samedi 22 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
முடுகு வெண்பா என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.
  
பாவலர் தென்றல், சென்னை
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
சந்த முடுகுடைய வெண்பாவை, முடுகு வெண்பா என்றுரைப்பர். வெண்பாவின் பின்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது பின்முடுகு வெண்பா. வெண்பாவின் முன்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்கள் ஒருவகைச் சந்தத்துடன் நடப்பது முன்முடுகு வெண்பா. வெண்பா முழுமையும் பதினைந்து சீர்களும் சந்தத்துடன் நடப்பது முற்று முடுகு வெண்பா.
  
பின்முடுகு வெண்பா
  
சீர்மணக்கும் வாழ்வொளியைச் செல்லும் இடமெல்லாம்
பேர்மணக்கும் மாண்பொளியைப் பெற்றிடவே - தார்மணக்கும்
அத்தனரு ளுற்றதமிழ்! சித்தமொளி யிட்டதமிழ்!
கற்புமரு ளுற்றதமிழ் பற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் முன்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. பின்னிரண்டு அடிகள் 'தத்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் 6 சீர்களும், இறுதிச்சீர் 'தத்த' என்ற சந்தமுடைய உகரவீற்றுச் சீரும் பெற்று வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் பின்முடுகு வெண்பா என்று பெயர். அச்சீர்களின் சந்தம் தானதத்த, தானதன, தாதந்த, தத்தந்த, தந்ததன என்பன போலப் பலவகையாகவும் அமையலாம்.
  
முன்முடுகு வெண்பா
  
மஞ்சமிகு வஞ்சியிடை! தஞ்சமிடு நெஞ்சினிடை!
பஞ்சமிலை! கொஞ்சலிடு வஞ்சமிலை! - இஞ்சி
இடுப்பழகில் ஏங்கி இளைக்கின்றேன்! உன்றன்
உடுப்பழகில் உள்ளம் உடைந்து!
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த நேரிசை வெண்பாவின் தனிச்சொல்லும் பின்னிரண்டு அடிகளும் வழக்கம்போல் அமைந்துள்ளன. முன்னிரண்டு அடிகளிள் உள்ள 7 சீர்கள் 'தந்ததன' என்ற ஒருவகைச் சந்தத்தில் வந்தன. இப்படி அமையும் பாடலுக்குப் முன்முடுகு வெண்பா என்று பெயர்.
    
முற்று முடுகு வெண்பா
  
பொன்னொளி மின்னிட அன்புள[ம்] இன்புற,
நன்னெறி தந்திடு[ம்] என்கவி! - நம்மொழி
செம்மொழி! மென்மொழி! வன்மொழி! தென்மொழி
எம்மொழி இங்கிணை எண்?
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
இந்த நேரிசை வெண்பாவின் நான்கடிகள் 'தந்தன' என்ற தந்தத்தில் வந்தன. ஈற்றுச்சீர் 'தந்' எனும் சந்தத்தில் வந்தது. இப்படி அமையும் பாடலுக்குப் முற்று முடுகு வெண்பா என்று பெயர்.
  
'இருளறும் ஒளிபெற இனிதுறும் அருளற'
  
இவ்வாறு, முடுகு அமைகின்ற அடிகளில் வெண்டளை இன்றிச் சிலர் பாடியுள்ளனர். வெண்டளையுடன் முடுகு பெற்று வருவதுதான் சிறப்புடைய முடுகு வெண்பா என்றுணர்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.12.2018

vendredi 21 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
நடுவெழுத்தலங்காரம் என்றால் என்ன?
  
பாவலர் தென்றல், சென்னை.
-------------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்!
  
எழுத்துச் சுதகம், எழுத்து வருத்தனம், மாத்திரைச் சுதகம், மாத்திரை வருத்தனம், திரிபாகி, முதலெழுத்தலங்காரம், நடுவெழுத்தலங்காரம், கடையெழுத்தலங்காரம் ஆகியவை சொற்சித்திர கவிதையாகும்.
  
நடுவெழுத்தலங்கரத்தில் இரண்டு வகைகள் உள்ளன.
  
நடுவெழுத்தலங்காரம் - 1
  
பாடலில் குறிக்கப் பெறுகின்ற பொருட்களை மூன்றெழுத்துக் கொண்ட சொற்களில் தருவித்து, அவற்றின் நடுவெழுத்துகளை முறையே படிக்கப் பெயர் ஒன்று வரும்வண்ணம் பாடுவது நடுவெழுத்தலங்காரமாகும்.
  
கண்ணன் பெயராகும்! கன்னல் தமிழ்தரும்!
தண்ணீர் உறவாகும்! தண்மணிசேர் - பெண்ணணியாம்!
முற்றம்! சிறப்பு! மொழிந்த பதநடுவே
பற்றுடன் பண்ணரசைப் பார்!
  
கண்ணன் பெயராகும் - கோபால் - நடுவெழுத்து - பா
கன்னல் தமிழ்தரும் - பாட்டு - நடுவெழுத்து - ட்
தண்ணீர் உறவாகும் - ஓடம் - நடுவெழுத்து - ட
பெண்ணணியாம் - ஆரம் - நடுவெழுத்து - ர
முற்றம் - வாசல் - நடுவெழுத்து - ச
சிறப்பு - சீர்மை - நடுவெழுத்து - ர்
  
நடுவெழுத்துகளை இணைத்தால் 'பாட்டரசர்' என்ற பெயர் வருவதைக் காண்க.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 2
  
ஒரு பாடலில் வரும் சொல் ஒவ்வொன்றுக்கும் உரை மூன்றெழுத்தாக அமைத்து, நடுவெழுத்தெல்லாம் முறையாகச் சேர்ந்து ஒரு பாடலாக வரும்வண்ணம் பாடுவதும் நடுவெழுத்தலங்காரமாகும்.
  
நல்வினை மைந்தன்! நன்மை வேராம்!
நல்லொளி சேர்க்கை! பச்சை நாட்டியம்!
நெஞ்சக் கன்னி இன்னல் நல்கும்
சண்டை முறிதல்! சாரும் ஆசைத்
தொகுதி யனைத்தும் சூளை யிடமே!
இனிமை! மாட்சி! மேன்மை! ஆம்பல்!
கூத்தன் எண்ணம் பாவை கோன்றமிழ்
பூத்து நல்கும்! பொதுமை கண்ட
புண்ணியர் குறளும் பொழிலாய் மணக்கும்!
எண்ணும் நடுவெழுத் தெல்லாம் இணைந்தே!
  
நல்வினை - தவம்
மைந்தன் - பிள்ளை
நன்மை - வளம்
வேர் - மூலம்
சேர்க்கை - கூட்டு
பச்சை - பசுமை
நாட்டியம் - நடம்
நெஞ்சம் - மார்பு
கன்னி - குமரி
இன்னல் - துன்பு
நல்கும் - ஈனும்
சண்டை - அமர்
முறிதல் - முறிவு
சாரும் - மேவும்
ஆசை - காதல்
தொகுதி - பாரம்
அனைத்தும் - யாவும்
சூளை - சுள்ளை
இடமே - களமே
இனிமை - அமுது
மாட்சி - பெருமை
மேன்மை - தகுதி
ஆம்பல் - குமுது
கூத்தன் - சிவன்
எண்ணம் - சிந்தை
பாவை - பதுமை
  
பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லுக்கும், மூன்றெழுத்தில் பொருட்கண்டுணர்ந்த, சொற்களின் நடுவெழுத்துக்களை ஒன்றிணைத்தால் கீழுள்ள குறள் வெண்பா வரும்.
  
வள்ள லருட்சுடர் மன்னு மறிவுதர
வுள்ள முருகு முவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018
  
நடுவெழுத்தலங்காரம் - 3
  
இப்பாடலில் ஒவ்வொரு சீரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எழுத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். [ 3, 5, 7,....] ஒவ்வொரு சீரின் நடுவெழுத்துகளைக் கூட்டிப் படித்தால் ஒரு பாடல் வரவேண்டும். இந்த வகை முன்னோர் இடத்தில் இல்லை. புதிய வகையாக ஏற்போம்.
  
அகவல்
  
புகழை வெல்க! புவியே யுயர
மகளே! அமுதே! வறுமை யகல
அகமே வண்ண அணியை ஏற்க!
முகமே இனிமை! மூவும் சிறுமை!
சுகமே தவமே! தொல்லை மூலம்
நகமே இலையே! ஞாயும் நறுமை
மிகவே வா!வா!வா! வாழ்வு மேவுமே!
  
சீா்களின் நடுவெழுத்துகளைச் சேர்த்துப் படித்தால் வரும் குறள்வெண்பா
  
கல்வி யகமுறுக! கண்ணிற் கனிவுறுக!
வல்ல கலையுறுக வாழ்வு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.12.2018

jeudi 20 décembre 2018

வெண்பா மேடை - 129


வெண்பா மேடை - 129
  
நிரல் வெண்பா
  
தொகையாக உள்ள பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக உரைப்பது நிரல் வெண்பாவாகும். திருக்குறளுக்கு உரையெழுதிய 1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிதி, 6. திருமலையர், 7. பரிமேலழகர், 8. மல்லர், 9. கவிப்பெருமாள், 10. காளிங்கர் ஆகியோர்தம் பெயர்களை கீழுள்ள வெண்பா உரைப்பதைப் படித்து மகிழவும்.
  
திருக்குறள் உரையாளர் நிரல் வெண்பா!
  
தருமா், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, திருமலை யர்,பரி மேலழகர்,
மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நுாற்[கு]
எல்லை உரையியற்றி னார். [பழம் பாடல்]
  
எட்டுத்தொகை நிரல் வெண்பா!
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ[று]
ஒத்த பதிற்றுப்பத்[து] ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ[டு] அகம்புறமென்[று]
இத்திறத்த எட்டுத் தொகை.
  
[பாரதம் பாடிய பெருந்தேவனார்]
  
பத்துப்பாட்டு நிரல் வெண்பா
  
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடைக் கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து [பழம் பாடல்]
  
1. திருமுருகாற்றுப்படை , 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை,
4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை,
8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடு கடாம்
  
பதினெண் கீழ்க்கணக்கு நிரல் வெண்பா
  
நாலடி நான்மணி நானாற்ப[து] ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலை,சொல் காஞ்சியுடன், ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு! [பழம் பாடல்]
  
1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நுாற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடு, 13.ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. கைந்நிலை, 17. முதுமொழிக்காஞ்சி, 18 ஏலாதி
  
ஐங்குறுநூறு பாடியவர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
மருதமோ ரம்போகி நெய்தல மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தைப் பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - பேயனார்
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
பாலை - ஓதலாந்தையார்.
  
கலித்தொகை பாடியோர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்,
கல்விவலார் கண்ட கலி. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - சோழன் நல்லுருத்திரனார்
மருதம் - மருதனிள நாகனார்
நெய்தல் - நல்லந்துவனார்
பாலை - பெருங்கடுங்கோ.
  
பரிபாடலில் உள்ள பாடல் எண்ணிகையை உரைக்கும் நிரல் வெண்பா!
  
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம். [பழம் பாடல்]
  
திருமால்லுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடுகாளுக்கு (காளிக்கு) 1, வையைக்கு 26, மதுரைக்கு 4.
  
அகத்திணை நிலையை உணர்த்தும் நிரல் வெண்பா!
  
போக்கெலாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி யூட லணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல்
புல்லுங் கவிமுறைக் கொப்பு. [பழம் பாடல்]
  
ஆழ்வார் பன்னிருவர் பெயர்களின் நிரல் வெண்பா
பொய்கையார், பூதத்தார், பொற்பேயார், பூம்மழிசை,
மெய்மதுரர், நம்மாழ்வார் வெல்சேரர் - துய்பட்டர்,
மின்னாண்டாள், நற்றொண்டர், இன்பாணர், வன்கலியர்
பன்னிருவர் என்றே பகர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
காப்பிய நிரல் வெண்பா
சிந்தா மணி,சீர் திகழ்சிலம்பு, மேகலை,
பந்த வளையா பதி,கேசி, - சிந்தையுறும்
சூளா மணி,நீலம், துாயுதய நாகமைந்தர்
ஆளும் யசோதரம் ஆம்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஐம்பெருங்காப்பியம்
1. சீவக சிந்தாமணி, 2. சிலப்பதிகாரம், 3. மணிமேகலை, 4. வளையாபதி, 5. குண்டலகேசி
  
ஐஞ்சிறுகாப்பியம்
1. சூளாமணி, 2. நீலகேசி, 3. உதய குமார காவியம், யசோதர காவியம், 5. நாக குமார காவியம்
  
இவ்வாறு அமைந்த 'நிரல் வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நிரல் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.12.2018

mercredi 12 décembre 2018

யாரோ என்னை வரவேற்பார்?


பாட்டரசர் கி. பாரதிதாசனின் மாமியாருமாகிய,
திருமதி குணசுந்தரி பாரதிதாசனின் அன்னையுமாகிய
திருமதி பட்டம்மாள் குப்புச்சாமி அவர்களின் நல்லு
இறையடியில் ஆழ்ந்து நிறைவுற வேண்டுகிறோம்.
  
யாரோ என்னை வரவேற்பார்?
  
பூமி மீது நான்..ஏற்கப்
   பூப்போல் பெண்ணை அளித்தனையே!
சாமி யிடத்தில் எமக்காகத்
   தண்ட மிட்டுத் தொழுதனையே!
சேமித்[து] எமக்குக் கொடுத்தனையே!
   தேவி வடிவே! திருவிளக்கே!
மாமி.. மாமி.. உன்மருகன்
   மனமே உடைந்து துடிக்கின்றேன்!
  
பொல்லாக் கணவன் நிலையெண்ணிப்
   பொறுத்த உள்ளம் அடைத்ததுவோ?
எல்லாத் துயரும் எமக்காக
   ஏற்ற இதயம் உடைந்ததுவோ?
சொல்லா தெங்குச் சென்றாயோ?
   துாய வடிவே! சுடர்விளக்கே!
கல்லாய் மருகன் நிற்கின்றேன்!
   கண்ணீர்க் கடலில் தவிக்கின்றேன்!
  
கண்ணில் இருக்கும் உன்னுருவம்!
   கருத்தில் இருக்கும் உன்சொற்கள்!
மண்ணில் இருக்கும் உன்பெருமை!
   மலரில் இருக்கும் உன்னிதயம்!
பண்ணில் இருக்கும் உன்மென்மை!
   பண்பில் இருக்கும் உன்வாழ்வு!
விண்ணில் இருக்கும் உன்மாட்சி!
   விழியின் இமைபோல் காப்பாயே!
  
ஒருசொல் உரைக்க நான்..எண்ணி
   உன்றன் வரவை எதிர்ப்பார்த்தேன்!
திருச்சொல் கேட்ட செவிக்குள்ளே
   தேள்சொல் ஏனோ பிரிந்தாயோ?
இருசொல் பேசும் வழக்கில்லை!
   எதிர்சொல் வீசும் முறையில்லை!
அருஞ்சொல் இனிமேல் யார்தருவார்?
   அகமே உடைந்து துவள்கின்றேன்!
  
பட்டு வருமே! பட்டென்று
   பறந்து விடுமே! என்றுன்னைக்
கொட்டும் நகைப்பில் உரைக்கின்ற
   கோல மருகன் குலைகின்றேன்!
எட்டுத் திக்கும் உனைப்போன்றே
   யார்தாம் வருவார் துணைசெய்ய!
கட்டுக் கடங்கா வெள்ளமெனக்
   கண்ணீர் பெருகிக் கரைகின்றேன்!
  
ஆண்டு முடிவைக் கொண்டாட
   அருமை மருகன் வரமாட்டான்,
நீண்டு துயரில் கிடந்தாயோ?
   நினைவாம் நெருப்பில் வெந்தாயோ?
கூண்டுக் கிளிப்போல் வதைந்தாயோ?
   குன்றிக் குன்றி வளைந்தாயோ?
மீண்டும் மீண்டும் அடிதொழுதேன்!
   விரைந்து என்னைப் பொறுத்தருளே!
  
ஆண்டு பிறந்த முதல்..நாளில்
   அழகாய் வாழ்த்து மழைபொழிவாய்!
வேண்டும் வரங்கள் யாம்பெறவே
   விழிகள் சிந்தி வணங்கிடுவாய்!
யாண்டும் வந்து நலஞ்சேர்ப்பாய்!
   இன்னல் நீங்க வழிசொல்வாய்!
கூண்டும் விழுந்த நிலையுற்றோம்!
   துாணும் விழுந்த துயருற்றோம்!
  
அன்பின் ஊற்று நிற்பதுவோ?
   அருளின் ஊற்று மறைவதுவோ?
பண்பின் ஊற்று மூடுவதோ?
   பாச ஊற்றுத் துார்வதுவோ?
துன்பின் ஊற்றுப் பாய்வதுவோ?
   துணிவின் ஊற்றுக் காய்வதுவோ?
என்பின் ஊற்றுக் குன்றிடவே
   ஏனோ பிரிந்து சென்றாயோ?
  
இல்லம் வருவாய் என..நம்பி
   இருந்து விட்டேன்! ஒருதொண்டும்
சொல்லும் வகையில் செய்யலையே!
   துளியும் நெஞ்சம் ஆறலையே!
செல்லும் பொழுதில் உன்னருகே
   சேர்ந்த உறவில் நான்..இலையே!
கொல்லும் நினைவால் வாடுகிறேன்!
   குற்றம் யாவும் பொறுப்பாயே!
  
மனமே அடைந்த மதிபெல்லாம்
   மருகன் இழந்து நிற்கின்றேன்!
இனிமேல் உன்றன் இல்லத்தில்
   யார்தாம் என்னை வரவேற்பார்?
வனமே வறண்டு காய்வதுபோல்
   மதியே வறண்டு வதைகின்றேன்!
இனமே தேடும்! என்சொல்வேன்?
   எங்கே செல்வேன்? வழியறியேன்!
  
ஆழ்ந்த அழுகையுடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.12.2018


samedi 24 novembre 2018

ஒளியே போற்றி!


ஒளியே போற்றி!
  
1.
அண்ணா மலையின் பேரொளியை
   அகத்துள் ஒளிரத் தொழுதிடுவோம்!
எண்ணா திருந்த சிறப்பெல்லாம்
   ஏற்கும் வாழ்வைச் சமைத்திடுவோம்!
உண்ணா திருந்தே ஒருவேளை
   உள்ளம் ஒன்றித் தவம்புரிவோம்!
பெண்ணா? ஆணா? உருப்பெற்றோன்
   பெருமை யாவும் அளிப்பானே!
  
2.
அருணா சலத்தின் அழகொளியில்
   ஆழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்திடுவோம்!
இரு..நா அரவ அணியானை
   எண்ணி யெண்ணி மகிழ்ந்திடுவோம்!
திரு..நா மலர்ந்து தமிழ்பாடித்
   தேனை யள்ளி அருந்திடுவோம்!
குரு..நா நல்கும் மொழிகேட்டு,
   கொள்கை விளக்கை ஏந்திடுவோம்!
  
3.
அன்பே இறைவன் இருப்பிடமாம்!
   ஆசை யதனின் எதிர்நிலையாம்!
இன்பே யென்று தமிழ்பாடி
   ஏத்தி யிசைத்தல் பெருவாழ்வாம்!
துன்பே கூட்டும் விதியவனைத்
   துாள்துாள் ஆக்கும் இறையொளியாம்!
இன்றே உணர்ந்து மனவீட்டில்
   எழிலாம் விளக்கை ஏற்றுகவே!
  
4.
உண்மை மணக்கும் சித்தரிடம்
   ஓங்கும் ஒளியைப் பெற்றிடலாம்!
பெண்மை மணக்கும் கற்பினிலே
   பேணும் ஒளியைக் கற்றிடலாம்!
வெண்மை மணக்கும் மனத்துக்குள்
   வெல்லும் ஒளியை உற்றிடலாம்!
தண்மை மணக்கும் புவி..காணத்
   தமிழாம் ஒளியை ஏற்றுகவே!
  
5.
சொல்லும் செயலும் ஒன்றானால்
   சுடரும் புகழைச் சூடிடலாம்!
செல்லும் இடத்தில் சிறப்பெய்திச்
   செம்மை வாழ்வை நாடிடலாம்!
அல்லும் பகலும் அருளொளியை
   அகத்துள் ஏற்றித் தொழுதிட்டால்
வெல்லும் ஞான விழிதிறக்கும்!
   விண்ணார் உலகின் வழிதிறக்கும்!
  
6.
உரிமை ஒளியே உலகமெலாம்
   ஓங்கிப் பரவ உழைத்திடுவோம்!
பெருமை ஒளியே செயற்பாட்டில்
   பெருகிப் பரவத் திறம்பெறுவோம்!
அருமை ஒளியே தமிழாகும்!
   அறத்தின் ஒளியே குறளாகும்!
ஒருமை ஒளியே உளமேவ
   ஒளிரும் பொன்போல் நம்முடலே!
  
7.
கண்ணைக் கவரும் கலையொளியே!
   கருத்தைக் கவரும் கவியொளியே!
மண்ணைக் கவரும் மதியொளியே!
   மனத்தைக் கவரும் மாதொளியே!
பெண்ணைக் கவரும் அணியொளியே!
   பிறப்பைக் கவரும் அருளொளியே!
விண்ணைக் கவரும் தமிழொளியே!
   வேண்டு! வேண்டு! மெய்யொளியே!
  
8.
வடலுார் நல்கும் திருவொளியால்
   வளமாய் வளரும் நன்மனிதம்!
உடலுார் உணர்வில் உறுமொளியால்
   உயரும் வாழ்க்கை யெனும்பாதை!
மடலுார் காலைக் கதிரொளியால்
   மலர்ந்து மணக்கும் குளிர்சோலை!
வடமூர் தேரின் அழகொளியால்
   மயங்கி மகிழும் மெய்யுள்ளம்!
  
9.
உலகின் முதலே ஒளியாகும்!
   உயிரின் தன்மை ஒளியாகும்!
நிலவின் வருகை இராப்பொழுதை
   இனிக்கச் செய்யும் ஒளியாகும்!
குலவும் தமிழும் ஒளியாகும்!
   கூத்தன் உருவும் ஒளியாகும்!
நிலமும் செழிக்க எழுகதிரோன்
   நிகரே இல்லா ஒளியாகும்!
  
10.
ஒளியே போற்றி! ஓமென்னும்
   ஒலியே போற்றி! அருளிதயத்
தெளிவே போற்றி! தித்திக்கும்
   தேனே போற்றி! வான்கொண்ட
வெளியே போற்றி! இவ்வுலகின்
   விளைவே போற்றி! வாழ்விக்கும்
வளியே போற்றி! வண்டமிழின்
   வளமே போற்றி! சீர்..போற்றி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்