mardi 22 septembre 2026

திருமண வாழ்த்து

 


பைந்தமிழாய்ப் பாராண்டு வாழ்க!

 

பாட்டின் கோவும் சுந்தரியும்

         படைத்த செல்வி பாவரசி

நாட்டின் சீரைக் காக்கின்ற

         நல்ல விசயன் மாலதியும்

ஏட்டின் தமிழ்போல் பதித்திட்ட

         இனிய செல்வன் தினேசுடனே

வீட்டின் சீரைப் பெருக்கிடவே

         விரும்பி இணைந்தார் வாழியவே!

 

பிறந்த நாட்டு விடுதலையைப்

         பெறவே உழைத்த குடும்பத்தில்

சிறந்த தினேசு பாவரசி

         சேர்ந்தே இருவர் ஒன்றானார்!

திறந்த சோலைப் பேரழகைத்

         தேவன் கொண்ட தேரழகைக்

கறந்த பாலின் நனிசுவையைக்

         காதல் மனங்கள் காணுகவே!

 

பிள்ளை மனத்துப் பாவரசி

         பெருமை மனத்துத் தினேசுடனே

கொள்ளை மனத்துப் பேரழகைக்

         கும்மி மனத்துச் சந்தத்தை

வெள்ளை மனத்துப் பந்தத்தை

         வெற்றி மனத்து வரலாற்றை

வள்ளை மனத்துப் பெரும்புகழை

         வரமாய்ப் பெற்று வாழியவே!

 

அன்பைப் பொழியும் பாவரசி

         அமுதைப் பொழியும் தினேசுடனே

இன்பைப் பொழியும் தேனிலவை

         இசைத்து நாளும் வாழியவே!

நன்மை பொழியும் இன்மக்கள்

         நற்றேன் பொழியும் மனைமாட்சி

வன்மை பொழியும் அறத்தாட்சி

         வாழ்வில் பெற்று வாழியவே!

 

கண்ணன் அருளால் இணைகின்ற

         காதல் கிளிகள் வாழியவே!

எண்ணன் அருளால் இணைகின்ற

         இளைய புறாக்கள் வாழியவே!

வண்ணன் அருளால் இணைகின்ற

         வாச மலர்கள் வாழியவே!

பண்ணன் அருளால் இணைகின்ற

         பாடுங் குயில்கள் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

22.09.2026

Aucun commentaire:

Enregistrer un commentaire