samedi 13 avril 2024

சாற்றுகவி

 

பாவலர்மணி வ. சண்முகம் இயற்றிய

விருத்தச்சோலை நுாலுக்குச்

சாற்றுகவி

 

பூவாய் மணக்கும் சீருடைய

         புலமை சேர்..வ. சண்முகனார்

நா..வாய் வீட்டில் தமிழன்னை

         நடன மாட யான்கண்டேன்!

பாவாய்ப் பொழிந்த இன்மழையில்

         படர்ந்த விருத்தச் சோலையிது!

கூவாய் குயிலே! இந்நுாலின்

         கோலம் உலகம் அறிந்திடவே!

 

அன்பே சுரக்கும் உளமுடைய

         அருமைச் சீர்..வ. சண்முகனார்

இன்பே சுரக்கும் வண்ணத்தில்

         இனிமை சுரக்கும் எண்ணத்தில்

நன்றே மரபு மணந்திடவே

         நவின்ற விருத்தச் சோலையிது!

குன்றே நின்ற தமிழ்க்கடவுள்

         கொடுத்த இந்நுால் புகழ்பெறுமே!

 

அகத்துள் தமிழே குடிகொண்ட

         அறிவின் கூர்..வ. சண்முகனார்

முகத்தில் சாந்தம் பூத்தாடும்!

         மொழிக்குள் சந்தம் கூத்தாடும்!

செகத்துள் தமிழின் நன்மரபில்

         செழித்த விருத்தச் சோலையிது!

இகத்துள் இந்நுால் சிறப்பெய்தி

         எங்கும் பரவ வாழ்த்துகிறேன்!

 

பாட்டின் அரசர் இடங்கற்ற

         பண்பின் வேர்..வ. சண்முகனார்

ஏட்டின் அரசர் இவரென்றே

         ஏத்திப் போற்றக் கவிசெய்தார்!

காட்டில் உள்ள கனியாவும்

         கமழும் விருத்தச் சோலையிது!

நாட்டில் கற்றோர் வாழ்த்திடுவார்!

         நானும் உரைத்தேன் பல்லாண்டு!

 

முழையூர் மைந்தர்! பாமணியார்!

         முழுமைச் சீர்..வ. சண்முகனார்!

இழையூர் தறிபோல் சொன்னுாற்றே

         இரவும் பகலும் கவிசெய்தார்!

மழையூர் பெற்ற வளமாக

         மலர்ந்த விருத்தச் சோலையிது!

கழையூர் உற்ற இனிப்பெல்லாம்

         காட்டும் இந்நுால் வாழியவே!

 

10.04.2024

 

Aucun commentaire:

Enregistrer un commentaire