jeudi 13 février 2014

தையே தமிழர் புத்தாண்டு!




தையே தமிழர் புத்தாண்டு!

பேரன்பு உடைய பெரியோரே!
     பெருமை நிறைந்த பெண்டீரே!
பாரன்பு உடைய பாவலரே!
     பசுமைத் தமிழின் காவலரே!
சீரன்பு உடைய சான்ரோரே!
     சிறப்பை மேவும் இளைஞர்காள்!
மாரன் புடைய தமிழ்மறவன்
     வணக்கம் கூறித் தொடர்கின்றேன்!

கூர்அம்பு புடைய நுண்கவிதை!
     கொள்கைப் பிடிப்பு! மொழிப்பற்று!
போர்அம்பு உடைய செயல்வேகம்!
     பொலியும் மனித நன்நேயம்!
கார்அம்பு உடைய குளிர்நெஞ்சம்!
     கடமை! கருணை! இனமேன்மை!
ஓர்அன்பு உடைய மலர்ப்பார்வை
     உதித்தாய் தமிழே! நான்வளர்ந்தேன்!

--------------------------------------------------------------------------------------------

பொங்கல் திருநாள் கொண்டாடு!
     பொய்யை எரித்து நின்றாடு!
எங்கள் தாயின் பண்பாடு!
     இந்த உலகின் பூக்காடு!
திங்கள் போற்றும் வழிபாடு!
     செம்பும் தமிழோ தேன்கூடு!
சங்கம் சமைத்த பொன்னேடு!
     தழைத்தால் சிறக்கும் நம்வீடு!

தையே தமிழர் புத்தாண்டு!
     தாயாம் தமிழை நீ..வேண்டு!
கையோ காலோ பிடிக்காமல்
     காற்றாய் எழுக மறம்பூண்டு!
மையோ என்று மனமுற்றால்
     வாழ்வோ அடைத்த சிறைக்கூண்டு!
வையம் வாழ்த்த செயற்படுவாய்
     வன்மைத் தமிழா சீர்ஆண்டு!

-------------------------------------------------------------------------------------------- 

வாணி தாசன் கழகத்தை
     வளர்க்கும் இனிய நண்பர்களே!
ஏணி யாக நின்றிங்கே
     தமிழை ஏற்றும் அன்பர்களே!
தோணி யாகத் தமிழ்ச்சீரைத்
     சுமர்ந்து செல்லும் தொண்டர்களே!
காணி கொழிக்கும்! நான்பாடும்
     கவிதை கொழிக்கும்! வணங்குகிறேன்!

கலிய பெருமாள் வழிகாட்டக்
     கடமை யாற்றும் மறவர்களே!
வலிய வந்து சிலபொய்யர்
     வதைக்கக் கூடும்! அஞ்சாதீர்!
மலர வேண்டும் தமிழாட்சி!
     மணக்க வேண்டும் குறள்மாட்சி!
புலர வேண்டிக் கருத்தரங்கைப்
     பூந்தேன் கவியால் திறக்கின்றேன்!

25.01.2014

8 commentaires:

  1. வணக்கம் !

    தையே தமிழரின் புத்தாண்டு என இடித்து உரைத்த அருமையான
    கவிதை வரிகளுக்கும் இனிய காதல் கவிதைகள் தொடுக்கும் நன்
    மனதிற்கு என் மனமார்ந்த காதலர் தின வாழ்த்துக்களும் ஐயா .

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா.

    புலர்ந்த காலைப்பொழுதில் மனதுக்கு இதமான கவிப்..பாமாலை மனதை வசிகரம் செய்தது..வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. வணக்கம்
    த.ம 3வத வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. பல தகவல்களைச் சொல்லி விட்டீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. அருமை ஐயா! தைத்திங்களே நம் முதல் திங்கள்!!!

    RépondreSupprimer
  6. "தையே தமிழர் புத்தாண்டு!
    தாயாம் தமிழை நீ..வேண்டு!
    கையோ காலோ பிடிக்காமல்
    காற்றாய் எழுக மறம்பூண்டு!
    மையோ என்று மனமுற்றால்
    வாழ்வோ அடைத்த சிறைக்கூண்டு!
    வையம் வாழ்த்த செயற்படுவாய்
    வன்மைத் தமிழா சீர்ஆண்டு!" என்ற
    வேண்டுதலை விரும்பியே
    நானும் வரவேற்கிறேன்!

    RépondreSupprimer
  7. தையே தமிழர் புத்தாண்டு!
    தாயாம் தமிழை நீ..வேண்டு!
    கையோ காலோ பிடிக்காமல்
    காற்றாய் எழுக மறம்பூண்டு!
    மையோ என்று மனமுற்றால்
    வாழ்வோ அடைத்த சிறைக்கூண்டு!
    வையம் வாழ்த்த செயற்படுவாய்
    வன்மைத் தமிழா சீர்ஆண்டு!
    ரசித்தேன் அருமை ...! வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer