மாவீரா்
1.
மாவீரர் தம்மை மனமெண்ணச் சொல்லெல்லாம்
மாவீரர் தம்மை மனமெண்ணச் சொல்லெல்லாம்
பாவீரம் சூடிப் படைநடத்தும்! - வா..வீரர்
சோதியைக் கையேந்தி! தோழா! பகைக்கூட்டம்
பேதியைக் காணும் பிரண்டு!
2.
நாட்டின் விடுதலையை மூட்டிய மாவீரர்!
நாட்டின் விடுதலையை மூட்டிய மாவீரர்!
ஈட்டியின் கூர்மையை ஏந்தியவர்! - காட்டினில்
அஞ்சா திருக்கும் அரிமா அதிர்ந்தோடும்!
பஞ்சாய்ப் பறக்கும் பகை!
3.
தன்மானம் குன்றித் தமிழன் கிடப்பதுவோ?
தன்மானம் குன்றித் தமிழன் கிடப்பதுவோ?
பொன்வானக் கீற்றாய்ப் புறப்பட்டார்! - நன்மான
மாவீரர்! வானதிரும் வன்மை நடைகண்டு
நாவீரர் போனார் நசிந்து!
4.
பாயும் கொடியேந்தித் தாயின் நிலங்காக்க
பாயும் கொடியேந்தித் தாயின் நிலங்காக்க
ஓயும் நொடியின்றி ஓடியவர்! - சாயுங்கால்
போர்க்களத்தை வீசும் புகழ்க்களமாய் ஆக்கியவர்!
போ்..மறத்தைச் சொல்லும் பிணைந்து!
5.
கல்வேலி கட்டிக் கணித்தே அடைத்தாலும்!
கல்வேலி கட்டிக் கணித்தே அடைத்தாலும்!
பல்வேலி கட்டிப் படைத்தாலும்! - சொல்..வேலி
நீக்கிச் சுரப்பதுபோல் நீடுபுகழ் மாவீரர்
தாக்கித் தகா்த்தார் தடை!
6.
எண்ணில் அடங்கா எழிலுடைய மாவீரர்
எண்ணில் அடங்கா எழிலுடைய மாவீரர்
மண்ணில் விளைந்திடுவார் மாண்பேந்தி! - கண்ணின்
மணியானார்! காக்கும் அரணானார்! வாழ்வின்
அணியானார் என்றும் அவா்!
7.
செங்களம் ஆடிச் சிரித்திட்ட மாவீரர்
செங்களம் ஆடிச் சிரித்திட்ட மாவீரர்
எங்குள போதும் எமைக்காப்பார்! - சிங்களா்
கொட்டம் அடக்கிக் கொடுமைத் தலையொடிப்பார்!
கொட்டும் முரசைக் குவித்து!
8.
பிறப்பதுவும் பின்னே இறப்பதுவும் உண்மை!
பிறப்பதுவும் பின்னே இறப்பதுவும் உண்மை!
சிறப்பதுவே வாழ்வு! சிதைந்து - சிறைக்குள்ளே
வாடுவதோ? வன்வேங்கை மாவீரர் ஈகைக்கே
ஈடெதுவோ? தோழா இயம்பு!
9.
அஞ்சாப் புலிநிகா்த்தார்! பேராண்மை வான்நிகா்த்தார்!
அஞ்சாப் புலிநிகா்த்தார்! பேராண்மை வான்நிகா்த்தார்!
துஞ்சா துழைத்துத் துயர்துடைத்தார்! - நெஞ்சேந்தித்
தன்னேர் இலாத தலைவன் வழிநடந்தார்!
பொன்னோ்..மா வீரரைப் போற்று!
10.
ஈடில்லாத் தம்முயிரை ஈந்தனரே! நாமுற்ற
ஈடில்லாத் தம்முயிரை ஈந்தனரே! நாமுற்ற
பீடில்லா வாழ்வைப் பிழிந்தனரே! - நாடெல்லாம்
கூடி எதிர்த்தாலும் குன்றாத மாவீரர்!
