samedi 22 février 2014

சொல்லோவியம் - பகுதி 2




சொல்லோவியம்

11.
கிணற்றுக்குள் குளிக்குமெனைக்
கீரியெனப் பார்த்தவனே!
கணத்துக்குள் பலவகையாய்க்
கற்பனையைச் சேர்த்தவனே!

12.
நீர்பாயும் தொட்டிக்குள்
சீர்பாயச் செய்தவனே!
கார்பாயும் கூந்தலுக்குள்
கவிதைபல நெய்தவனே!

13.
செங்கரும்புத் தோட்டத்தில்
தேன்விருந்து உண்டவனே!
இங்கரும்பு மலர்ந்தாட
இசைபாடி நின்றவனே!

14.
கள்ளிறக்கும் காலையிலே
கண்மயங்க வைத்தவனே!
உள்ளிருக்கும் உணர்வுகளை
உடையாகத் தைத்தவனே!

15.
செவ்வாழைத் தோப்புக்குள்
சிரித்தாடி நின்றவனே!
சவ்வாது மங்கையெனைத்
தந்திரமாய் வென்றவனே!

16.
சவுக்கமரத் தோப்புக்குள்
சவுரியமாய் இடமிருக்கு!
செவத்தநிறக் காளையெனச்
சீறிவந்த நினைவிருக்கு!

17.
பூவரசம் பூத்திருக்கு!
புதுச்சேவல் கூத்திருக்கு!
பாவரசே உனையெண்ணிப்
பாவைமனம் காத்திருக்கு!

18.
தூக்கணாம் கூடாகத்
தொங்குதடா என்னாசை!
தாக்குகின்ற கனவுகளைத்
தருகுதடா உன்மீசை!

19.
கண்ணான கட்டழகா!
காவிரியின் சிட்டழகா!
பெண்ணான என்னுயிரைப்
பிழிகின்ற பேரழகா!

20.
பொன்னான என்வாழ்வு
பொலிகின்ற நிலைவேண்டும்!
என்னாளும் நீ..வேண்டும்!
இனிக்கின்ற தமிழ்வேண்டும்!

(தொடரும்)

14 commentaires:

  1. மனதை கவரும் மிகவும் அழகான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மனத்தைக் கவரும் மணித்தமிழால் மண்ணின்
      மணத்தைப் படைத்தேன் மகிழ்ந்து!

      Supprimer
  2. ஒவ்வொரு வரியும்,,, கன்னியின் இடையணி மேகலை கீழே நழுவுவதைப் போன்ற ஒரு ஓவியத்தை மனதில் உருவாக்குகிறது !
    த ம 3

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காட்சியை என்கவிகள் கண்முன் படைத்திட்டால்
      மாட்சியைக் காண்பேன் மலா்ந்து!

      Supprimer
  3. வணக்கம் ஐயா !
    கவி பாடும் மனத்திற்குள்
    கசிந்தோடும் தேனாக
    தமிழ் வாழும் போதினிலே
    தமிழுக்கு என்ன குறை ?.!!

    கற்கண்டுச் சொல்லெடுத்து
    காவியமாய்த் தீட்டி வரும்
    நற் தொண்டு வாழ்கவென
    நாளெல்லாம் வாழ்த்துகின்றேன் ஐயா !

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அளித்த அருங்கவிதை எந்நாளும்
      செம்பால் இனிமையெனச் செப்பு!

      Supprimer
  4. என்னாளும் இனிக்கின்ற தமிழ்வேண்டும்!

    அருமையான சொல்லோவியம் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தான சொல்லெடுத்து முன்மொழிந்தீா்! வாழ்த்துகிறேன்
      கொத்தான பூக்கள் கொடுத்து!

      Supprimer
  5. செதுக்கிய சிற்பமாய் திகழட்டும் செந்தமிழ்
    எந்நாளும் உம்நாவில் சிறந்து....!
    வாழ்க வளமுடன்.....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிற்பமாய் என்றன் செழுந்தமிழ் மின்னுவது
      நற்குரு தந்த நலம்!

      Supprimer
  6. பூவரசம் பூத்திருக்கு!
    புதுச்சேவல் கூத்திருக்கு!
    பாவரசே உனையெண்ணிப்
    பாவைமனம் காத்திருக்கு!

    அருமையான தமிழ்த்தேன் சுரக்கும் வரிகள்....

    RépondreSupprimer
  7. சிட்டாகப் பறந்துவந்தேன்
    சீர்துாக்கும் பாட்டாலே!
    தட்டாமல் இனிவருவேன்
    தமிழமுத மெட்டாலே!

    RépondreSupprimer
  8. சொல்லோ வியத்தில் சுடர்கின்ற நற்றமிழில்
    கல்லாதான் கூடக் கவிபடைப்பான் - வல்லவரே
    நாவினிக்கப் பாடி நனைகின்றேன் ! எல்லோர்க்கும்
    பாவினிக்கத் தந்த படைப்பு

    அருமையா இருக்கு கவிஞர் அண்ணா இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    RépondreSupprimer

  9. மாடோடி! மானோடி! வண்ண மயிலோடி
    நாடோடி பாட்டிசைத்தாய் நன்றாக! - ஓடோடி
    நான்வந்தேன்! நல்ல தமிழ்உண்டேன்! வாழ்த்தென்னும்
    தேன்தந்தேன் நெஞ்சம் திளைத்து!

    RépondreSupprimer