பொலிக.. பொலிக.. புத்தாண்டே!
அன்பு மழைபொழிந்து பண்புப்
பயிர்விளைந்து
என்றும் இனிமை இசையளித்து - இன்பமுடன்
முத்தாண்டு பூக்கும் முழுமதிபோல்
வந்திங்குப்
புத்தாண்டு பூக்கும் பொலிந்து!
எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்
தங்கும் வளங்கள் தழைக்கட்டும்! - பொங்குதமிழ்
இன்னெறியை எந்நாடும் ஏற்கட்டும்! சன்மார்க்கப்
பொன்னெறியைப் போற்றிப் புகழ்ந்து!
மனிதம் மலர்ந்து மணம்வீச!
மகிழ்ந்தே
உலகோர் தமிழ்பேச!
புனிதம் பூத்துப் புகழ்மேவ!
பொறுமை!
பொதுமை அரசாள!
கனியும் தேனும் கலந்துாறும்
கம்பன்
கவிபோல் வாழ்வொளிர!
நினைவும் கனவும் நிறைவேற
நெகிழ்ந்து
வருக புத்தாண்டே!
உண்மை ஓங்கி ஒலிக்கட்டும்!
உயிர்கள்
யாவும் களிக்கட்டும்!
தண்மை தழைத்துச் செழிக்கட்டும்!
தமிழ்போல்
இனிமை கொழிக்கட்டும்!
பெண்மை பேணும் நல்லறங்கள்
பெருகும்
புகழை வடிக்கட்டும்!
வெண்மைப் பனிபோல் தெளிவேந்தி
விரைந்தே
வருக புத்தாண்டே
01.01.2015





