mardi 3 décembre 2013

நெஞ்சமே கோயில்



நெஞ்சமே கோயில்! நினைவே மந்திரம்!

வல்லோன் வகுத்த வழியை அறிய
எல்லா உயிரும் இன்பம் அடைய
அன்பாம் அமுதை அளிக்கும் குருவை
என்றும் நாடி உண்மை உணர்க!
இருளைப் போக்கி, அருளைத் தேக்கி,
மருளை நீக்கி மகிழ்வை நல்கும்
குருவே வாழ்வு! குருவே உலகும்!
குருவே இறையின் உருவம் காண்க!
ஆசை அழிவாம் பாதை! ஓம்எனும்
ஓசை உலகின் தொடக்கம்! இறைவன்
எங்கும் நிறைந்து இருப்பதைக் காணப்
பொங்கும் மனத்தைப் பொலியச் செய்க!
ஐம்புலன் அடக்கி ஆணவம் போக்கிச்
செம்பொன் சுடரின் சிறப்பை ஓதுக!
குருவடி தொழுக! குறைகள் அகலும்!
திருவடி போற்றித் தேறுக! தேறுக!
முன்னை வினையால் அன்னைக் கருவில்
எண்ணிலாப் பிறவிகள் எய்திய ஆன்மா
தன்னை அறிந்து, தவவொளி மேவப்
பொன்னை நிகர்த்த நற்குரு புராணம்
நல்வழி காட்டும்! நம்மின் வாழ்வு
செல்வழி காட்டும்! சீரினை ஊட்டும்!
நெஞ்சமே கோயில்! நினைவே மந்திரம்!
தஞ்சம் குருவின் தண்மலர் அடிகளே!

குரு புராணம் இதழ் - 26-01-2005 
 

13 commentaires:

  1. நெஞ்சமே கோயில் நினைவே மந்திரம்
    தஞ்சமடைவோம் குருவின் தண்மல்ர் அடிகளில்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நெஞ்சமே கோயில்! நினைவேநன் மந்திரம்
      கொஞ்சுமே இன்பம் குவிந்து!

      Supprimer
  2. நெஞ்சமே கோயில்! நினைவே மந்திரம்!
    தஞ்சம் குருவின் தண்மலர் அடிகளே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குருவின் மலரடியைக் கோயிலெனக் கொண்டால்
      உருவில் பெருகும் ஒளி

      Supprimer
  3. /// ஐம்புலன் அடக்கி ஆணவம் போக்கிச்
    செம்பொன் சுடரின் சிறப்பை ஓதுக... ///

    சிறப்பான வரிகள் பல...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உடல்கொண்ட ஐம்பொறியை மெல்ல ஒடுக்கிச்
      சுடா்கொண்ட வாழ்வைத் தொடு!

      அடங்குமெனில்

      Supprimer
  4. வணக்கம் ஐயா!..
    நம் மனமும் உடலும் மாசகற்ற மாண்புறும் வாழ்வென
    பயிற்சிகள் பலபோதித்த குரு வேதாத்ரி மகிரிஷியைப் போற்றிய
    அகவற்பா மிக அருமை ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நற்குரு நாதன் நறுமலா்த் தாள்களைப்
      பற்றுக மேவும் பயன்!

      Supprimer
  5. குருவைப் போற்றி அருமையான கவிதை!

    வாழ்த்துக்கள்!


    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      குருவடியைப் போற்றிக் குலவுகின்ற ஆன்மா
      இருளடியை ஏற்கா இனி

      Supprimer

  6. பொற்புறு வண்ணப் புகழ்த்தமிழ் மின்னிடச்
    சற்குரு நாதனைச் சாற்றினீா்! - நற்கரு
    என்னுள் உதித்ததுவே! இன்னல் இருளகற்றி
    இன்பம் பதித்தது வே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அன்புடைத் தோழா! அருமைத் தமிழ்ச்செல்வா!
      பொன்னுடை தந்தாய் புகழ்ந்தேத்தி! - என்றென்றும்
      இன்பம் பதிக்கின்ற பெண்பாவை ஈந்தென்றன்
      துன்பம் துடைத்தாய் தொடா்ந்து!

      Supprimer
  7. குருவின் பெருமை போற்றிடும்
    அற்புதமான பாடல்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer