்துள் கலந்தெனக்கு
மண்ணின் மகிழ்வை வழங்கு!

3.
நற்கருணை நாதனின் நன்மலர்த் தாள்பிடித்தால்
பொற்கருணை பூத்துப் புவியோங்கும்! - சொற்கருணை
மேவிச் சுடர்ந்தோங்கும்! மேய்ப்பவனின் சீர்பாடிச்
கூவித் தொழுவோம் குளிர்ந்து!

4.
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்தான்! இங்குள்ள
நாட்டு நரிகளை ஓட்டிடவே! - காட்டுமலர்
போல்மணக்கும் புண்ணியன்நற் போதனையை நெஞ்சத்துள்
பால்மணக்கும் வண்ணம் படி!

5.
அன்பென்னும் ஆரமுதை அள்ளி அளித்துலகை
இன்புறச் செய்த இறைத்துாதன்! - என்றென்றும்
வான மழையாகி வண்ண வளமாகி
ஞானம் அளிப்பான் நமக்கு!

6.
தொல்லை அகன்றோடத் துாய மனமேவ
எல்லை இலாத எழில்காண - வல்லமைசேர்
சத்திய தேவனின் தங்கத் திருமொழியைப்
புத்தியில் நித்தம் பொறி!

7.
சிலுவைச் சுமைகண்டு சிந்திய செங்குருதி
உலகைப் புரட்டி உலுக்கும்! - பலகையென
ஆணி அடித்தார்! அருட்பூ விளைகின்ற
காணி அழித்தார் கருத்து!

8.
கல்லடி பட்டதும் கள்ளர் பலர்கூடி
முள்ளணி இட்டதும் முன்கண்டாய்! - சொல்லணி
கட்டி அணிவித்தேன் கா்த்தரே! என்வினையை
வெட்டி எடுப்பாய் விரைந்து!

9.
தாலாட்டுப் பாடுகிறேன் தங்கமே! தண்டமிழின்
பாலுாட்டிப் பாடுகிறேன் பார்த்தருள்வாய்! - வாலாட்டிப்
பொல்லா வினைதுள்ளும் பொய்யன் எனக்குள்ளே
எல்லாம் எரிப்பாய் எடுத்து!

10.
தேவன் பிறந்த திருநாளின் வாழ்த்தளித்தேன்!
மேவும் நலமோங்கி மின்னுகவே! - துாவும்
பனியெனத் துாய்மை படருகவே! கன்னல்
கனியெனத் தந்தேன் கவி!

25.12.2014

29 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    கர்த்தருக்கு வெண்பா கனிவோடு தந்தீரே!
    அற்புதம் என்றே அகமகிழ்ந்தேன்! தேவர்!
    கருணை மழைபொழியக் காண மனதின்
    இருள்நீங்கிச் சேரும் எழில்!

    கர்த்தரைப் போற்றிப் பாடிய அருமையான வெண்பாக்கள்!
    மிகச் சிறப்பு!

    அனைவருக்கும் இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கா்த்தரின் வெண்பா கருணை மழைபொழியும்!
      நர்த்தனம் ஆடி நலம்பெறுவீர்! - தா்மத்தின்
      ஆட்சி நடக்கும்! அருந்தேவன் நல்லருளால்
      மாட்சி சிறக்கும் மணந்து!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    வெண்பாக்களை இரசித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம7
    இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பா வனத்தில் விளையாடி இன்புறவே
      நண்பா வருவாய் நடந்து!

      Supprimer
  3. தேவன் பிறந்த திருநாளின் அனைவரையும் வாழ்த்துவோம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!


      தேவாரம் செய்தளித்தேன்! தேவன் அருள்வேண்டிப்
      பாவாரம் செய்தளித்தேன் பாடு!

      Supprimer
  4. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேவன் பிறந்ததைத் தென்தமிழில் தந்துள்ளேன்!
      காவல் புாிவீா் கனிந்து!

      Supprimer
  5. வல்லகவி யேவார்த்தீர் எண்ணற் றகவிகள்
    கல்லும் உருகிட கண்ணீரும் சிந்திடவே
    பாவலரே பாலனையே பாடிப்பு கழ்ந்தீரே
    காவல் இருப்பார் உமக்கு !

    கர்த்தரின் அன்பைக் கறந்தீர் நிறைவாக
    வர்த்தகம் இல்லை இது !

    அருமை அருமை !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்லகவி வாணன் வடித்த கவிபடித்து
      நல்லகவி தந்தாய் நறுந்தேனில்! - சொல்லினிக்கும்
      தோழி இனியா! தொடர்ந்து தமிழ்பாடி
      வாழி வளமுடன் வாழ்வு!

      Supprimer
  6. அதி அற்புத வெண்பா மாலை
    சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
    இனிய் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிறப்புப் பதிவென்றும் தேவாதி தேவன்
      பிறப்புப் பதிவென்றும் பேணு!

      Supprimer
  7. அருமையான வெண்பாப் படையல் அய்யா!

    “வெள்ளம் மலையுருட்டி வீழும் அருவியென
    உள்ளத்துச் சேரும் உயிர்க்கவிதை – அள்ளித்தான்
    எப்போது முண்டாலும் என்தாகம் தீராதே
    தப்பேது முண்டோ? திருத்து !“

    த ம 12

    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தப்பேதும் இன்றித் தமிழன்னை காத்திடுவாள்!
      எப்போதும் இன்பம் இசைத்திடுவாள்! - முப்பொழுதும்
      ஆய்ந்தே அளிக்கும் அரும்பாக்கள், வெள்ளமெனப்
      பாய்ந்தே படைக்கும் பயன்!

      Supprimer
  8. அருமை ஐயா...
    இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய கிருத்துவின் வாழ்த்தினை ஏந்திக்
      கனிய அளித்தேன் கவி!

      Supprimer

  9. முத்துச் சரமென்பேன்! முல்லை வனமென்பேன்!
    கொத்துக் கனியென்பேன்! கூா்ந்துள்ளம் - கா்த்தரின்
    சீருரைக்கும் வெண்பாவை! செந்தமிழின் மாண்புணரப்
    பாருரைக்கும் வெண்பாவைப் பார்த்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கர்த்தரைப் போற்றும் கவிவெண்பா, தேனுாறும்
      சர்க்கரைப் பொங்கலைத் தந்ததுவே! - நா்த்தனம்
      ஆடி மகிழ்ந்தேன்! அருளரசன் நற்புகழைப்
      பாடி மகிழ்ந்தேன் பணிந்து!

      Supprimer
  10. வணக்கம் !
    அற்புதமான வெண்பா மாலை !அகம் குளிரப் படித்து மகிழ்ந்தேன் .
    வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொற்புடன் வாழ்வு பொலிந்து புகழ்பெற
      நற்கருணை நாதனை நாடு!

      Supprimer
  11. கள்ளமிலா நெஞ்சத்தால் காத்திட்ட கர்த்தரையே
    உள்ளத்தால் வாழ்த்தும் உயிர்ப்பாக்கள் - அள்ளி
    அருந்திட்டால் ஆன்மா அழகாகும்! அன்பைப்
    பெருக்கிப் பிறப்பெய்தும் பேறு !


    அழகான வெண்பாக்கள் கவிஞர் அண்ணா அருமை இனிமை

    இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்களும் .ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன் !

    த ம
    14

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகாகச் சீராளன் ஆக்கிய வெண்பா
      பழமாக இன்பம் படைக்கும்! - பொழுதெல்லாம்
      பாடிச் சுவைப்பேன்! பயனொளிா் பாட்டுக்குக்
      கோடி கொடுப்பேன் குவித்து!

      Supprimer
  12. தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    RépondreSupprimer
  13. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  14. பத்தும் முத்து முத்தான வெண்பாக்கள் .ஏசுபிரானைப் போற்றும் இனிய தமிழ்ப்பாக்கள் அனைத்தும் சுவை

    RépondreSupprimer