dimanche 28 avril 2013

பாவாணர்




மொழிஞாயிறு
ஞா. தேவநேயப் பாவாணா்

தமிழ்வாழ்த்து

பரவுந் தமிழைப் பாங்குடனே
     படித்துப் படித்துச் சுவைத்ததனால்
திருவுங் கலையுந் திகழ்கின்ற
     தேனாம் கவிதை தீட்டிவரும்
மரபுக் கவிஞன் பாரதிநான்
     வணங்கும் இனிய வண்டமிழே!
விரவும் அன்பால் எனைநாடி
     மேலாம் பாக்கள் தருவாயே!

தலைவர் க. தமிழமல்லன்

கனிகள் கொண்ட சுவைகளையே
     கலந்து பேசும் கலைமகனே!
பணிவும் கனிவும் ஒருசேரக்
     காணும் இனிய பெருமகனே!
பணிகள் புரிந்தே தமிழ்மொழியைப்
     பாங்காய்க் காக்கும் தமிழ்மகனே!
அணிகள் தந்தாய் தமிழுக்கே
     அடியேன் உன்னைத் தொழுகின்றேன்!

அவையடக்கம்
                    
மதுவும் பாலும் கலந்ததுபோல்
     மணக்கும் தமிழில் திளைத்தோரே!
எதுவும் அறியா நிலையினிலே
     எழுதி வந்தேன் சிலபாக்கள்!
இதுவும் கவியோ? என்றிங்கே
     என்னை நீங்கள் வெறுக்காதீர்!
உதவும் கருணை உளத்தோடே
     உயர்வாய் எண்ணிப் போற்றிடுவீர்!

பாவாணா்
பாவாணர் படைப்பெல்லாம் தமிழ்வேலைப் பாடு!
     பக்கங்கள் ஒவ்வொன்றும் தேனமிழ்தக் கூடு!
பாவாணர் தனித்தமிழால் உயருமிந்த நாடு!
     பகரும்அவர் வழிநின்றால் மிளிரும்நம் வீடு!
பாவாணர் நற்றொண்டால் நாம்பெற்றோம் பீடு!
     பைந்தமிழ்மேல் அன்னாரின் பற்றுக்கே(து) ஈடு
பாவாணர் எழுத்தெல்லாம் மணக்கும்பூக் காடு!
     பாடிடுவேன் அவர்புகழை நற்பாக்க ளோடு!

இருள்தவழும் மடமையிலே நாட்டு மக்கள்
     இருந்துழலும் துயரினையே ஓட்ட வேண்டி
அருள்தவழும் நெல்லைதனில் வந்து தித்த
     ஆற்றல்மிகு செந்தமிழின் ஞாயி றாவார்!
பொருள்தவழும் அறிவொளியால் பொய்மை மாயப்
     புவியினிலே பூந்தமிழும் பொலியக் கண்டோம்!
மருள்தவழும் மனத்தவரின் வருத்தம் தீர்த்த
     வளர்தேவ நேயரையே வாழ்த்து வோமே!

உத்திக்கும் காட்டாகும் நூல்கள் தம்மை
     உவந்தளித்த பெருமகனார் தேவ நேயர்!
தித்திக்கும் செந்தமிழின் சீரைச் சேர்த்துக்
     தெவிட்டாத பாக்களையே தீட்டித் தந்தார்!
முத்தான தனித்தமிழை வாழ்வில் கொண்ட
     மூதறிஞர் எனும்பெயரைப் பெற்ற செம்மல்!
எத்திக்கும் தம்மொழியே ஏற்றம் கொள்ள
     இனிதுழைத்த ஏந்தலையே ஏத்து வோமே!

அஞ்சாத நெஞ்சுடையார்! தமிழ்ச்சொல் வேரை
     ஆய்ந்துரைக்கும் அறிவுடையார்! எதிர்ப்பைக் கண்டு
துஞ்சாத துணிவுடையார்! வாழ்வில் என்றும்
     தூயதமிழ்ப் பற்றுடையார்! மொழியில் வந்து
நஞ்சாகக் கலந்துவிட்ட அயலார் சொல்லை
     நன்கறிந்து நீக்குதிற னுடையார்! தீமை
பஞ்சாகப் பறந்திடவே பணிகள் செய்த
     பாவாணர் பெரும்புகழைப் பாடு வோமே!

விழிகாக்கும் இமையிரண்டும்! கட்டும் வேலி
     விளைகின்ற பயிர்காக்கும்! முன்னோர் சொன்ன
வழிகாக்கும் நல்லோரின் ஆட்சி! கூர்த்த
     மதிகாக்கும் நல்லொழுக்கம்! சிரிக்கும் கன்னக்
குழிகாக்கும் பேரழுகு! கொள்ளைக் குன்றாய்க்
     குலங்காக்கும் பாவாணர் தொண்டும் இங்கே
மொழிகாக்கும்! தமிழர்பண் பாட்டைக் காக்கும்!
     மொய்ம்புடைய நெறிகாக்கும் வெற்றி யோடே!

ஏடுதிகழ் பன்மொழிகள் இருந்திட் டாலும்
     இன்றமிழ்போல் அரும்தொன்மை கண்ட துண்டோ?
நாடுபுகழ் ஆய்வாளர் தோன்றி னாலும்
     நற்றமிழை ஆய்ந்தவர்கள் அவர்போல் யாரோ?
காடுகமழ் பூந்தமிழைத் தருவார் பல்லோர்!
     கலப்பில்லாத் தமிழ்தருவார் தேவ நேயர்!
நீடுபுகழ் ஆய்வறிஞர் பாவா ணர்தாம்!
     நீள்புவியில் அவர்சிறப்பைப் பரப்பு வோமே!


பாவாணா் விழா - 07.02.1995

முல்லைக் காடே





முல்லைக் காடே

பூந்தமிழ்ப் புகழைப் பாடு - அதற்குப்
புவியினில் ஏதிங்(கு) ஈடு!
பைந்தமிழ்த் தேனைப் பருகு - சந்தப்
பாவினில் உள்ளம் உருகு!

வண்டமிழ் வண்ணப் பாக்கள் - மனம்
மயக்கிடும் வைரப் பூக்கள்
ஒண்டமிழ் அழகே அழகு - உலகில்
உயர்கவி எழுதப் பழகு

முத்தமிழ் முல்லைக் காடே - அதில்
மொய்த்திடும் இன்பம் நீடே!
நித்தமும் என்றன் தாயே - என்
நினைவினில் இருப்பாய் நீயே!

1.1.1980

samedi 27 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 81]




காதல் ஆயிரம் [பகுதி - 81]


776.
உன்னை நினைத்தே உருகிவரும் கற்பனைகள்
என்னை எழுச்சியுறச் செய்யுமடி! - பொன்மகள்..நீ!
பண்ணைப் பசுமையெனப் பார்க்கும் திசையெல்லாம்
கண்ணைப் பறிக்கும் கலை!

777.
செல்லப் பெயர்இட்டுச் சொல்லும் பொழுதெல்லாம்
மெல்லத் துடிக்குதடி என்மேனி! - முல்லையே!
அள்ளி அணைக்க அலைபாயும் நெஞ்சத்தைத்
துள்ளி அணைப்பாய் துணிந்து!

778.
உன்னோடு பேசுதல் இன்பம்! உழுகின்ற
பின்னேரு போல்வருதல் பேருவகை! - பொன்னோடு
உறவான ஊர்வசியே! ஒண்டமிழே! வாழ்வின்
நிறைவான செல்வமே நீ!

779.
உறங்கும்முன் உன்றன் ஒளியிதழ் தந்தால்
இறங்கும்என் ஏக்க உணர்வு! - பிறங்கும்பொன்
மேனியளே இன்பயணத் தேணியளே! உச்சிமுதல்
தேனியலே! கற்போம் திறந்து!

780.
கையுடைந்து! என்றன் கருத்துடைந்து! உள்ளமெனும்
பையுடைந்து பொல்லாப் பழியுரைத்து! - மைவிழியே
பொய்யுரைத்து என்னைப் பொடிப்பொடியாய் ஆக்காதே!
மெய்யுரைத்துக் காதலை மீட்டு!

(தொடரும்)

jeudi 25 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 80]





காதல் ஆயிரம் [பகுதி - 80]


771.
காலை எழுந்தடவுன் கண்ணேஉன் பொன்முகம்
காளை மனமுருகக் கண்ணடிக்கும்! - சோலை
மலர்க்கூட்டப் பேரழகு மாமணியே! உன்னால்
உளத்தோட்டம் பூக்கும் ஒளிர்ந்து!

772.
கள்ளுண்ட போதைதரும் கண்ணேஉன் கட்டழகு!
எள்ளுண்டை விற்பவளே! என்னுயிரைக் - கிள்ளுவதேன்?
மல்லுண்ட தோள்கள் மலைபோல் புடைக்குதடி!
தொல்லுண்ட காதல் தொடர்ந்து!

773.
முக்தி எனும்சொல்லை முற்றும் உணருகிறேன்!
சொக்கி அவளழகில் சூழுகிறேன்! - பக்தியுடன்
கொக்கி விழியிரண்டும் குத்தாத நாள்களிலே
சக்தி இலையென்று சாற்று!

774.
அய்அய்யோ என்னுயிரை அப்படியே கொல்வதுமேன்?
நெய்நெய்யோ என்றுடலை நெய்வதுமேன்? - பொய்பொய்யோ
என்றாலும் ஏற்கின்றேன்! என்னவளே ஓர்முத்தம்
இன்றேனும் தாராய் இனித்து!

775.
ஓடிவரும் ஆறாக உன்றன் நினைவலைகள்!
பாடிவரும் என்னுயிரைப் பந்தாடும்! - கோடிமலர்
சூடிவரும் பேரழகே! தூயவளே! என்மனத்துள்
கூடிவரும் காமம் கொழுத்து!

(தொடரும்)

mardi 23 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 79]





காதல் ஆயிரம் [பகுதி - 79]


766.
சின்னஞ் சிறிய உதவிகளைச் செய்துனக்கு
என்றன் உளமினிக்கும்! இன்கவியே! - உன்னினைவு
தன்னந் தனிமையிலே தாக்கி எனைப்பிழியும்!
கன்னஞ் சிவக்கும் கனிந்து!

767.
அன்பே!வா! உன்னை அணைத்து மகிழ்ந்திடவே!
இன்றேன்!தா! காதல் இயற்றிடவே!  - துன்பேன்?
படரும் கொடியெனப் பற்றித்  தழைத்திடுக!
தொடரும் இனிமை துளிர்த்து!

768.
வாடி அருகினிலே! வண்ண மதுக்குடத்தைத்
தாடி சுவைத்திடவே! தங்கமே! - கோடிமுறை
முத்தங்கள் இட்டாலும் மோகம் பெருகுதடி!
சித்தம்..கள் உண்டதுபோல் சீா்த்து!


769.
அன்பே அமுதே! அருந்தமிழே! எந்நொடியும்
இன்பே அளித்த இளங்கொடியே! - உன்பேரை
ஏட்டில் எழுதிப் படித்தேன்! இதயமெனும்
கூட்டில் வடித்தேன் குளிர்ந்து!

770.
வண்ண இதழில் வழியும் மதுஅள்ளி
உண்ண துடிக்கும் உயிர்உணா்வு! - கண்மணியே!
எண்ணம் பெருகி எனைவாட்டும்! ஏக்கத்தை
நண்ணும் இரவை நகா்த்து!

(தொடரும்)