பாடித் தொழுவேன் பணிந்து!
26.11.2014
வீரமிகு வரிகள் சிறப்பு ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
வீரம் விளைந்தோங்கும் விந்தை தமிழ்நிலத்தின்
ஓரம் உலகின் உயர்வு!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
தேசத்தின் விடிவுக்காய் உதிரம் சிந்திய வீரர்களை
போற்றி பாடிய கவி கண்டு மகிழ்ந்தது மனம்
த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
தேசத்தின் வீரரைத் தென்தமிழ் வீசுகின்ற
வாசத்தில் வைத்தேன் மகிழ்ந்து!
வணக்கம் ஐயா !
RépondreSupprimerஈடில்லாத் தம்முயிரை ஈந்தனரே! நாமுற்ற
பீடில்லா வாழ்வைப் பிழிந்தனரே! - நாடெல்லாம்
கூடி எதிர்த்தாலும் குன்றாத மாவீரர்!
பாடித் தொழுவேன் பணிந்து!
எங்கள் அன்பு தெய்வங்களைப் போற்றிப் பாடும் தங்களின் உன்னதமான
உணர்வுக்குத் தலை வாங்குகின்றேன் ஐயா வாழ்க வளமுடன் .
Supprimerவணக்கம்!
காக்கும் கடவுளாய்க் காட்டிய வெண்பாக்கள்
போக்கும் துயரைப் புலர்ந்து
மண்ணில் மறைந்தவரை மாண்புடன் வாழ்ந்தவரை
RépondreSupprimerவிண்ணில் விழைந்த மொழி.
வணக்கத்துடன் வணங்குகிறேன் ஐயா.
Supprimerவணக்கம்!
வித்தாய் விதைத்துள்ள வீரரைப் போற்றிவெண்
முத்தாய்ப் படைத்தேன் மொழி!
பத்தாக வெண்பாவில் பாடிவிட்டீர் ஈழத்தின்
RépondreSupprimerவித்தாக தோன்றியநல் வேந்தனையே -முத்தாக
அன்னை தமிழ்மொழியில் அன்னாரைப் போற்றியே
சொன்ன விதமிங்கே சான்று
Supprimerபத்துக் கவிகள் பகைவரைப் பந்தாடும்!
கொத்து மலர்மதுவைக் கொண்டருளும்! - சத்தாக
அள்ளிக் குடித்தே அளித்தீா் புகழ்வெண்பா!
துள்ளிக் குதித்தேன் தொடர்ந்து!
RépondreSupprimerஈழ மறவரை எண்ணி இசைத்தகவி
ஆழம் அகலம் அளந்துவந்தேன்! - சூழுபுகழ்
வாணரை வாழ்த்தி வணங்குகிறேன்! பொல்லாத
வீணரைச் கொல்வேன் விரைந்து!
Supprimerவணக்கம்!
பொல்லாக் கொடுமை புாிந்த கயவா்களை
இல்லா தொழிப்பதுவும் எந்நாளோ? - கல்லேபோல்
நாமிருந்தால் என்னபயன்? நாள்கள் உமிழாதோ?
ஓமென்று எழுவோம் உடன்!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஇறப்பிலும் வாழ்கின்றார் மாவீரர் எம்முள்!
பெறற்கரிய பேர்தனைப் பெற்றே! - சிறப்பாக
வெண்பா உருக்கியே தந்தீர்! இருப்பார்கள்
கண்போலே எம்மிற் கலந்து!
வலியோடு வந்து வணங்கினேன் ஐயா!
எளிதல்ல எல்லாம் எமக்கு!
உளமதிற் கொண்ட உங்கள் ஒப்பற்ற உணர்விற்கு
என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும் ஐயா!
Supprimerவணக்கம்!
