samedi 28 décembre 2013

விண்ணின் மைந்தன்



விண்ணின் மைந்தன்

ஓலைக் குடிலில் அருட்கர்த்தர்
     உலகைக் காக்கப் பிறந்துள்ளார்!
காலைக் கதிர்போல் எவ்விடத்தும்
     கருணை கமழ நிறைந்துள்ளார்!
மாலை ஏந்தி மன்றாடு!
     மனமே ஒன்றிப் புகழ்பாடு!
சாலை யாவும் பூத்தாடும்
     சோலை யாக மணந்திடுமே!

பாவச் சுமையைச் சுமந்திடவே
     பரமர் யேசு பிறந்துள்ளார்!
ஆவல் கொண்டே உலகுயிர்மேல்
     அன்பை அருளைத் தந்துள்ளார்!
தாவல் இன்றி ஓர்நிலையில்
     தேவர் உருவை எண்ணிடுக!
நாவால் நாளும் சீர்பாடி
     மூவா இனிமை கண்டிடுக!

விண்ணின் செல்வர்! மரி..வயிற்றில்
     விளைந்த செல்வர்! அவர்உதித்த
பெண்ணின் பெருமை பேசுகையில்
     பெருகிப் பாயும் பேரின்பம்!
மண்ணின் மாசைத் துடைத்திடவே
     மழைபோல் வந்த திருக்கர்த்தர்!
கண்ணின் காட்சி அவரானால்
     கருத்தின் மாட்சி ஒளிர்ந்திடுமே!

பொய்யுள் புரளும் இப்புவியை
     மெய்யுள் புரட்டிப் போட்டவரை
மெய்யுள் நாமும் தரித்திட்டால்
     மேன்மை யாவும் அடைந்திடலாம்!
வெய்யில் கூடக் குளிராகும்!
     விரிநீர் கூட வழியாகும்!
செய்யும் செயல்கள் செம்மையுறத்
     தேவர் பெயரைச் செப்புகவே!

விண்மீன் தோன்றி வழிகாட்டும்
     விடிவை நல்கும் இடத்திற்கு!
தண்மீன் நீந்திக் களிப்பதுபோல்
     சார்ந்து நின்றோர் மகிழ்ந்தனரே!
கண்ஏன்? வாய்ஏன்? நம்செவிஏன்?
     கர்த்தர் உருவைக் கண்டிடவும்!
பண்தேன் பாடிக் கேட்டிடவும்!
     பரம பிதாவே அருளுகவே!

சிலுவை சுமந்து நம்கர்த்தர்
     உலகைச் சுமந்து நின்றாரே!
மலரை நிகர்த்த திருவடியில்
     வன்மை ஆணியைக் கொண்டாரே!
நிலவைப் பிடித்துச் சிறையிலிட
     நினைத்தல் சரியோ? மீண்டுமவர்
நலனை நல்க உயிர்பெற்றார்!
     நாதர் மாண்பைப் போற்றுகவே!

தலையில் முள்ளால் அணிதாங்கித்
     தரையைத் தாங்கும் அருட்தந்தை!
கலையில் முழ்கும், கனித்தமிழின்
     கவியில் முழ்கும் உளத்தைப்போல்
சிலையில் மின்னும் அவர்உருமுன்
     சிந்தை செலுத்திச் செபித்திடுக!
மலையில் தோன்றும் நீராக
     மனத்துள் தோன்றும் மகிழ்வூற்றே!

அந்த இறுதி நாள்களிலே
     அடைந்த துயருக்(கு) அளவுண்டோ?
எந்தப் பொழுதும் அவருள்ளம்
     இந்த உலகை எண்ணியதே!
தந்த உரைகள் நமக்குள்ளே
     தங்கச் செய்தால் தவமேனோ?
சொந்த மாகத் தூயவரைச்
     சூடும் வாழ்வு சுடர்ந்திடுமே!

இறையின் ஆட்சி உலகெங்கும்
     எண்ணில் அடங்காச் செயலாற்றும்!
குறையும் போக்கில் சிந்தித்தால்
     கொள்ளை அழகைக் காண்பாரோ?
நிறையும் இனிமை நிலைத்திடவே
     நினையும் புனிதர் திருச்செயலை!
மறையின் தலைவர் நம்கர்த்தர்
     மாண்பை வாழ்த்திப் பாடுகவே!

அன்பே அவரின் வழியென்பேன்!
     அருளே அவரின் விழியென்பேன்!
இன்பே நல்கி நலஞ்சேர்த்தே
     இனிக்கும் அவரின் மொழியென்பேன்!
குன்றே உருகும் அருட்பொழிவில்
     குளித்தால் நீங்கும் பழியென்பேன்!
இன்றே அவரின் பிறந்ததினம்
     இயங்கும் புவியே கொண்டாடு!

25.12.2013

10 commentaires:

  1. சிறப்பான கவிதை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
  3. மண்ணின் மைந்தருக்கேற்ற சிறப்பான கவிதை...

    RépondreSupprimer
  4. அன்புருவானவருக்கு
    அருமைக் கவிதை
    நன்றி ஐயா
    த.ம.5

    RépondreSupprimer
  5. வணக்கம் ஐயா!

    அருளாளன் புகழ்தன்னை அழகிய விருத்தமதில்
    அகமகிழப் பாடினீர்கள் ஐயா! மிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  6. குன்றே உருகும் அருட்பொழிவில்
    குளித்தால் நீங்கும் பழியென்பேன்!...

    வாழ்வில் இதைவிட வேறென்ன வேண்டும்...
    மிக அருமையான கவிமாலை!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  7. வணக்கம் !...

    இறையின் ஆட்சி உலகெங்கும்
    எண்ணில் அடங்காச் செயலாற்றும்!
    குறையும் போக்கில் சிந்தித்தால்
    கொள்ளை அழகைக் காண்பாரோ?
    நிறையும் இனிமை நிலைத்திடவே
    நினையும் புனிதர் திருச்செயலை!
    மறையின் தலைவர் நம்கர்த்தர்
    மாண்பை வாழ்த்திப் பாடுகவே!

    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  8. நிலவைப் பிடித்துச் சிறையிலிட
    நினைத்தல் சரியோ? மீண்டுமவர்
    நலனை நல்க உயிர்பெற்றார்!
    நாதர் மாண்பைப் போற்றுகவே!

    முத்தாலே பாமாலை முன் வைத்தீர்
    கர்த்தர் தப்பாமல் கருணை புரிவர் உவந்து

    அருமை அருமை....!
    நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
  9. "அன்பே அவரின் வழியென்பேன்!
    அருளே அவரின் விழியென்பேன்!
    இன்பே நல்கி நலஞ்சேர்த்தே
    இனிக்கும் அவரின் மொழியென்பேன்!" என
    அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!
    சிறந்த பகிர்வு.

    RépondreSupprimer
  10. வணக்கம்
    ஐயா.
    படிக்கும் போது உள்ளம் திகட்டாத வரிகள்.. அருமை வாழ்த்துக்கள் ஐயா


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer