samedi 22 juin 2013

கவிஞர் தமிழ்ஒளி




கவிஞர் தமிழ்ஒளி
[21.09.1925 - 29.03.1965]

அறமொளிர் நெஞ்சன்! அழகொளிர்பா வாணன்!
திறமொளிர் வல்ல செயலன் - மறவன்
தமிழொளி தந்த தனிப்புகழ்ப் பாக்கள்
அமுதளி ஊற்றாம் அருந்து!

புதுவை பூமியில் பூத்த புகழொளி!
புதுமை படைத்த புலவன் தமிழொளி!
சின்னை யாவும் செங்கேணி யம்மாவும்
நன்னய மாக நல்கிய நன்மகன்!
செம்படை அணியில் சேர்ந்த திருமகன்!
நம்மிடை வாழ்ந்தது நாற்பது ஆண்டே!
தனக்கொரு வீடும் கணக்கொடு வாழ்வும்
கனவிற் கண்ட காட்சியாய்க் கண்டவன்!
பொதுமை மலரப் புதுமை புலர
இதமாய்த் தொண்டுகள் இயல்பாய்ப் புரிந்தவன்!
வந்தவர் வளமாய் வாழும் புதுவையில்
செந்தமிழ்க் கவிகளால் சிந்தை கவர்ந்தவன்!
சின்ன சின்ன கதைகள் தீட்டிப்
பொன்னிகர் பாவியம் பலவும் புனைந்தவன்!
நாட கங்களும் நயமிகு உரைகளும்
நாடிப் படிக்க நமக்குக் கொடுத்தவன்!
இன்பம் என்பதை என்றும் அறியா(து)
துன்பக் கடலைத் துணிந்து கடந்தவன்!
பரந்து விரிந்த பழமை வயலைப்
புரிந்தே ஆங்குப் புதுமை விளைத்தவன்!
சாதி சமயச் சழக்குகள் அனைத்தையும்
மோதி மிதிக்க முனைந்து சென்றவன்!
பாரதி வழியைப் பாவேந்தர் நெறியைக்
கூரறி(வு) ஓங்கக் கொண்டு களித்தவன்!
தோழர் சீவா தூய நட்பினை
ஆழப் பெற்று அருந்தமிழ் வளர்த்தவன்!
அஞ்சா நெஞ்சும் அயரா உழைப்பும்
துஞ்சா நடையும் துணையாய்ப் பெற்றவன்! 
பொதிகை மலையின் பூந்தமிழ்த் தென்றலாய்
இதயம் புகுந்த எங்கள் தமிழொளியே!

15.03.2011

 





10 commentaires:

  1. தமிழ்ஒளியின் வாழ்வைத் தகவாய்ப் படைத்தீர்!
    அமிர்தத்தைக் கண்டோம் அறிந்து!

    த.ம.2

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அமிழ்தத்தைத் தந்த அருமைப் புலவன்!
      தமிழகத்தை தன்னுயிராய்க் கொண்டான்! - தமிழன்னை
      பெற்ற பெருமைகளைப் பேணித் தமிழ்ழொளி
      உற்ற உயா்வினை ஓது!

      Supprimer
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் நன்றி! தமிழ்மண வாக்குத்
      தருகைக்கும் நன்றி தழைத்து!

      Supprimer
  3. இத்தனை சிறப்புகள் இணைந்த கோமகனை
    பித்தன தமிழினை பெருதும் வளர்த்தெடுத்த
    உத்தமரை உங்கள் உள்ளமதில் ஏற்றி
    சித்தரித்த கவிகண்டு சிந்தை மகிழ்ந்தேன்.

    அருமையான கவியதில் தமிழ் ஒளி ஐயாவைப்பற்றி நீங்கள் கூறியது அறிந்து மகிழ்வாயுள்ளது.
    நல்ல பகிர்வு ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    த ம.4

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கொள்கை முழுங்கிக் கொதித்த தமிழ்ஒளி
      செல்கை பகையைச் சிதைத்தோட்டும்!- வெல்லும்கை
      வாணன் வளா்தமிழைக் கற்றுவந்தால் நற்கவிதைத்
      தேனன் பெயா்பெறுவார் தோ்ந்து!

      Supprimer

  4. தமிழ்ஒளி தந்த தனித்தமிழ் வாழ்வை
    நமதினம் ஏற்று நடந்தால் - இமியளவு
    இங்கே இடா்வருமோ? இன்னல் தரும்பகைவா்
    எங்கோ மறைவார் இறைந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பகைக்கும் அடிகளைப் பற்றிக் கிடந்தால்
      நகைக்கும் உலகம்! நலிந்து - குகைக்குள்
      உறங்குவதா வாழ்க்கை! உரிமை இழந்தே
      இறங்குவதா வாழ்கை! எழு!

      Supprimer

  5. தமிழ் உறவுகளே வணக்கம்!

    புதுவைப் புலவனைப் போற்றிப் புகழ்ந்தேன்!
    மதுவைக் குடித்து மகிழ்ந்தேன்! - பொதுமையைப்
    பாடிக் களித்தேன்! தமிழ்ஒளியைப் பாரதிதான்
    சூடிக் களித்தேன் சுடா்ந்து!

    RépondreSupprimer
  6. வருங்கால மனிதனே வருக Notes

    RépondreSupprimer