samedi 27 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 108]





காதல் ஆயிரம் [பகுதி - 108]


921.
மிதிவண்டி செல்லுதடி! மென்மலர்க்கை பட்டு
மதிவண்டி செல்லுதடி! மானே! - புதிய
உலகத்தைக் கண்டேன்! உணர்வேறி என்னுள்
பல..வித்தை கண்டேன் பறந்து!

922.
தொடர்வண்டி நல்லசைவில் தூயவளைத் தொட்டே
இடர்இன்றி இன்பம் இசைத்தேன்! - படர்கின்ற
எண்ணங்கள் காட்டும் எழிற்சொர்க்கம்! பொன்விழி
வண்ணங்கள் காட்டும் வரைந்து!

923.
இருமாட்டு வண்டியை நானோட்ட, பின்னே
அரும்பாட்டு பாடி அணைத்தாள்! - வரும்காட்டுப்
பாதை உரைத்தாள்! பருவமொளிர் பார்வையிலே
போதை கொடுத்தாள் புணர்ந்து!

924.
துள்ளுந்து! காதல் சுகவுந்து! பொன்னுலா
செல்லுந்து! காதல் சிறப்புந்து! - வெல்லுகிற
சொல்லுந்து போன்றே சுவையுந்து! தேனிலவை
உள்ளுந்தும் ஆசை உணர்வு!

925.
மல்லையைக் காண மகிழுந்தில் நாம்சென்றோம்!
எல்லையை எட்டும்முன் அங்கொரு - கொல்லையில்
நீராடி இன்புற்றோம்! நெஞ்ச நினைவுகளைச்
சீராடி இன்புற்றோம் சேர்ந்து!

(தொடரும்)

14 commentaires:

  1. உள்ளுந்தும் ஆசை உணர்வை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உள்ளுந்தும் ஆசைகளை ஊட்டும் கவிபடித்துத்
      தள்ளுந்து போல்நான் தவிக்கின்றேன்! - கள்ளுண்டு
      பாடிக் களித்தேன்! பருவம் படா்ந்தோங்கி
      ஆடிக் களித்தேன் அகம்!

      Supprimer
  2. வண்டி வழியே வருகிற காதலால்
    நெண்டி வருதே நினைவு!

    எம்மை எம் ஊருக்குகே அனுப்பிவிட்டீர்கள்!
    நினைவுகள் நிழலாடுகிறது!

    வாகனங்களை வைத்தே நல்ல சொல்லாடற் கவிதைதகள்!

    மிகமிக ரசித்தேன்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வண்டியிடும் வண்ணக் கவிதைகளைத் தாம்படித்து
      மண்டியிடும் காதல் மலா்மனமே! - உண்டியிடும்
      பொற்காசு போன்றே கிடக்கும் உணா்வுகளைச்
      சொற்பேசும்! இங்கே சுவைத்து!

      Supprimer
  3. மகிழுந்து பயணமெங்கே
    மனம் அழைக்கும் தமிழ் வளமிங்கே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தென்றல் பயணமெனச் செந்தமிழில் நான்பயணம்!
      என்றன் இளங்கொடியின் கை..கோர்த்து! - இன்பத்தின்
      எல்லையை எட்டி இசைத்திடுவேன்! இல்வுலகத்
      தொல்லையைக் கட்டித் தொலைத்து!

      Supprimer
  4. ஐயா வணக்கம்!

    எத்தனை வண்டிகளிலே எடுத்துவந்தீங்கய்யா இந்தப் பொல்லாத காதலை...
    ஹையோ... ஒவ்வொரு வண்டியிலும் கண்ட கவிநயம் இங்கு சொல்லமுடியலயே...;).

    ம்.ம் வண்டிகள் இன்னும் இருக்காய்யா?

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எண்ணிலாக் கற்பனை வண்டிகள் பூட்டுகிறேன்!
      வெண்ணிலா மேல்சென்று வென்றிடவே! - கண்களில்
      பெண்ணிலா வந்து பிணைந்தொளிர, ஓா்நொடியும்
      மண்ணிலா நிற்கும் மனம்?

      Supprimer
  5. துள்ளுந்து! காதல் சுகவுந்து! பொன்னுலா
    செல்லுந்து! காதல் சிறப்புந்து! - வெல்லுகிற
    சொல்லுந்து போன்றே சுவையுந்து! தேனிலவை
    உள்ளுந்தும் ஆசை உணர்வு!

    ------------

    அருமை.... ரசித்தேன்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய வருகைக்கு நன்றி! இதயம்
      கனிய உரைத்தீா் கருத்து!

      Supprimer

  6. பண்டிகை போலினிமை பாடிப் படைக்கின்ற
    வண்டிகளின் வண்ண அணிவகுப்பு! - நண்பனே!
    கற்பனைத் தேரேறிக் காற்றாய்ப் பறக்கின்றாய்!
    நற்றமிழ் தந்த நலம்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சீறிவரும் கற்பனைகள் சிந்தை புகுந்தனவே!
      மாறிவரும் என்றன் மனவோட்டம்! - ஊறிவரும்
      இன்ப உணா்வுகளை ஏந்தும் நினைவுகளால்
      துன்பம் தொடரும் சூழன்று!

      Supprimer
  7. துள்ளுந்து! காதல் சுகவுந்து! பொன்னுலா
    செல்லுந்து! காதல் சிறப்புந்து! - வெல்லுகிற
    சொல்லுந்து போன்றே சுவையுந்து! தேனிலவை
    உள்ளுந்தும் ஆசை உணர்வு!

    கைகட்டி காத்திருக்கு சொற்கள் ஐயா -உங்கள்
    கவிதையிலே பணியாற்ற ஐயாஐயா
    பைகட்டி பழக்காயை பறித்தல் போன்றே-மிகவும்
    பக்குவமாய் சொற்களைநீர் கோர்த்தல் சான்றே

    RépondreSupprimer
  8. வணக்கம்
    ஐயா
    மிதிவண்டி செல்லுதடி! மென்மலர்க்கை பட்டு
    மதிவண்டி செல்லுதடி! மானே! - புதிய
    உலகத்தைக் கண்டேன்! உணர்வேறி என்னுள்
    பல..வித்தை கண்டேன் பறந்து!

    என்ன வரிகள் ஐயா என்னால் சொல்ல வார்தைகள் இல்லை, படித்தேன் அருமையாக ரசித்தேன் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer