mardi 27 juin 2023

பாவலர் நகுலா சிவநாதன்

 


பாவலர் பயிலரங்கில்

ஐந்நுாறு விருத்தங்கள் பாடிப்

பாவலர் பட்டம் பெற்ற

.

பாவலர் நகுலா சிவநாதன்

பல்லாண்டு வாழ்க!

.

பாடு மரங்கில் பற்றுடனே

...........பயின்றார் நகுலா சிவநாதர்!

ஆடு மயிலின் அழகாக

...........அளித்தார் விருத்தம் ஐந்நுாறு!

காடு மணக்குங் கவியெழுதிக்

...........களித்தார் உள்ளங் குளிர்ந்திடவே!

நாடு போற்றும் பாவலராய்

...........நன்றே வாழ்க பல்லாண்டே!

.

ஓடி யோடித் தமிழ்பேசி

...........உயர்ந்தார் நகுலா சிவநாதர்

பாடிப் பாடிப் பயிலரங்கில்

...........பட்டம் பெற்று மிளிர்கின்றார்!

தேடித் தேடித் தேனீக்கள்

...........சேர்க்கும் மதுவாய்க் கவிதந்தார்!

கோடி கோடி சீர்சூடிக்

...........கொழித்து வாழ்க பல்லாண்டே!

.

அகநுால் புறநுால் ஆய்வுகளை

...........அளிக்கும் நகுலா சிவநாதர்

முகநுால் போற்றும் விருத்தங்கள்

...........முத்தாய் மொழிந்து பெயருற்றார்!

மிகுநுால் புலமை பொலிந்திடவே

...........வியன்னுால் பலவும் படைத்துள்ளார்!

சுகநுால் பாடும் பாட்டரசன்

...........சொன்னேன் வாழ்க பல்லாண்டே!

.

சீரார் கல்விச் சேவையினைச்

...........செய்யு நகுலா சிவநாதர்

ஊரார் உறவார் உவந்திடவே

...........ஓதி யோதி உயர்வுற்றார்!

ஏரார் நிலத்துப் பசுமையென

...........எழிலார் சோலை வாசமெனப்

பேரார் பெருமை, கவித்தலைமை

...........பேணி வாழ்க பல்லாண்டே!

.

சொல்லும் பொருளும் உரைக்கின்ற

...........துாய நகுலா சிவநாதர்

அல்லும் பகலும் இனமோங்க

...........ஆக்கந் தீட்டி நலஞ்செய்தார்!

செல்லும் இடங்கள் சீர்பாடும்!

...........செம்மைத் தமிழோ தார்சூடும்!

வெல்லுங் கவிதைப் பாட்டரசன்

...........விளித்தேன் வாழ்க பல்லாண்டே!

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

27.06.2023

 

Aucun commentaire:

Enregistrer un commentaire