பாவேந்தர் என்றே பகர்!
கற்பனை ஊற்றெடுத்துக் கன்னல் கவிபடைத்து
நற்றமிழ் காத்து நலங்கொடுத்தார்! - பற்றுடன்
கூவி நமையழைத்துக் கொள்கை விளைத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
குன்றா இனமானம் கொண்டு தமிழ்மக்கள்
நன்றே வளமுற நற்றமிழை - கன்னலென
நாவினிக்கத் தந்தவர் நற்புதுவை தான்பெற்ற
பாவேந்தர் என்றே பகர்!
வேதியரின் வேதத்தை வேரொடு மாய்க்கும்பா
சாதிமத பேதத்தைச் சாய்க்கும்பா - நீதிதரும்
பாவழங்கிப் பைந்தமிழைப் பாலூட்டிக் காத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
தொண்டொன்றே நாட்டைத் துலக்கிடும் தொண்டென்று
கண்டதனால் இன்பம் கனிந்தூறத் - தண்டமிழை
நாவேந்திச் சொல்லில் நனிபுரட்சி செய்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
பஞ்சாங்கம் வேண்டாம் பகுத்தறிவு போதுமென்று
துஞ்சாமல் தூயநெறி சொல்லியவர்! - அஞ்சாமல்
பூவேந்திக் கைம்பெண் புதுமணத்தைப் போற்றியவர்!
பாவேந்தர் என்றே பகர்!
சோதியிலே நன்கு சுடர்கின்ற ஆதவன்போல்
ஆதியிலே தோன்றிய அந்தமிழை - நீதியுடன்
மூவேந்தர் காத்ததுபோல் முன்னின்று காத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
தந்தை பெரியாரின் சால்பேற்று நம்மினத்தின்
முந்தை வினையை முடித்தவர் - சிந்தைதனில்
நோவேந்தும் துன்பத்தை நுண்ணறிவால் போக்கியவர்
பாவேந்தர் என்றே பகர்!
தாங்கிடாக் கோடையில் தண்மணக் காற்றாக
ஓங்குதமிழ் நெஞ்சின் உணவாகத் - தேங்குபுகழ்
நாவலர்கள் நாடும் நலமாக நூல்படைத்தார்
பாவேந்தர் என்றே பகர்!
பொதுவுடைமை பூத்துத் தமிழர்தம் வாழ்வில்
புதுநலங்கள் நன்றே பொலிய - மதச்சதியைச்
சாவேந்தச் செய்யத் தளரா துழைத்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
புதுமைகள் மேவும் புகழார் நெறியை
மடமைகள் நீங்கும் வழியைக் - கடமையென
மாவேந்தும் பாட்டில் மதுவேந்தித் தந்தவர்
பாவேந்தர் என்றே பகர்!
17.01.1980
/// பஞ்சாங்கம் வேண்டாம் பகுத்தறிவு போதுமென்று
RépondreSupprimerதுஞ்சாமல் தூயநெறி சொல்லியவர்...! ///
சிறப்பான வரிகள் பலப்பல...
நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
ஏய்த்துப் பிழைத்த இழிநிலை யாளரைக்
காய்த்து வடித்த கனக்கவிஞா்! - வாய்த்தநம்
மண்ணின் உரமாக வாழ்ந்தநம் பாவேந்தா்
பண்ணின் அமுதைப் பருகு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerபாவேந்தர் புகழினை கவிவேந்தர் நீங்கள் கூறக்கேட்டு
பெருமிதமும் மகிழ்வுமடைந்தேன்.
நல்ல அரிய பல தகவல்கள். அறிந்தே இருக்காதவை அனைத்தும்.
பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா!...
த ம.4
இனிக்கும் தமிழில் அழகா சொல்லிடீங்க அய்யா.....
RépondreSupprimerசொற்களை கூட்டு சேர்த்து
RépondreSupprimer......சுந்தரத் தமிழில் நீயே
நற்பலா சுவையைக் குழைத்து
......நாவினில் இட்டது போல
பற்பல இசையில் பண்ணை
......படைத்தது எப்படி என்று
கற்பனை செய்து பார்த்தேன்
..... கண்டறிய முடியவில்லை
பாவேந்தர் என்றே பகர்ந்த அருமையான கவிதைக்குப்
RépondreSupprimerபாராட்டுக்கள்..
வணக்கம் ஐயா!
RépondreSupprimer// பஞ்சாங்கம் வேண்டாம் பகுத்தறிவு போதுமென்று
துஞ்சாமல் தூயநெறி சொல்லியவர்! - அஞ்சாமல்
பூவேந்திக் கைம்பெண் புதுமணத்தைப் போற்றியவர்!
பாவேந்தர் என்றே பகர்! //
சிந்தனைச் சிறப்புமிக்க வரிகள்.
கைம்பெண்ணிற்கும் வாழ்வினை போற்றிய விதம் மனதை நெகிழ்த்தியது.
அருமையான கவிதை. பாவேந்தர் பெருமைகள் மிகச்சிறப்பாயுள்ளது.
மிக்க நன்றி ஐயா.
RépondreSupprimerபாவேந்தா் என்றே பகா்கின்ற வெண்பாக்கள்
பூவேந்திப் போற்றும் புகழ்த்தமிழை! - நாவேந்தி
நல்ல நெறிசுவைத்தோம்! வல்ல வழியமைத்தோம்!
வெல்லும் கவிகள் விளித்து!
RépondreSupprimerஇனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
பாவேந்தா் பாடிய பாக்களை நெஞ்சேந்தி
நாவேந்தா் ஆகி நலம்பெற்றேன்! - மூவேந்தா்
முன்னே தமிழ்வளா்த்த முச்சங்கம் போன்றிங்கு
நன்றே தமிழ்வளா்ப்பேன் நான்!
பாவேந்தரின் புகழ்பாடும் பாவரிகள் யாவுமே மனங்கொள்ளை கொள்ளும் அற்புதம். பாடல் பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும் ஐயா.
RépondreSupprimer