jeudi 12 juin 2014

இளங்கோ அடிகள்
இயற்கைக் கவிஞர் இளங்கோவடிகள்

தத்தித் தவழ்ந்து தளிர்நடை நடந்தே
அத்தி மோவின் அருங்கலைக் கழகம்
பருவம் அடைந்த பாவை போன்றே
உருவம் பெற்று ஒளிர்கிறாள் இன்று!

பெருமை மேவும் பீடுடைச் செயல்களை
அருமை நண்பர் அருந்தமிழ்த் தொண்டர்
நற்பொன் னரசர் நன்றே செய்கிறார்
பொற்புடைப் பூந்தமிழ் பொலியக் காண்கிறேன்!

கழகம் காக்கும் கண்மணித் தோழரை
அழகுத் தமிழில் அடியேன் வணங்கினேன்!
புரவலர் பெத்ரூசு புகழ்ப்பணி தொடர்க!

சிந்தை யள்ளும் சிலப்பதி காரம்
முந்தைத் தமிழனின் முத்தமிழ்ச் சொத்து!
மொந்தைக் கள்ளென மோகம் கொடுக்கும்!
விந்தை நிறைந்த சந்தம் படைக்கும்!
தமிழர் வாழ்வைத் தரணிக்கு உரைக்கும்
அமிழ்த ஏடு! அறமலர்க் காடு!

இறைவனை அரசனை இயம்பும் நூல்கள்
நிறைய உள்ளன! நெடுந்தமிழ் மணக்கக்
குடிமகன் தன்னைத் தலைவனாய்க் கொண்டு
வடித்த காவியம்! வண்டமிழ் வழங்கி
இவ்விழாத் தலைமையை எழிலுற நடத்தும்
செவ்விய நெஞ்சர்! செந்தமிழ்க் கணிபொறி
என்றே கபிலரை இயம்புதல் பொருத்தம்!
இந்திய வரைபடம் இவரின் முகத்தில்
சொந்தமாய்த் தெரியும்! சூட்டினேன் வணக்கம்!

பால கிருட்டினன் படைக்கும் உரையில்
கோலத் தமிழாள் கொஞ்சு களிப்பாள்!
தம்பி தனச்செல்வி தண்டமிழ் சுவைக்கும்
தும்பி! தூய் தமிழ்ப்பணி தொடர்க!

இலக்கி வேந்தர் எங்கள் பெஞ்சமின்!
இலக்கிய மேடைகள் கணக்கில் அடங்கா!
தேவன் தொண்டும், செந்தமிழ்ப் பணியும்
மேவிய விழிகள்! மேன்மை காண்கவே!

உன்னால் முடியும் தோழி என்று
பண்ணார் தமிழில் பயனுரை அளித்த
வல்ல லூசியா லெபோ வாழ்கவே!
நல்ல இலதா நன்றே வளர்கவே!

அவையில் அமர்ந்த அன்பரை வணங்கிச்
சுவைத்தமிழ்க் கவிகளைத் தொடர்வேன் யானே!

இயற்கைக் கவிஞர் இளங்கோ அடிகள்
உயர்கை தீட்டிய ஒண்மணி காவியம்!
சேர சோழ பாண்டியர் மூவரும்
ஆரத் தழுவி வீரத் தமிழைக்
காத்து வளர்த்த காட்சியைக் காட்டும்!
கூத்தும் இசையும் குளித்தமிழ்ச் செல்வம்!
அன்று தோன்றிய அருந்தமிழ் இன்னிசை
இன்று தமிழர் மறந்த தேனோ?
இருளை நீக்கும் இளங்கதிர் போன்று
மருளை நீக்கும் அருட்சுடர் சிலம்பை
ஈன்ற இளங்கோ  இயற்கைச் கவிஞர்!
சான்றோர் போற்றும் சமத்துவக் கவிஞர்!

இப்புவி, அழகின் இலக்கியம் ஆகும்!
ஒப்பிலா வானம் ஒளிமணி மாடம்!
விதம்வித மான வெண்முகில் பயணம்!
நிதம்நிதம் மகிழ்ச்சி நீட்டும் காட்சி!
கீழ்திசை வானில் சீர்கதிர் தோன்றி
வாழ்வின் வளத்தை வரைந்து காட்டும்!

விடிந்தும் விடியா வைகறைப் பொழுது!
வடிக்கும் ஓவியம் வசந்த விரிப்பு!
ஆழ்கடல் மேலே அடிவான் கிழித்துத்
தாழ்திறந்து இன்முகம்  ஆதவன் காட்டி
மெல்லக் கிளம்பி மேலே செல்லச்
அள்ளி வழங்கும் வெள்ளிக் கதிர்களை!
காலைக் கதிரவன் உழைப்பின் சின்னம்!
சோலைக் கவிஞனைச் சொக்கச் செய்யும்!

மரம்,செடி, கொடிகள் வண்ணத் தளிர்கள்
சரமணி தங்கத் தகடாய் மின்னும்!
அருவியின் வீழ்ச்சி ஆயிரம் ஆயிரம்
குருவிகள் போடும் இன்பக் கூச்சல்!

மருவி மருவி மாலை மயங்கத்
தழுவிக் கொள்ளத் தண்ணிலா வருவாள்!
இரவெனும் போர்வையை இழுத்துப் போர்த்த
உறவெனும் உஞ்சலில் உயிர்கள் மகிழும்!

இன்ப தேனாய் இறங்கும் வான்மழை!
குன்று மலையில் கூத்து நிகழ்த்தும்!
ஆறுகள் நடக்கும் அழகைக் கண்டு
நாடும் நகரமும் செழித்து வளரும்!
இயற்கைத் தாயின் எழில்முகம் இயம்பினேன்!
இயற்கை மறுமுகம் இன்னல் விளைப்புது!
மெல்லிய காற்று சொல்லும் இசையைத்
தள்ளிப் புயலாய்த் தாவி சீறும்!
அலைகடல் பொங்கி ஆட்டம் போடும்!
கலைகளை அழித்தக் காடாய் மாற்றும்!
எரிமலை வெடிக்கும்! இடிவந் திடிக்கும்!
புவிவாய் திறந்து புன்னகை செய்யத்
தவியாய்த் தவித்து மலை,கடல யாவும்
நிலைகுலைந் தாடி நிற்கும் இயற்கை!

இயற்கை என்னும் இன்பக் களஞ்சியம்
உயிர்கள் உலவும் உன்னத சோலை!
அன்பு மணக்கும் அறிவுத் தோட்டம்!
பண்பு பழகும் பல்கலைக் கழகம்!

இந்த இயற்கை வீழ்ச்சியும் மாட்சியும்
சிந்தனை செய்தால் எல்லாம் அற்புதம்!
கற்பனைக்(கு) எட்ட அற்புதம் படைத்த
பொற்புடைப் புலவர்! புரட்சி துறவியர்!
ஞாயிறைப் போற்றினார்! திங்களைப் போற்றினார்!
தாயாம் மாமழை போற்றினார்! சால்பாய்ப்
பொங்கும் பொலிவுடைப் பூம்புகார் போற்றினார்!
தங்கத் தமிழின் தனிப்புகழ் சாற்றினார்!
காவிரி நாடன் கருணை போற்றினார்!
மேவிய இயற்கையின் மேன்மை சொல்லி
மன்னனைப் போற்றியே மங்கையாக் கரசி
கண்ணகி கற்பினைக் காவியம் தீட்டினார்!

ஞாலம் போற்றும் நாயகன் கோவலன்
காலக் கையில் கடுகென ஆனான்!
மாதவி மார்பில் மணியாய்க் கிடந்து
காதல் கசக்கக் கட்டினான் நடையை!
வீட்டில் இருந்த மாட விளக்குப்
பூட்டைத் திறந்து புறப்பட்ட போது
ஊதித் தீயே உருவம் எடுத்தது!

