mardi 24 décembre 2013

திருமண மண்டபம் - பகுதி 1




இராகவனின் வில்லின் விளைவு
'திருமண மண்டபம்'

புதுவைக் கம்பன் விழா 12.05.2012

தமிழ் வணக்கம்

என்தாயே! என்னுயிரே! இனிக்கும் தேனே!
    என்றுமள செந்தமிழே! கம்பன் தந்த
இன்பாவே! என்வாழ்வே! அமுதின் ஊற்றே!
    இணையில்லா இன்றமிழே! புலவர் மொய்க்கும்
மென்காவே! நன்மணமே! புதுமைப் பெண்ணே!
    முன்மொழியே! முத்தமிழே! முல்லைக் காடே!
என்நாவே வெற்றிபெற வாழ்த்துக் கூறி
    இவ்வரங்கில் வந்தென்னைக் காப்பாய் நீயே!

இறை வணக்கம்

வில்லழகா! சீர்ராமா! என்றன் மன்னா!
    வேடவனின் அருந்தோழா! ஆழ்வார் ஏத்தும்
நல்லழகா! நறுந்தமிழ்போல் இனிக்கும் இன்ப
    நலத்தழகா! நாராய ணா!என்(று) ஓதும்
சொல்லழகா! மராமரங்கள் ஏழும் சாய்த்த
    மல்லழகா! மார்பழகா! தந்தை சொல்லின்
செல்லழகா! யான்பாடும் பாட்டில் கொஞ்சம்
    நில்லழகா! நினையென்றும் போற்று வேனே!

தலைவர் வணக்கம்

வல்லதமிழ் வடிக்கின்ற தலைவர்! வண்ண
    வார்த்தைகளில் நமைமயக்கும் மறவர்! என்றும்
உள்ளதமிழ் ஓங்குதமிழ் உயர்வைப் பாடி
    உள்ளத்தைத் தொடுகின்ற அன்பர்! மன்றில்
வெல்லுதமிழ் உரையாளர்! கவிதைச் செல்வர்!
    சொல்லுகவி நம்முயிரைச் சொக்கச் செய்யும்!
நல்லதமிழ்ப் பாவாணர் அப்துல் காதர்
    நற்றலைமைக் கென்வணக்கம் நவிலு வேனே!

முன்னிலை வணக்கம்!

கொஞ்சுதமிழ் பேசும் எங்கள்
    கோவிந்த சாமி ஐயா!
விஞ்சுதமிழ் வாணர் நல்கும்
    விருந்துண்டு மகிழும் உன்றன்
நெஞ்சு..தமிழ் வாழும் இல்லம்!
    நினைவலையில் தமிழே துள்ளும்!
மஞ்சுதமிழ் பாடும் தாசன்
    வணங்குகிறேன்! வாழ்த்து வீரே!

அவை வணக்கம்

கம்பன் கவியில் கட்டுண்டு
    களிக்க வந்த அன்பர்களே!
நம்பன் இராமன் திருவருளால்
    நடக்கும் கவிதை அரங்கத்தில்
எம்மின் பாட்டில் ஏதேனும்
    இனிமை இருப்பின் சுவைத்திடுவீா்!
உம்மின் கைகள் ஒலித்திடுவீா!
    உள்ளம் உவந்த எம்வணக்கம்!

தொடரும்

6 commentaires:

  1. தங்களது பாட்டின் ஒவ்வொரு வரியும் இனிமைதான்.
    நன்றி ஐயா
    த.ம.1

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு தலைப்பின் கீழ் அமைந்துள்ள கவிப்பாக்கள் மிக அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் ஐயா
    த.ம 3வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!
    விருத்தப் பாக்களில் கவியரங்கக் கவிதைகளை கண்டு
    உள்ளம் உவகை அடைகிறேன் ஐயா!

    இறை வணக்கத்தில் ஸ்ரீராமனையே.. கொஞ்சம் நில்லழகா... என்ற அடியை
    வாசிக்கும்போது காட்சியையும் கண்ணில் காண்கின்றேன்!

    மிக மிக அருமை!.. தொடருங்கள் ஐயா!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  4. வில்லேந்தியவரின் புகழ் பாடும் சொல்லழகரின்
    கவிதைகள் சுவை தேனில் தோய்த்த பலாப்பழமாயிருக்கிறது!

    தொடருங்கள் கவிஞரே!..
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. செல்லழகா! யான்பாடும் பாட்டில் கொஞ்சம்
    நில்லழகா! நினையென்றும் போற்று வேனே!

    கொஞ்சு தமிழை
    மிஞ்சும் உமது தமிழ்
    விஞ்சு தமிழ் பாடும்
    உமை கெஞ்சும்
    கொஞ்சம் உம் புகழ்
    பாடிடவோ என்று.....! அப்படி இருக்கும் போது வில்லிற்கே விடை சொன்ன ராமர்
    தங்கள் சொல்லுக்கும் விடை பகர்வார்.

    அருமை வாழ்த்துக்கள்....!
    என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் நத்தார் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...!

    RépondreSupprimer
  6. உன்றன் பாட்டின் உயிரோசை
    உளத்தில் இனிமை சேர்க்கிறது
    நன்றாய் தந்தீர் நாவினிக்க
    நானும் சுவைத்தேன் நலமாக
    வெண்பா விருத்தம் குறள்களுடன்
    விளக்கும் இலக்கிய வரலாற்றில்
    என்னுள் அறிவும் சேர்க்கிறது
    என்றும் மறவேன் உம்புகளை !


    அழகிய விருத்தங்கள் படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள்
    த ம 10

    RépondreSupprimer