samedi 9 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 25]





காதல் ஆயிரம் [பகுதி - 25]

241.
பள்ளி விடுமுறையில் பாட்டியின் வீடுசெல்லச்
சொல்லிப் பிரிந்தாள் சுகந்தானோ? - கிள்ளையே!
மல்லிக் கொடியருகே அள்ளி அணைத்தசுகம்
துள்ளிக் குதிக்கும் துணிந்து!

242.
அன்னம் பதுங்கிவிடும்! அல்லி முகஞ்சாயும்!
என்னவள் வாழும் இடத்தினிலே! - தென்பொதிகைத்
தென்றல் மணங்கமழும்! தேன்பொழியும்! இன்பமெலாம்
மன்றம் அமைக்கும் மலா்ந்து!

243.
நீவரும் நாளை எதிர்ப்பார்த்(து) எதிர்ப்பார்த்துப்
பூவரும் சோலையாய் உள்பூத்துச் - தேவதையே!
பாவளம் நல்கவும்! காவளம்போல் வாழ்வினில்
மாவளம் நல்கவும் வா!

244.
சுற்றுலா செல்கிறாள்! சொன்னசொல் கேட்டுநான்
பற்றிலாப் பாழ்நிலை உற்றதுமேன்? - கற்றவளே!
நற்பலாத் தேன்சுளையே! நல்லவளே! நீயின்றி
முற்றிலாத் துன்பமே மூண்டு!

245.
துாங்கு முகமரங்கள்! துாங்காமல் உன்னழகில்
ஏங்கு முகங்கொண்டே இன்னலுறும்! - தேங்குதுயா்
நீங்கு முகம்என்றோ? நேரிழையே நாமிணைந்து
ஓங்கு முகம்என்றே ஓது!

246.
நாளெல்லாம் என்மனத்தில் நின்றாடும் நாயகியே!
தாளெல்லாம் தாளமிடச் செய்பவளே! - கோலெடுத்து
நுாலெல்லாம் தீட்டுகிறாய்! நுண்ணறிவு பாமழையில்
நாளெல்லாம் நிற்பேன் நனைந்து!

247
மழையின்றி வாடுகின்ற மன்னுயிர்போல், பார்வை
இழையின்றி என்னுயிரும் வாடும்! - பிழையின்றி
நான்வாழ நல்லருள் செய்கவே! நற்றமிழாம் 
தேன்வாழைப் பாக்களைத் தீட்டு!

248.
காடாறு மாதமாய் நாடாறு மாதமாய்
பீடோடு பேசுவாய்! பின்வரும்நாள் - வாடிட!யான்
சூடோடு பேசுவாய்! சூத்திரம் நானறியேன்
ஏடேதும் உலதோ இயம்பு!

249
கன்னெஞ்சம் கொண்டவளே! காதலெனும் நோய்பிடித்து
என்னெஞ்சம் ஏந்துதுயா் எண்ணாயோ? - பெண்ணெஞ்சைப்
பொன்னெஞ்சம் என்றும்பூ நெஞ்சமென்றும் பாவலா்கள்
பண்கொஞ்சப் பாடியதும் பாழ்!

250
ஓங்கும் உணா்ச்சியினால் ஏங்கும் இதயத்தைத்
தாங்கும் திறனின்றி நான்தவிக்க! - மங்கையவள்
தூங்கும் சுகமென்ன? துன்பக் கடல்பொங்கி
வாங்கும் உயிரை வளைத்து!

(தொடரும்)

8 commentaires:

  1. ஏடெங்கே தேடுவேன்
    பாரில் எங்கும் உம்கவியே நிறைந்திருக்க...
    நன்றி ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      என்னுள் நிறைந்திருக்கும் என்னவளின் பேரழகு
      பொன்னுால் படைக்கும் பொலிந்து!

      Supprimer
  2. அன்னம் பதுங்கிவிடும்! அல்லி முகஞ்சாயும்!
    என்னவள் வாழும் இடத்தினிலே! - தென்பொதிகைத்
    தென்றல் மணங்கமழும்! தேன்பொழியும்! இன்பமெலாம்
    மன்றம் அமைக்கும் மலா்ந்து!

    காதல் ஆயிரம் கண்டேன்! மண்ணில்
    சாதல் தீண்டா சருத்திரம் -ஓதல்
    வேண்டும் ஒவ்வொரு வேளையும்! தாராய்
    மீண்டும் காதல் மீதி !

    தங்கள் கவிதைகள் கண்டே காதலின் ஆழம் காணவேண்டி இருக்கிறது கவிஞரே வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னல் விழியசைந்தால் மீதியை நான்படைப்பேன்
      கன்னல் தமிழில் கனிந்து!

      Supprimer
  3. சீதையென்றீர் கோதையென்றீர் தமிழணங்கே நீயேயென்
    கீதை என்றீர் இன்றோ கல்நெஞ்சப் பேதை என்கிறீர்
    வாதைகொண்டதேன்? தையல், பாதைமாறிப் போகவில்லை
    போதைகொண்டு வீணாகப்பேசாது இரும்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      போதை கொடுத்தவள் பேதைபோல் செல்கிறாள்
      பாதை மறந்தேன் பார்த்து!

      Supprimer
  4. வணக்கம்
    கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)

    நீவரும் நாளை எதிர்ப்பார்த்(து) எதிர்ப்பார்த்துப்
    பூவரும் சோலையாய் உள்பூத்துச் - தேவதையே

    காதலின் மகின்மையை கவியில் அழகாக செம்மை படுத்தியுள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தமிழ்ப்பணி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. மதிப்பிற்குறிய அய்யா எங்கள் பாவேந்தை பந்தயத்தில் வெற்றி கொண்டுவிடுவீர்களோ என்ற அச்சம் உள்ளது. தங்கள் பதிவினை இன்று தான் எதேச்சையாக படிக்க நேர்ந்தது. முற்றிலும் படிக்கும் ஆசை தொடங்கிவிட்டது. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer