mercredi 18 décembre 2013

மடக்கு அணி வெண்பா - பகுதி 1



மடக்கு அணி வெண்பா!

செவ்வாய்க் கிழமையடி! சின்னவளே உன்னுடைய
செவ்..வாய் கிடைத்தால் சிறக்குமடி! - அவ்..ஆறு
தேன்இனிமை பெற்றிடவே நீராடும் நேரிழையே!
நான்இனிமை பெற்றிடவே நல்கு!

அம்மாடி என்றயர்ந்து சும்மா..நீ நிற்காதே!
அம்..மாடி ஏறி அழைத்திடுவோம்! - நம்மோடு
வெண்ணிலா வந்து விளையாட! பெண்ணே!நம்
கண்ணுலா காணும் கமழ்ந்து!

பாவை தருகின்ற பார்வைக்(கு) இனிக்கின்ற
பா..வைப் படைக்கின்ற பாவலன்யான்! - கோவைக்
கனியழகே! கொஞ்சும் குரலழகே! உன்னால்
இனியழகே யாவும் எனக்கு!

குருத்துச் சிரிப்பழகே! கோலவிழிப் பெண்ணே!
பெருத்துச் செழிக்கின்ற பேறே! - திரண்ட
மலைத்தேன் மொழியே! மலைத்தேன் உன்றன்
கலைத்தேன் கவிகளைக் கண்டு!

கனிவாய்க் கதைக்கும் கவிஞனெனை உன்றன்
கனி..வாய்க் கவிதை கலக்கும்! - தனியாய்
இருவரும் இன்பக் கதைபடிப்போம்! சொர்க்கம்
இரு..வரும் நம்முன் எழுந்து!

இலக்கணம்

ஒரேசொல் பிரியா நிலையில் ஒருபொருளும்,  
பிரிந்த நிலையில் வேறொரு பொருளும் தருதலுண்டு. அவ்வாறான ஒருசொல் இருமுறை பாடலில் வந்து   
வெவ்வேறு பொருள் தருமாறு அமைவது  
மடக்கு அணி எனப்படும் 

[வெவ்வாய் - செவ்..வாய்]
[அம்மாடி - அம்..மாடி] 
[பாவை - பா..வை] 
[மலைத்..தேன் - மலைத்தேன்] 
[கனிவாய் - கனி..வாய்]
[இருவரும் - இரு..வரும்]

18.12.2013

18 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    மடக்கு அணி வெண்பா மிக அருமை ..அதற்கான விளக்கமும் அருமை வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    மடக்கு அணி வெண்பா மிக அருமை!

    அதன் இலக்கணம் பல சொற்களை எம்மைத் தேட வைக்கின்றது.
    நல்ல பயிற்சியும் கூடவே முயற்சி செய்தால் அடையலாம் உயற்சி!
    மிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ==============================

    நானும் முயன்றேன். ஈற்றடியில் இறுதிச் சீர் இரண்டுதரம் வந்ததைத்
    தவிர்க்க முடியாது போயிற்று...

    தாவரம் பூமியில் தந்திடும் சீரெனத்
    தா..வரம் எம்முயிர் தாங்கவே! - தேவனே!
    சூழ்ந்திடும் சோகம் துயர்தீர வேண்டுமே!
    வாழ்ந்திடத் தாரும் வரம்!

    தாவரம் பூமியில் தந்திடும் சீரெனத்
    தா..வரம் எம்முயிர் தாங்கவே! - தேவனே
    சூழ்ந்திடும் சோகம் துயர்தீர வேண்டுமே
    வாழ்ந்திடத் தாரும் வரம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      படித்தேன்! படைத்திட்ட பாவை! அதனைப்
      படித்..தேன் என்றே பருகு!

      Supprimer

    2. வணக்கம்!

      வாழ்ந்திடத் தாரும் வளம்!

      என்று ஈற்றுச் சீரை அமைக்கலாம்

      Supprimer
  3. வணக்கம் கவிஞரே...!
    மலைத்தேன் உன்றன்
    கலைத்தேன் கவிகளைக் கண்டு!

    அப் பா.....வை விளக்கிய கவி....தையில்
    பொங்கலிட பாடு அம் ....மணி சேர்ந்தாட
    சிறக்கும் கண்மணியே வா...தையில்
    ஆடினால் விலகும் துன்பம்
    மகிழும் வருடம் முழுதும்.

    ஒரு சிறு எறும்பு திருப்பாற்கடல் முழுதும் குடித்து விட உன்னியது போன்றது தான் என் முயற்சி.

    முயற்சி தான் செய்திருக்கிறேன். பிழை இருக்கும் பொறுத்தருள்க.
    பகிர்வுக்கு நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முயற்சி திருவினை யாக்கும்! மொழியில்
      பயிற்சி தொடா்ந்தால் பயள்!

      Supprimer
  4. அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கரும்பை நிகா்த்த கவிகள் அளித்தோம்
      விருப்பிச் சுவைப்பீா் விரைந்து!

      Supprimer
  5. என்னவெனச் சொல்லி உங்களை மெச்சுவது..:)

    ஆழக் கடல் நீங்கள்.!!!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிக்கும் கருத்தை எழுதும் கொடியை
      இனிக்..கும் மிடுவேன் எழுந்து!

      Supprimer
  6. நன்றாக இருக்கிறது ஐயா மடக்கு அணி வெண்பா. பகிர்விற்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மடக்கும் அணியை மகிழ்ந்து படித்து
      தொடுத்தீா் கருத்தைத் துணிந்து

      படைக்கும் கவியெனைப் பார்!

      Supprimer

  7. மடக்கணி பாடி மனங்களை மெல்ல
    மடக்கும் கவியே வணக்கம்! - தொடக்கம்
    அருமை! முடிவும் அருமை! வளா்க
    பெருமை அனைத்துமே பெற்று!

    RépondreSupprimer

  8. வணக்கம்!

    நாட்டில் மடக்கும் நபருண்டு! செந்தமிழ்ப்
    பாட்டில் மடக்கும்நற் பாவலன்யான்! - ஏட்டில்
    மணக்கும் அணிகளை மங்கையவள் மேலே
    இணைக்கும் கவிகள் இனிப்பு!

    RépondreSupprimer
  9. சொற்சுவையில் பொருட்சுவையில்
    மலைத்தேனை மிஞ்சும் கவிதைகளைப் படித்து
    மலைத்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  10. மடக்கு அணி வெண்பா.......

    படித்தேன். ரசித்தேன்.

    RépondreSupprimer
  11. வணக்கம்
    ஐயா.
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் ஐயா சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/06/2.html?showComment=1403913354053#c858988773780526037

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer