ஈடும் உண்டோ?
காட்டுக்குள் மலர்ந்தாடும் மலர்கள் தம்மைக்
கண்ணுக்குள் கமழ்ந்தாட வைத்தாள்! தேனீக்
கூட்டுக்குள் நிறைந்துள்ள மதுவை அள்ளிக்
குரலுக்குள் வழிந்தோடத் தந்தாள்! முன்னோர்
பாட்டுக்குள் ஒளிர்கின்ற அணிகள் யாவும்
படைப்புக்குள் வந்தாடச் செய்தாள்! நெஞ்சக்
வீட்டுக்குள் விளக்கேற்றி வாழ்வைக் காக்கும்
வியன்தமிழாள்! என்னுயிராள்! ஈடும் உண்டோ?
ஏட்டுக்குள் என்னிதயம் ஆழும் காலம்
இனிப்புக்குள் தள்ளிடுவாள்! பகைவர் போடும்
வேட்டுக்குள் அஞ்சாமல் பாய்ந்து செல்ல
வெற்றிப்பண் பாடிடுவாள்! உடலில் உள்ள
மூட்டுக்குள் சுழல்கின்ற தன்மைப் போன்று
மூளையிலே சுழன்றிடுவாள்! வாழும் எந்த
நாட்டுக்குள் என்புகழைப் பதியச் செய்யும்
நற்றமிழாள்! என்னுயிராள்! ஈடும் உண்டோ?
மாட்டுக்குள் ஆட்டுக்குள் கீழாய் எம்மை
வதைத்திட்ட வஞ்சகரை மடியச் செய்தாள்!
சீட்டுக்குள் பாமரரை அடிமை யாக்கிச்
சிறையிட்ட கொடியவரை ஒழியச் செய்தாள்!
வீட்டுக்குள் பெண்ணினத்தை அடக்கி வைத்து
விலங்கிட்ட தீயவரை அழியச் செய்தாள்!
பூட்டுக்குள் வாடுவதோ? தூள்தூள் ஆக்கும்
பூந்தமிழாள்! பொற்கொடியாள்! ஈடும் உண்டோ?
தீட்டென்று சொல்லுவதும்! யாகம் செய்தால்
தீர்வென்று துள்ளுவதும்! சாதிப் பற்றை
மூட்டென்று கூடுவதும்! மாயம் காட்டி
முடிவென்று பாடுவதும்! இருட்டுப் பேய்கள்
ஓட்டென்று சாற்றுவதும்! இறைவன் வந்த
உருவென்று காட்டுவதும்! உலகை ஏய்க்கும்
கூட்டென்று நன்குணர்த்தி ஒளியைத் தந்த
குளிர்தமிழாள்! கொடைத்தமிழாள்! ஈடும் உண்டோ?
மீட்டுகின்ற இசையானாள்! சான்றோர் நெஞ்சுள்
மின்னுகின்ற அறமானாள்! புலவர் போற்றித்
தீட்டுகின்ற கவியானாள்! திகட்டா இன்பத்
தேனானாள்! தினையானாள்! மண்ணைச் சாய்த்து
வாட்டுகின்ற பொய்ம்மைகளை முற்றும் அள்ளி
ஓட்டுகின்ற மறமானாள்! அன்பாம் பாலை
ஊட்டுகின்ற தாயானாள்! வாழ்வும் ஆனாள்!
உயர்தமிழாள்! ஒண்டமிழாள்! ஈடும் உண்டோ?
தொடரும்
ஈடில்லா தமிழ் மகளுக்கு
RépondreSupprimerஇனிய பாமாலை.
அருமை கவிஞர்.
Supprimerவணக்கம்!
ஈடில்லாத் தண்டமிழை ஏத்தி வணங்கிடுவோம்!
பிடில்லாப் போக்கைப் பெயா்த்து!
சக்திக்கு ஈடு இணை இல்லை ஐயா...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
பக்தியை ஊட்டும்! பணிவூட்டும்! பண்பூட்டும்!
சக்தியை ஊட்டும் தமிழ்!
அய்யா வணக்கம்.
RépondreSupprimerஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் எல்லாமும் அருமை. இனிமை!
கட்டியவள்! நம்மையெலாம் காட்டியவள்!
கண்மூட விழிதி றந்து
தொட்டெழுப்பி அமுதுநமக் கூட்டியவள்!
தேன்மழையில் வான்நி றைந்து
பட்டமொழி பலவிருந்தும் பச்சைபசுஞ்
பாகினறு சோலை யாக்கிக்
கொட்டுகவி அருவிபல கொண்டிருந்தாள்
இன்றிருந்தாள் தமிழே அன்றோ?
காற்றாகி எம்மூச்சாய்க் கலந்தாள்! எங்கள்
கண்ணானாள்! கருத்தானாள்! கதியு மானாள்!
கூற்றெழுந்து கொன்றிடுமோ? வாழச் செய்வாள்!
குலப்பகையை வேரறுப்பாள்! கொள்கைக் காக
நேற்றெழுந்த மறவர்களின் நெஞ்சில் நின்றாள்!
நெருப்பூட்டு கின்றாளின் றுன்றன் பாவில்
ஊற்றாகி எம்முள்ளம் உறைகின் றாள்யார்?
உயிர்தானோ? தமிழென்ப தின்னோர் பேராம்!
நன்றி
Supprimerவணக்கம்!
வன்மையுறும் கொள்கை! வடித்த கவிபடித்து
நன்மையுறும் என்னுடைய நாவென்பேன்! - இன்றேன்
கரும்பாகத் தந்தீர்! அரும்பாகத் தந்தீர்!
விருந்தாகத் தந்தீர் விரைந்து!
இரும்பல்லன் வற்றும் துரும்பல்லன் உம்போல்
Supprimerகரும்பல்லன் நெஞ்சம் உருகி - வருங்காலச்
சாவெல்லும் பாசொல்லும் நாவல்லீர் நானோ‘நீர்
கோ‘என்று கொண்ட குடி!
நன்றி அய்யா!
Supprimerவணக்கம்!
கோவென்று கொண்டாடிக் கோலக் கவிபடைத்தீர்!
ஆவென்று நானும் அசந்திட்டேன்! - காவென்று
கன்னல் தமிழ்வளர்க்கும் காவலரே! உம்மொழியால்
இன்னல் அகலும் எனக்கு!
வியந்தமிழாள், நற்றமிழாள், பூந்தமிழாள், பொற்கொடியாள், குளிர்தமிழாள், கொடைத்தமிழாள், உயர்தமிழாள், ஒண்டமிழாள் என இன் தமிழாளை வாழ்த்தில் புனைத்த விதம் வியந்தேன் அய்யா. அய்யா ஒரு சந்தேகம். "இரண்டில் மாறும்" வெண்பா என்று பதிவில் படித்தேன். இது வெண்பா வகையா என்பதை என் போன்ற அரிச்சுவடி மாணாக்கர்களின் ஐயத்தை அருள்கூர்ந்து தெளிவிக்க வேண்டும் ஆய்யா. நன்றி.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வருகையை நெஞ்சம் வரவேற்றுப் போற்றும்
இருகை களைத்தாம் இணைத்து!
வணக்கம்
RépondreSupprimerஐயா
சாத்திய வரிகள் கண்டு என் சிந்தை குளிர்ந்தது...
சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
முந்தைத் தமிழாள் மொழிந்த நெறியேற்றால்
சிந்தை குளிரும் செழித்து!
கூட்டென்று நன்குணர்த்தி ஒளியைத் தந்த
RépondreSupprimerகுளிர்தமிழாள்! கொடைத்தமிழாள்! ஈடும் உண்டோ?
அருமை
Supprimerவணக்கம்!
ஈடுண்டோ என்றுநான் இங்குரைத்த பா..படித்தால்
கேடுண்டோ வாழ்வில் கிளர்ந்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஎங்கள் தமிழிற்கும் ஈடுளதோ? பாட்டரசே
தங்கள் கவிகள் தருமழகு! - திங்களும்
வானிலே தான்வனப்பு! செந்தமிழ்ச் சீர்களும்
தேனிலே சேர்ந்த..தித் திப்பு!
எண்சீர் விருத்தம் அத்தனை இனிமையாக இருக்கின்றது ஐயா!
எங்கள் தமிழிற்கும் உங்கள் கவிகளின் இனிமைக்கும் ஈடேது?..
மிகச் சிறப்பு ஐயா!..
வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
இந்த உலகம் இனிதாய் இயங்கிடவே
சந்தத் தமிழ்நெறியைத் தாலாட்டு! - வந்திங்கு
வந்தனை செய்து வடித்த வளா்வெண்பா
சிந்தனைத் தேனின்தித் திப்பு!
RépondreSupprimerஐயா வணக்கம்!
பற்றோங்கிப் பாடிய பாக்கள் படித்திட்டேன்!
முற்றோங்கி ஊறும் மொழியுண்டேன்! - கற்றோங்கிப்
பாடும் கலையறிந்தேன்! பாட்டரசே உன்னெழுத்து
சூடும் அமுதைச் சுரந்து!
Supprimerவணக்கம்!
முற்றோதித் தந்துள்ளீர் முல்லையென வெண்பாட்டு!
கற்றோதி நானும் களிக்கின்றேன்! - பற்றோதிப்
பாடிய பாக்களைப் பற்றி மகிழ்கின்றீர்!
ஆடிய நாதன் அருள்!
எண்சீர் விருத்தம் தந்தீர்- தமிழ்
RépondreSupprimerஎன்றென்றும் வளர வந்தீர்
வெண்பாவின் வேந்தே வாழ்க!-தமிழ்
விளையாடி நாவில் சூழ்க!
பண்பாடு தன்னில் மிக்கோய்- எழில்
பாரிசில் நாளும் தக்கோய்
மண்பாடு மாறா வகையில் -தமிழ்
மரபினைக் காப்பீர்! மிகையில்
Supprimerவணக்கம்!
எண்சீர் விருத்தத்தை ஏற்றுச் சுவைத்திட்டீர்!
மண்சீா் மணக்கப் புகழுரைத்தீர்! - தண்சீர்
சுரக்கும் இராமா நுசனாரே! உன்..பா
உருக்கும் உளத்தை உடன்
அய்யா, பின்னூட்டம் வழி என் ஐயம் துலங்கியது. நன்றி. தொடரதுலுக்கு காத்திருக்கிறேன்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மீண்டும் வருகைதந்து மீட்டிய..சீர்! நட்போங்க
துாண்டும் மனத்தைத் தொடர்ந்து!
சாடும் அடிகள்! சமூக அவலத்தைப்
RépondreSupprimerபாடும் கவிஞா்!கி. பாரதி தாசனார்!
கூடும் மனத்தைக் கொடுத்த விருத்தங்கள்
சூடும் புகழைச் சுடா்ந்து!
விருத்தப்பாவை விரும்பிப் படித்தேன். வியந்து நின்றேன். வணங்குகிறேன் ஐயா.
Supprimerவணக்கம்!
சூடும் புகழைச் சுடரும் விருத்தங்கள்!
பாடும் பசுந்தமிழைப் பற்றேந்தி! - வாடுகின்ற
துன்ப நிலையோட்டும்! துாய மனங்கூட்டும்!
இன்ப நெறியூட்டும் ஏத்து!
வணக்கம் ஐயா !
RépondreSupprimerதேன்சிந்தும் பாமாலை திரண்டு வந்தே
தெய்வத்தை எந்நாளும் கண்முன் காட்டும் !
வான்சிந்தும் நன்னீரை சுவைத்த நாடாய்
வற்றாத இன்பத்தை அள்ளிக் கூட்டும் !
தான்சிந்தும் பாமாலை அறிந்தே நாமும்
தன்னாற்றல் உற்றோறாய் மின்னு கின்றோம் !
நான்சிந்தும் வார்த்தைக்குள் தவழும் உண்மை
நாடெல்லாம் தான்சிந்த வாழ்த்து கின்றேன் !
ஈடு இணையற்ற பாடல் ஒன்றினைப் பாடி தமிழ்த் தாய்க்கும்
மகிழ்வைத் தந்தீர்கள் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் ஏது
எம்மிடத்தில் !வணங்குகின்றேன் ஐயா .
Supprimerவணக்கம்!
தேனொழுகும் அடையாகத் தேவி அம்பாள்
தீட்டியுள விருத்த்தைப் படித்த போது
வானொழுகும் அமுதாக இனிமை கண்டேன்!
மகிழ்ந்தாடி மலர்துாவிப் பெருமை கொண்டேன்!
ஊனொழுகும் உயிரொழுகும் வண்ணம் பாடி
உயா்வொளிரும் கவிதைகளை நன்றே நல்க
நானொழுகும் திருமாலை வேண்டு கின்றேன்!
நலமோங்க வளமோங்க வாழ்த்து கின்றேன்!
ஐயா வணக்கம்,
RépondreSupprimerதமிழ் நனைந்த அமுதா-அல்ல
அமுதம் உண்டதமிழா திகட்டாத
தெள்ளமுதை தித்தித்தேன் . ஐயாநலமா?
ஈடில்லா நற்றமிழை ஈர்க்க வைக்கும்
RépondreSupprimerஇணையில்லா பாமாலை இதுவே நாளும்
பாடிமனத் தோட்டத்தில் பதியம் வைத்துப்
பைந்தமிழை தினமுண்போம்! பாக்கள் கற்கத்
தேடிவரும் எங்களுக்கும் தெய்வம் ஆகித்
தீந்தமிழாள் மகவுன்னைக் காட்டிச் சென்றாள்
கோடிமனக் குணம்கொண்ட குருவே உங்கள்
குளிர்தமிழுக் கிவ்வுலகில் ஈடும் உண்டோ..!
மிக அருமை சொல்ல வார்த்தை இல்லை கவிஞர் அண்ணா
மிகவும் ரசித்தேன் அவ்வாறே எழுதியும் பார்த்தேன்
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
த ம 13