பெண்ணும் இயற்கையும் ஒன்றெனும் படைப்பு!
அண்ணல் அடிகளார் ஆக்கிய சிலம்பு!
திங்கள் போன்று மங்கலம் வழங்க,
செங்கதிர் போன்று சீரொளி வீச,
மாமழை போன்று மாவளம் அருள,
தாமரைப் பொய்கை தண்ணெழில் கமழ,
மங்கையர் உள்ளம் மாதவம் காண்க!
எங்கும் இயற்கை இனிமை பொழிகவே!

25.04.2008

15 commentaires:

 1. வணக்கம் ஐயா!...

  இயற்கைக் கவிஞர் இளங்கோ அடிகள்!
  வியத்தகு பாக்கள் விளம்பினை கண்டேன்!
  மயக்கமே இல்லை மாண்புகள் மிகவாம்
  தயக்கம் ஏதினிஇத் தரணியே உம்வசம்!

  மிக மிக அருமையான அகவற் பாக்கள்!.
  விழாவின் நாயகர்களையும் விழாவின் கவிப் பொருளான
  இளங்கோவடிகளைப் பற்றியும்,
  இயற்கைக்கும் பெண்ணிற்கும் உள்ள தொடர்பினையும்
  மிக மிகச் சிறப்பாக
  அகவற்பாக்களால் அலங்கரித்தீர்கள் ஐயா!
  உளம் நிறைய ரசித்தேன்! மகிழ்ந்தேன்!

  பகிர்விற்கு நன்றியுடன் என் பணிவான வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
 2. வணக்கம்
  ஐயா.
  தங்களின் கவியை காலைப்பொழுதில் படித்த போது புது உச்சாகம் பிறந்தது.. மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 3. வணக்கம்

  த.ம-4வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 4. அற்புதம்
  படித்தும் பகிர்ந்தும் மகிழ்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
 5. நீரூற்ற ஓங்கிவளர் நற்பயிர்போல் உம்வாய்ச்சொல்
  சீருற்றோர் வாழ்க சிறந்து.

  RépondreSupprimer
 6. சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
 7. வணக்கம் !
  அருமையான பாவரிகளைக் கண்டு உள்ளம் குளிர்ந்தது ஐயா
  தங்களுக்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் .

  RépondreSupprimer
 8. ஒவ்வொரு வரியும் ஒப்பிலா ஓவியம்
  செவ்வரி யாக செப்பிடும் காவியம்

  RépondreSupprimer
 9. அறமலர்க்காடு

  அருமை
  மனம் கொய்யும் சொல்லாட்சி
  மகிழ்வு
  http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

  RépondreSupprimer
 10. வணக்கம் கவிஞரையா!

  இளங்கோ அடிகள் சிறப்புக் கவிதை
  விழாவில் முழங்கோ முழங்கு என்று
  முழங்கியிருப்பக் கண்டேன்.

  அத்தனை சிறப்பு! அருமை!
  வாழ்த்துக்கள் கவிஞரையா!

  RépondreSupprimer
 11. பாராட்ட வயதில்லாத காரணத்தால் ரசித்தேன் ஐயா.
  www.killergee.blogspot.com

  RépondreSupprimer

 12. "இயற்கை என்னும் இன்பக் களஞ்சியம்
  உயிர்கள் உலவும் உன்னத சோலை!
  அன்பு மணக்கும் அறிவுத் தோட்டம்!
  பண்பு பழகும் பல்கலைக் கழகம்!" என
  சிறப்பாக மின்னும் வரிகள்!

  சிறந்த பகிர்வு!

  visit: http://ypvn.0hna.com/

  RépondreSupprimer
 13. இளங்கோ அடிகள் இயற்றிய காப்பியம்
  இளநீர் சுவையாய் இனிக்கும் என்றும்
  மருகா அவனின் மாண்பினை வாழ்த்தி
  திருவாய் மொழிந்தீர் தேனாய் உண்டேன் !


  வணக்கம் கவிஞர் அண்ணா
  அழகும் அருமையும் நிறைய தந்தீர்
  வாசித்தேன் பூரித்தேன்

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  12

  RépondreSupprimer
 14. தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா !

  RépondreSupprimer