samedi 12 novembre 2022

கலிவிருத்தம் - 15


 

விருத்த மேடை - 79

 

கலிவிருத்தம் - 15

 

மா + மா அல்லது விளம் + மா அல்லது விளம் + காய்

 

கண்ணர் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்றன்

திண்ணா கம்பிளக் கச்சரஞ் செலவுய்த்தாய்

விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே! - 1

 

இலங்கைப் பதிக்கன் றிறையா ய,அரக்கர்

குலங்கெட் டவர்மா ளக்கொடிப் புள்திரித்தாய்!

விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய

அலங்கல் துளப முடியாய் அருளாயே! - 2

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி]

 

பெண்ணே ஏன் பிரிந்தாய்?

 

மின்னும் விழிகள் மீனிடம் சரணாகும்!

பின்னும் கார்குழல் பெயர்ந்து முகின்மேவும்!

அன்னம் இடத்தில் அடிகள் உறவேற்கும்!

என்றன் இதயம் எங்குறும் ஏந்திழையே!

 

[பாட்டரசர்] 23.06.2022

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இந்தக் கலிவிருத்தம் நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு 12 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 13 எழுத்துகளும் பெறும்.

 

அடியின் முதல் மாச்சீர் வரவேண்டும். தேமா இரண்டு எழுத்துகளைப் பெறும். புளிமா 3 எழுத்துகளைப் பெறும்.

 

இரண்டாம் சீர் மூன்று எழுத்துகளையும், மூன்றாம் சீர் மூன்று எழுத்துகளையும் பெற்றுவரும். அவ்விடங்களில் புளிமா அல்லது கூவிளம் அல்லது தோமாங்காய் வரும்.

 

நான்காம் சீர் 4 எழுத்துகளைப் பெற்றுவரும். இவ்விடத்தில் புளிமாங்காய் அல்லது கூவிளங்காய் வரும்.

 

இவ்வகையில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
12.11.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire