vendredi 22 août 2014

என்றன் தலையின் எழுத்து!





என்றன் தலையின் எழுத்து!

1.
எந்தச் செயலும் இனிக்கின்ற வண்ணத்தில்
இந்தப் பிறப்பில் எனக்கில்லை! - வந்துழற்றும்
உன்றன் செயற்குறித்து ஓதிப் பயனென்ன?
என்றன் தலையின் எழுத்து!

2.
கண்ணில் கமழ்ந்தவள்! காதல் பொழிந்தவள்!
அண்ணா எனஅங்[கு] அழைத்தாளே! - புண்ணாகி
இன்னும் இருக்கிறது என்மனத்துள் கொல்வலி!
என்றன் தலையின் எழுத்து!

3.
பள்ளிப் பருவத்தைப் பாழ்படப் பண்ணியதும்!
துள்ளித் திரிந்ததுவும்! துன்பத்தை - அள்ளியே
இன்னும் இழிவதுவும்! இன்னல் விளைப்பதுவும்
என்றன் தலையின் எழுத்து!

4.
கல்வி மணக்கும் கருத்தில்லை! தாமரைச்
செல்வி மணக்கும் செழிப்பில்லை! - சொல்லிமகிழ்
இன்ப இடமில்லை! ஏற்ற நெறியில்லை!
என்றன் தலையின் எழுத்து!

5.
அண்ணன் எனச்சொல்லித் தம்பி எனச்சொல்லி
எண்ணம் இனிக்கும் உறவில்லை! - கொண்டுழற்றித்
துன்னும் துயரைத் துடைக்கும் துணிவில்லை!
என்றன் தலையின் எழுத்து!

6.
உண்மை உறவின்றி உள்ளம் உடைந்தேனே!
தண்மைக் குணமின்றித் தாழ்ந்தேனே! - வெண்மையாய்ப்
பின்னும் கவிகள் பெருமை பெருக்கிடுமோ?
என்றன் தலையின் எழுத்து!

7.
உடனிருந்து காத்தே உயிரறுக்கும் நண்பர்!
கடனிருந்து மேலும் களிப்பு! - குடமிருக்கும்
சின்னநீர் போன்று குதித்தாடும் செய்கைகள்!
என்றன் தலையின் எழுத்து!

8.
சோற்றுக்கு வாழ்வைச் சொருகுவதோ? துன்களைபோல்
நாற்றுக்குள் வாழ்வை நடத்துவதோ? - மாற்றின்றி
இன்னிசை வீணையை எட்டி எறிவதுவோ?
என்றன் தலையின் எழுத்து!

9
நம்பி இருந்தஎனை நாசம் புரிந்ததுவும்!
வெம்பி அழுதெனை வென்றதுவும்! - தும்பிபோல்
துன்பக் கயிற்றில் துடித்ததுவும்! அத்தனையும்
என்றன் தலையின் எழுத்து!

10.
ஓரடி ஏறினால் ஒன்ப[து] அடிசறுக்கும்!
சீரடி யாவும் சிரித்தோடும்! - ஈரடி
மின்னும் வியன்குறளை நான்மேவ ஏன்தடையோ?
என்றன் தலையின் எழுத்து!

11.
யார்குடியைக் கொன்றேனோ? எப்படி வாழ்ந்தேனோ?
ஊர்ப்பொருளைத் தின்றேனோ? உண்மையின் - போ்கெடுக்க
முன்பு பிறந்தேனோ? அன்பை அழித்தேனோ?
என்றன் தலையின் எழுத்து!

12.
கண்ணா! கருணைப் பெருங்கடலே! என்னழுக்கை
வண்ணான் வெளுப்பதுபோல் வந்தகற்று! - எண்ணத்துள்
அன்பு சுரக்கும் அழகூட்டு! மாற்றுகவே
என்றன் தலையின் எழுத்து!

22.08.2014

28 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    சொல்லியே சென்ற சுடுகவி நெஞ்சத்தை
    அள்ளித்தான் போனதே ஐயையோ! - கொல்லும்
    துயரைக் கவியாய்த் தொடுத்திடக் கற்றேன்!
    அயர்வின்றித் தொண்டுகளை ஆற்று(ம்)!

    அருமை என்று உங்கள் கவித்திறனைச் சொல்கின்றேன்.
    வெண்பாவின் ஈற்றில் ஆற்று என முடிப்பதை
    பண்பின் வெளிப்பாடாக ஆற்று(ம்) என முடித்தேன்.
    தவறாயின் பொறுத்தருள்க!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆற்று என்றே கவிதை முடிய வேண்டும்!
      உயா்வைக் கருதிக்கூட மரபை மாற்றக்கூடாது!

      உயர்வின்றிச் செல்லும் உணர்வுகளை நீக்கும்!
      அயர்வின்றி நற்பணிகள் ஆக்கும்! - துயாின்றி
      என்மனனே வாழ்ந்திடலாம்! இன்பத் தமிழ்தரும்
      நன்மனமே சூழ்ந்திடலாம் நன்கு!

      Supprimer
    2. வணக்கம் ஐயா!
      இனித் தொடர்ந்து எழுதும் போது மரபை மாற்றாமல் - மீறாமல்
      எழுதுகிறேன்.
      விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா!

      Supprimer

  2. எப்படி வாழ்ந்தாலும் என்னுயிர்த் தோழனே!
    செப்பும் தமிழுனக்குச் சீா்கொடுக்கும்! - இப்புவி
    ஏற்ற இழிவுகளை உன்மேல் இசைத்தனையே
    போற்றும் கவிகள் பொழிந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னுயிர்த் தோழா! இனிய தமிழ்ச்செல்வா!
      உன்னுயிர் பொங்கி உரைத்தகவி - துன்னிலை
      போக்கும் துணிவுதரும்! பொற்றமிழ்ப் பூக்காட்டைக்
      காக்கும் திறன்தரும் காண்!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      எருமை நிலைவுரைத்தேன்! என்னினிய தோழா!
      அருமை அளித்தீா் அதற்கு!

      Supprimer
  4. வணக்கம் ஐயா !
    மோசமான தலை எழுத்துத் தான் :))
    துன்பத்திலும் ஓர் இன்பம் தங்கள் கவிதை
    வரிகளைக் கண்டு !வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பத் தமிழை இயம்பும் பொழுதெல்லாம்
      துன்பம் அகலும் தொடா்ந்து!

      Supprimer
  5. வருத்தம் மிகுந்த கவிதை, ஐயா..எல்லாம் சரியாகட்டும் தலை எழுத்து சீராகட்டும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல தமிழை நலமுறப் பாடுவதால்
      எல்லாம் இனிக்கும் இனி!

      Supprimer
  6. வணக்கம் கவிஞரே!

    கவிதையில் மனம் சிக்கிக்கொண்டது!
    தொடரட்டும் உங்கள் தூய நற்பணி!
    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிக்கித் தவிக்கும் செழுங்கவியில் உன்மனம்
      சொக்கித் தவிக்கும் சுகித்து!

      Supprimer
    2. கவிஞர் ஐயா! ஏனிந்த வருத்தம்!?
      கவியெழுதும் கவிஞரின் தலைஎழுத்து
      கட்டழகுத் தேவதைத் தமிழில் இருக்கும் போது
      சொட்டச் சொட்ட தேனில் குழைத்துத் தரும் போது
      எட்ட நின்று பருகிட நாங்கள் இருக்கும் போது
      பட்டொளி வீசி பறந்திடுவீர் கவிஞரே!!!

      Supprimer
  7. ஆஹா அழகிய கண்ணன்.

    நொந்து மனம் வாடாது கவி
    வடிக்கக் கூடாது துயர்!
    தேன் சொரியுமும் கவி திகட்டாது
    வானளவு வளரும் உம் புகழ் !

    அழகு கவியில் சொக்கித் தான் போனேன் கவிஞரே நன்றி! வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      நொந்து வடித்தகவி தந்த துயா்போக
      வந்து வடித்தீா் வளம்!

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா.
    சீராக வரியெடுத்து சிந்தை குளிர்ந்தது
    பாடிய வரிகளில் பாவலன் கூட தோற்று விடுவான்
    பாடிய வரிகள் நெஞ்சில் நிறைந்தது.
    பாடி மகிழ்ந்தேன்

    பகிர்வுக்கு நன்றி ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பா..வளம் பொங்கும் படைப்பைப் படித்தவுடன்
      நா..வளம் பொங்கும் நமக்கு!

      Supprimer
  9. உன்றன் தலையின் எழுத்து!

    1.

    விந்தை புரிகின்ற சிந்தை விதிசெய்ய
    நொந்த மொழிநூற்கும் நுண்புலவன் – எந்நாளும்
    அன்றில் தமிழ்விட் டகலாது வாழ்வதுவே
    உன்றன் தலையின் எழுத்து!

    2.

    கண்ணில் கலந்தவளைக் காதல் மொழிந்தவளை
    மண்ணிலறி வூட்டி மகிழ்ந்தவளை – எண்ணமெலாம்
    என்றும் தொழுதேத்த ஏக்கம் மிகக்கொண்ட(து)
    உன்றன் தலையின் எழுத்து!

    3.

    பள்ளிப் படையாகிப் போனார் பெருவேந்தர்!
    கொள்ளிவாய்ப் பட்டுதிர்ந்தோர் கோடியுளர்! – தெள்ளுதமிழ்
    என்றும் வழங்கிடவே நின்றன் புகழ்நிறுத்தல்
    உன்றன் தலையின் எழுத்து!
    4.
    கல்வி மணக்காதோ கற்கண்டுச் சொற்சுவையில்?
    எல்லா மினிதமிழில் ஆகட்டும்! – அல்லாமல்
    ‘கொன்று விடமுயல்வோர் கோறல்‘ அதுவன்றோ
    உன்றன் தலையின் எழுத்து

    5.
    அண்ணன் அவன்தம்பி அன்னை அருந்தந்தை
    மண்ணில் தமிழையெவர் மாசுறுத்த? – புண்ணாயின்
    ‘நன்று! குணப்படுத்து!‘ அன்றேல் ‘அழி‘யென்றல்
    உன்றன் தலையின் எழுத்து!

    6.
    உண்மை அறியா உறவெதற்கு? காணார்க்குக்
    கண்மை இழுத்துவிடுங் கோடெதற்கு? – அண்மைவாழ்
    கன்றாதல் தாய்தமிழின் காதல் நிதம்பருகல்
    உன்றன் தலையின் எழுத்து!

    7.

    உடனிருந்து காக்க உயிர்த்துணையாய் உள்ளீர்
    நடமிடுமே நந்தமிழ் நன்றாய்! – “கடன்பட்டேன்
    என்றன் மகவிற்கே“, என்று தமிழ்சொல்லல்
    உன்றன் தலையின் எழுத்து!


    8.
    சோற்றுக்கு வாழ்ந்துடல் வீழுங் கொடும்புன்மைச்
    சேற்றுக்குள் நீவீழ மாட்டாதே – வேற்றுமொழி
    நின்று தமிழழிக்க நின்மார் பதைத்தாங்கல்
    உன்றன் தலையின் எழுத்து!


    9
    “நம்பி! வருக“வென நற்றாய் அழைத்திருக்க
    வெம்பி உளம்சோர வீழுவையோ? – அம்புலியும்
    குன்றும்! ஒளிவேண்டிக் கூடவரும் இன்றமிழே
    உன்றன் தலையின் எழுத்து!



    10.
    ஓரடி சொல்‘உடனே ஓரா யிரம்வெண்பா
    ஓராது செய்யவலான் உள்ளனெனத் – தீராது
    கன்னல் தமிழினித்துக் காதல் புரிவதுதான்
    உன்றன் தலையின் எழுத்து!



    கண்ணா உனதினிமை காணாதோன் என்கூற?
    கண்ட தமிழினிமை போன்றனையோ? – வண்ணமொன்றே
    கொண்டிருப்பாய் நீயும்! பல...தமிழில்! அன்றிருந்து
    இன்றிருக்கும் எம்மோ டது!


    “வெஞ்சமர் செங்குருதி கொஞ்சுதமிழ் கேவியழ
    மஞ்சத் துறங்கும் மறத்தமிழர் – நெஞ்சிறங்கப்
    பஞ்சமிலா செஞ்சொல் படைக்கின்றாய் நின்பணிதான்
    பஞ்சிற் கனலின் பொறி“


    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்! அன்பான கவிப் பெருந்தகையோரே!

      கன்னற் கவியரசும் காப்பியப் பாவலரும்
      எண்ணரிய பாக்களை இங்கீந்தீர்! - இன்னும்
      எழுதுங்கள் எம்தாய் இனிதுவக்க! உம்மைத்
      தொழுதே வருவோம் தொடர்ந்து!

      அருமையான வெண்பாக்களை நீங்கள் இருவரும்
      மாறிமாறி இங்கு தந்து என்னை
      வியப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்!

      ஐயாவின் சோக உணர்வு மிக்க வெண்பாக்களுக்கு
      துயர் போக்கித் தோல்வியையும் வெற்றியாக்க யோசெப் ஐயா
      வரைந்த பதில் வெண்பாக்கள் கண்டு விக்கித்துப் போனேன்.
      மிக அருமை!
      இப்படி ஒரு நட்பு வாய்க்கின் எத்தகைய
      துன்பமும் பனிபோல் மறையாதோ!..

      உங்கள் இருவரின் வழிநடத்தலோடு
      எங்கள் தமிழ்த்தாய் வீறு நடைபோடுவாள்!

      இருவரையும் பணிந்து உளமார வாழ்த்துகிறேன்!
      வாழ்க வளமுடன்!

      Supprimer

    2. வணக்கம்!

      தலையெழுத்து என்ற தலைப்பில் கவிதை எழுத வேண்டுமென்று நெடுநாள்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். அத்தலைப்பு என்றன் தலையின் எழுத்தென்று மாற்றம் பெற்றது. எழுதத் தொடங்கியது நடந்த நிகழ்வுகள் கண்முன் வந்து அணிவகுத்தன. சொற்கள் போட்டியிட்டன. ஒருவழியாக கண்ணனைப் பாடி கவிதையை நிறைவு செய்தேன்.

      நான்கொண்ட துன்பியலை மனம் தாங்காமல் அத்தனைப் பாக்களையும் இன்பியலாக, வீர இயலாக, மாற்றிக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்நிறைந்த நன்றிகள்!

      தாயுள்ளம் போலிங்குத் தந்த தமிழ்கண்டேன்!
      சேயுள்ளம் போலிங்குச் சீா்பெற்றேன்! - சாயுள்ளம்
      நீங்கி நிமிர்ந்தேன்! நிலையாக உன்னன்பைத்
      தாங்கித் தாித்தேன் தழைத்து!

      என்றன் தலையெழுத்தை உன்றன் உயர்தமிழால்
      இன்று திருத்தி எழுதினையே! - நன்றியினைச்
      சொன்னால் முடிந்திடுமோ? துாய தமிழ்நெஞ்சைப்
      பொன்னால் தொழுதேன் புகழ்ந்து!

      என்னென்பேன்? ஏதென்பேன்? ஈந்த கவிதையை
      பொன்னென்பேன்! பூவென்பேன்! இன்பென்பேன்! - அன்பென்பேன்!
      வாடும் மனங்கண்டு வாரி அணைத்த..தாய்
      பாடும் தமிழைப் படித்து!

      Supprimer

    3. வணக்கம்!

      இன்பத் தமிழெடுத்து இங்கே இளமதியார்
      அன்பின் அமுதை அளித்திட்டார்! - என்நன்றி!
      செம்மை மொழிப்பற்றின் சீரேந்தி வாழ்கின்றார்
      தம்மை முழுமையாய்த் தந்து!

      Supprimer
  10. காயுள்ளம் மாற்றக் கனியுள்ளம் கொண்டவரும்
    நோயுள்ளம் பட்டு நொடிப்பதுவோ?- தீயுள்ளம்
    செத்தால் நலமென்றே சும்மா இருந்திடலாம்!
    வித்தோ கருக விட?

    முன்றில் நிலாக்காய மோகப் பெருக்கினிலே
    தென்றல் உலவும் தமிழ்மனதைக் - கொன்றிடவே
    வந்த கவலையெலாம் வாசல் வழியோட
    நொந்தவிதி எண்ணும் நொடி!

    பொன்போலும் சுட்டுப் பொலிவாக்கும் அத்தீயைத்
    தின்ன விறகு துணிவதுவோ? - வென்றொளிரும்
    வாளே அயர்ந்து வலிகொளுமோ? இன்றமிழின்
    தாளே வணங்கும் தலை!
    நன்றி அய்யா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தாக மூன்று கவிதைகள் இங்களித்தீர்!
      கொத்தாக இன்பம் கொடுத்தனவே! - சித்தாக
      என்னுள் புகுந்தனவே! இவ்வுலகை நான்மறந்து
      ஒன்றி உவந்தேன் உறைந்து!

      Supprimer
  11. Réponses

    1. வணக்கம்!

      அாிய வருகைக்கு அளித்தேன் வணக்கம்!
      வருகவே நாளும் வலம்!

      Supprimer
  12. "என்றன் தலையின் எழுத்து!" - அது
    என்றன் எண்ணத்தில் விழுந்து - அதை
    தங்கள் தமிழ் வண்ணத்தில் - நான்
    படித்துச் சுவைத்தேன் - அதுவே
    என்றன் தமிழுக்கு அழகு!

    RépondreSupprimer
  13. விலையிலா எங்கள் விளைதமிழ் என்றும்
    நிலைத்திட வேண்டும் நிமிர்ந்தே - கலைகளின்
    காற்றில் கலையுமோ காப்பியம் ! எம்குருவே
    போற்றிப் புகழும் புவி !

    வேற்றுக் கிரகத்தின் விண்மீனும் உம்தமிழில்
    ஆற்றலுறும் அண்மித்து ஆடிவரும் - மாற்றம்
    அடையாத வண்டமிழின் ஆன்மாவில் ! நற்தேன்
    அடைபொங்கும் அன்பில் அமிழ்ந்து !

    அழகான பாவிற்குள் அணையாத தீபங்கள்
    அருமை ஐயா
    வாழ்க வளமுடன்
    காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன்

    RépondreSupprimer