கண்போல் இருந்து கடமை புாிந்தவர்கள்!
விண்போல் விாிபுகழ் பெற்றவர்கள்! - மண்மேலே
பாயும் புலிக்கொடியைப் பாங்குடன் காத்தவர்கள்!
தாயின் சிறப்பைத் தாித்து!
வீரமிக்க வரிகளால் தேசத்தின்
RépondreSupprimerவீரர்களைப் போற்றிய வரிகள்
அருமையான வரிகள் ஐயா! அவர்களது கனவுகள் மெய்ப்பட வேண்டும் விரைவில்!
Supprimerவணக்கம்!
நாட்டினைக் காத்திட்ட நற்றமிழ்ப் போர்மறவா்
பாட்டினை நாளுமே பாடு!
வீரர் புகழ்பாடும் வீர வரிகள் அருமை! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வீர அடிகளை வெற்றிப் படிகளை
ஆரமாய் என்றும் அணி
ஈடில்லாத் தம்முயிரை ஈந்த வீரர்களுக்கு வீர கவிதை மிக அருமை.
RépondreSupprimerவீரர்களுக்கு வணக்கம் பல.
Supprimerவணக்கம்!
வீர வணக்கத்தை வெண்பா கவியிசைக்கும்
சூரப் பகைவரைச் சுட்டு!
அருமையான பா வீரர்கள் நாமம் என்றும் மறவோம்.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மாவீரா் பொன்னடியில் மங்காப் புகழ்மாலை
பாவீரன் தந்தேன் பணிந்து!
மாவீரர் பாட மறத்தமிழன் இங்கெழுந்தான்!
RépondreSupprimerபாவீர வெண்பாப் படைவருக! - சாவீர
மஞ்சம், அதில்துஞ்சல் மாண்பு! தமிழ்வாழு
நெஞ்சம் அறிந்த நெறி!
அருமையான பாடல்கள் அய்யா!
நன்றி
Supprimerவணக்கம்!
நெஞ்சம் உயரும் நெறியுரைத்தீா்! ஈடில்லாக்
கொஞ்சும் தமிழின் குணமுரைத்தீர்! - அஞ்சாமல்
பாயும் புலிமறவர் பண்புகளை நாம்பாட
வாயும் மணக்கும் மலர்ந்து!
வீரத் தமிழனின் வெற்றியொளி வெண்பாவை
RépondreSupprimerஆரமாய் நெஞ்சம் அணிகிறது! - தீரமாய்ச்
சொன்ன கருத்துக்கள் சூடும் உரிமையினை
முன்னும் பகையை முடித்து!
Supprimerவணக்கம்!
பகைமுடித்துப் பாயும் புலிமறவர் தம்மின்
தகைபடித்துத் தந்திட்ட வெண்பா! - குகையுடைத்துத்
துள்ளும் துணிவூட்டும்! துாய தமிழ்நெறியை
உள்ளும் உயிரும் உணர்ந்து!
வெஞ்சமர் ஆடிய வேங்கைகள் வீரத்தை
RépondreSupprimerஅஞ்சாமல் பாவடித்த ஆசானே - நெஞ்சில்
நெருப்பேந்தி நீறாகிப் போனாலும் மீண்டும்
கருக்கொள்ளும் ஈழக் கனவு !
வலிநிறைந்த நாட்களில் வலிமை சேர்க்கும் பாக்கள்
நெஞ்சுள்ளே நிலைத்து இருக்கும் என்றும் எப்போதும்
அருமை அருமை கவிஞர் அண்ணா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Supprimerவணக்கம்!
கருகொள்ளும் ஈழக் கனவுகள் என்ற
அருஞ்சொல்லும் வீரம் அளிக்கும்! - உருகொள்ளும்
மீண்டும் புலிப்போர்! விதையாக வீழ்ந்தவரை
யாண்டும் தொழுவோம் இணைந்து!