வணக்கம்
பாவலர் வெற்றிமகன் பிறந்தநாள் வாழ்த்து!
வெற்றி மகனின் பிறந்ததினம்
மேன்மை கொண்டாள் தமிழன்னை!
பற்றித் தழைக்கும் கொடிபோன்று
பண்பும் அன்பும் படர்நெஞ்சன்!
முற்றிப் பழுத்த கனியாக
முழங்கும் கவிகள் இனித்தனவே!
ஒற்றி யூரான் திருவருளால்
உலகம் போற்ற வாழியவே!
வெற்றி மகனின் பிறந்ததினம்
வேங்கைக் குலத்தின் இனியதினம்!
சுற்றிப் பழுத்த சோலையெனச்
சொற்கள் பழுத்த கவிதைதினம்!
பெற்றி மணக்கும் சிந்தனைகள்
பேணிச் சிறக்க வந்ததினம்!
நெற்றிக் கண்ணன் திருவருளால்
நீடு புகழில் வாழியவே!
வெற்றி மகனின் பிறந்ததினம்
வீர நிலத்தின் வல்லதினம்!
ஒற்றி யொற்றித் தமிழடியை
ஓதிக் களிக்க உற்றதினம்!
சிற்றி லாடும் இனிமையெனச்
சிந்தை மகிழப் பூத்ததினம்!
கொற்றி யன்னை திருவருளால்
குலமே கொழிக்க வாழியவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire