samedi 3 août 2019

இரதபந்தம்

 தேர் ஓவியக் கவிதை 11
[செய்யுள் 172 எழுத்து, ஓவியம் 155 எழுத்து]
  
நுாற்கடல் தி.வே. கோபாலையரைப்
பாற்கடல் என்றே பகர்!
  
[கலிவெண்பா]
    
புதுவை நகர்போற்றுஞ் சீர்மேக வாணர்!
பதித்தநுாற் றேனே பகுத்து - மதன்சேர்க்கும்!
கூர்மை..வே லென்மொழியர்! கோல வுரைச்சுடர்!
சீர்மைமிகு நெஞ்சர்! கவிதைகள் - வார்க்கும்
பெரும்புலமை பொங்கூற்று! பேரறிஞர்! அன்னை
யரும்புகழ் பாடு மறத்தர்! - திருவுடையர்!
வாயே மணக்க இலைபோட்டுக் கோடிநலத்
தாயேபோல் வாழ்வருள் தி.வே.கோ! - துாயசுவை
நுாற்கடற்கார்! சூடிய ஈடிற் சுவடியே
பாற்கட லென்றே பகர்!
    
இலக்கியங்களில் காணப்படும் தேர்க் கவிதைகளில் இதுவே பெரியதாகும். தேரின் நடுத்தட்டு 9, 11, 13 எழுத்துகளைப் பெற்றுவரும் கவிதைகளே மிக அதிகமாகப் பாடப்பட்டுள்ளன. இத்தேர் நடுத்தட்டில் 17 எழுத்துக்களைப் பெற்றுள்ளது.
  
கருத்துரை:
  
தி.வே.கோபாலையர் அவர்கள் திருமாலின் திருப்பெயருடையவர், தமிழை மழையாகப் பொழிந்தவர். புதுவைநகர் போற்றும் புகழுடையவர். அவா் எழுதிய நுால்கள் தேனை அளிக்கும். கல்வியழகைக் கொடுக்கும். நுண்மொழியாளர். இலக்கண உரையாசிரியர்களில் சுடராக ஒளிர்ந்தவர். சிறப்புடைய மனத்தை உடையவர். மிக்க புலமையுடைய கவிதை ஊற்றவர். பேரறிஞர். தமிழ்த்தாயின் புகழ்பாடி அறநெறியில் வாழ்ந்தவர். இறையருள் பெற்றவர். வெற்றிலை போடும் பழக்கத்தை உடையவர். கோடி நலங்களைத் தருகின்ற பெற்ற தாயைப்போன்று வாழ்வளித்தவர்.
  
நற்சுவையுடைய நுாற்கடல் தி.வே. கோபாலாலையர் அவர்கள் எழுதிய இணையிலா நுால்கள் பாற்கடலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire