காதல் ஆயிரம் [பகுதி - 97]
861.
முத்தொளிரும்! வானில் முழுமதி வந்தொளிரும்!
கொத்தொளிரும்! முந்தும் கொழுந்தொளிரும்! - சித்தொளிரும்
என்றும் தமிழொளிரும்! என்னவள் பொன்முகத்தால்
நின்றொளிரும் என்கவி நெஞ்சு!
862.
பூமணக்கும்! பொங்கும் புகழ்மணக்கும்! மேடையிலே
நாமணக்கும்! நல்லோர் செயல்மணக்கும்! - காமணக்கும்
பாமணக்கும்! கன்னல் கனிமணக்கும்! கண்ணே..நீ
வா..மணக்கும் என்றன் மனம்!
863.
தேனினிக்கும்! தெய்வத் தமிழினிக்கும்! நற்கண்ணல்
ஊனினிக்கும்! உண்மை உயர்ந்தினிக்கும்! - தானுணர்ந்து
வானினிக்கும் என்றென்னும் வாழ்வினிக்கும்! நல்லவளே
நானினிக்கும் நற்பதிலை நல்கு!
864.
சீர்ஓங்கும்! செல்வச் சிறப்போங்கும்! நல்லாட்சி
ஊர்ஓங்கும்! அன்பால் உறவோங்கும்! - நீர்ஓங்கப்
பார்ஓங்கும்! மாறாத பற்றோங்கும்! பைங்கொடியே
கூர்ஓங்கும் கண்ணேணோ கூறு?
865.
சின்ன கொடியாடும்! வண்ண மயிலாடும்!
கன்னல் மலர்கள் கமழ்ந்தாடும்! - தென்றலிலே
நாற்றாடும்! கீற்றாடும்! நல்லாள் முகங்கண்டு
கூத்தாடும் உள்ளம் குதித்து!
(தொடரும்)
ஆடும் மனம் அன்னை மொழியால்
RépondreSupprimerபாடும் தினம் பாவலன் கவியால்
கூடும் இனிமை காட்டும் காதல்
தேடும் பெருமை தந்தது பாக்களே!
அருமையான சொற்றொடர்களும் சந்தங்களும். அழகிய பாக்கள் ஐயா!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
த ம.4
அழகிய வெண்பாக்கள் ஐயா!
RépondreSupprimerஒவ்வொரு பாக்களிலும் கருத்துகள் களிநடம் புரிகிறது.
என்னை மிகவே இல 862 பா கவர்ந்தது.
ஏனையவையும் அற்புதமே.
நல் வாழ்த்துக்கள் கவிஞரே!
RépondreSupprimerஅப்பப்பா உன்கவிதை சப்போட்டா சாறென்பேன்!
எப்படிப்பா உன்னால் இயல்கிறது! - இப்படி..நான்
பாடுவது எந்நாளோ? பாவலனாய் நற்புகழைச்
சூடுவது எந்நாளோ சொல்லு?
அத்தனையும் இலக்கணத்தால் ஜொலிக்கும் முத்துக்கள்
RépondreSupprimerசிறப்பான வெண்பாக்கள்
RépondreSupprimerசிந்தையில் குடிகொண்டு
சந்தத்தை அள்ளித் தான்
சிந்துது பார் எந்நாளும் ....!!!!!
வாழ்த்துக்கள் ஐயா .
கற்பனை வளமும் சொற்திறமும்
RépondreSupprimerஒன்றை ஒன்றை மிஞ்சும் வண்ணம்
நூறைத் தொட இருக்கும் வெண்பாக்கள் எல்லாம்
என்போன்றவர்களுக்கு நல் வழிகாட்டி
வாழ்த்துக்கள்
tha.ma 7
RépondreSupprimerமனம் எல்லாம் இனிக்கிறது ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
அழகிய பாக்கள்...
RépondreSupprimerவாழ்த்துக்கள்.