mardi 5 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 21]




காதல் ஆயிரம் [பகுதி - 21]

201.
மீட்டுதடி பொன்வீணை! மின்னுதடி உன்பருவம்!
கூட்டுதடி காதல் கொதிப்பினையே – வாட்டமுறத்
தீட்டுதடி ஆசைகளைத் தேவியே! கார்காலம்
மூட்டுதடி மோகம் முனைந்து!

202.
கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச் சீா்போல்
தொடைதொடுத்துப் பாடும் சுவைபோல் - கடைக்கண்
படைதொடுத்து வெல்லும்பூம் பாவையுனை நல்ல
நடைதொடுத்துப் பாடுவேன் நான்!

203.
பூத்துக் குலுங்கும் பொழில்களிலே உன்னுருவைப்
பார்த்துக் மகிழும்நற் பாவலன்நான்! – சேர்த்துயிர்
வேர்த்துக் ஒழுகும்! விரைந்தெனக்கு இன்னமுதை
வார்த்து வழங்கும் வடிவு!

204.
வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட!
அசைந்து மலராட! அன்பால் - இசைந்து
மதுவூற! உண்டு மனமாட! வேறே
எதுகூற வேண்டும் இனி?

205.
ஓராயி ரம்பாட்டில் உன்னழகை நான்பாடச்
சீராயி ரம்தருவாள் செந்தமிழாள்! - கூரறிவால்
பார்..ஆயி ரம்முறை! பைங்கொடியே! காதலின்
பேராயி ரம்சொல்லும்! பேணு!

206.
சீருலாப் போகும் பொழுது! சிரித்தாடி
யாரிலா நேரம் எதிர்ப்பார்த்துச் – சேர்ந்துளம்
பார்..உலாப் பைந்தமிழைப் பாடிப் பறந்தனமே
காருலா வானில் களித்து!

207.
கூடை சுமந்து, குழலில் மலர்முடித்து
ஆடை நெகிழ்ந்தே, அழகொளிர - வாடிடச்
சாடை புரிந்தென்னைத் தாக்கும் தளிர்க்கொடியே!
கோடை தணியும் குளிர்ந்து!

208.
மார்கழிப் பூக்கள் மலர்ந்தாடும்! என்னுடைய
ஊர்வழி எங்கும் ஒளிகோலம்! - தேர்வரும்
சீர்வழிப் பாதையில் சின்னவள் செல்கிறாள்!
கூர்விழித் தாக்கம் கொடுத்து!

209.
பனியின் விடியல்! பளிச்சிடும் புற்கள்!
கனியின் சுவைகொடுக்கும் காலை! - இனியாள்
அணியின் அழகில் அடியேன் உருகத்
தணியும் மனத்தின் தவிப்பு!

210.
கண்ணுள் இருந்தே கவிதை படிக்கின்றாய்!
இன்னூல் இயம்பி இனிக்கின்றாய்! - பெண்ணணங்கே!
பொன்னூல் பொலிவே! புதையலே! உன்னழகு
என்னுள் இயங்கும் இணைந்து!

(தொடரும்)

6 commentaires:


  1. கவியே...! கனித்தமிழில் காதலைநீ பாடப்
    புவியே பொலிந்தாடும்! உன்றன் – கவியால்
    குவிந்த மனத்துக் குமரிகள் கூடத்
    தவித்து மெலிவார் தளர்ந்து!

    -

    RépondreSupprimer
  2. கண்ணுள்ளிருந்தே கவிதை படிக்கிறாள். இன்னூல் இயம்பி இனிக்கின்றாள். - ரசி்த்து மகிழ்வுற வேண்டிய வரிகள் ஒவ்வொன்றும். மிக ரசித்தேன்!

    RépondreSupprimer
  3. கொடைகொடுத்த பாரிபோல் கொஞ்சுதமிழ்ச் சீா்போல்
    அழகு வரிகள் ..பாராட்டுக்கள்...

    RépondreSupprimer
  4. வெண்பனிக் காற்றினிலே விடிகின்ற பொழுதினிலே
    பண்ணெடுத்து பாட்டிசைக்கும் பாரதிதாசன் ஐயாவே -உம்
    எண்ணத்தில் வந்துதித்த கொஞ்சுதமிழ் கவிகேட்டு
    விண்மதியும் நழுவிவீழ்ந்ததே கடலினிலே...

    RépondreSupprimer
  5. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    வசந்தமே வந்தாட! வண்டுபறந் தாட!
    அசைந்து மலராட! அன்பால் - இசைந்து
    மதுவூற! உண்டு மனமாட! வேறே
    எதுகூற வேண்டும் இனி?

    ஒவ்வொரு வரிகளிலும் வசந்தம் துள்ளி விளையாடுது அழகாக அமைந்தள்ளது அருமையான கவி உங்கள் கவியை சொல்லால் விளக்க முடியாது ஐயா வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  6. அழகு தமிழில் கவி கேட்டு சுவை கூட்டி ரசம் ஏற்றி ஓசை நயம் உணர்ந்து ஒரு வாழ்த்து பகர்கின்றேன். வாழ்த்து வரும் கவிகளும் தேனாய் இனிக்கட்டும்

    RépondreSupprimer