vendredi 27 août 2021

வெண்பா மேடை - 211

 


வெண்பா மேடை - 211

 

ஒரு வெண்பா பொருள் ஐந்து

[வேறு வகை]

 1.

பூத்தோங்கும் வாழ்க்கையும், பொன்னோங்கும் சிந்தையும்,

மூத்தோங்கும் கொள்கையும், முத்தமிழும், - காத்தோங்கும்

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

 2.

வல்ல குருவருளும் வண்ணத் திருவருளும்

நல்ல உயர்நட்பும் நற்புகழும் - சொல்லரிய

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

3.

தென்னவளே! எந்நாளும் தேனாய் இனிப்பவளே!

பொன்னவளே! பூத்துப் பொலிபவளே! - என்னவளே!

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

4.

தேரோடும் வண்ணமெனச் சீரோடும் என்பாட்டில்

ஏரோடும் இன்ப எழிலுாறும்! - பேரோதும்

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

5.

இல்லறம் பூத்திடுமே! இன்னிலை கூத்திடுமே!

நல்லறம் காத்திடுமே! நற்றொண்டு - பல்கிடுமே!

முன்னைப் பயனும், முதுநெறியும், மூச்சோங்கும்

அன்னை அளித்த அருள்!

 ஐந்து வெண்பாக்களிலும் பின் இரண்டடிகள் ஒன்றாக வரவேண்டும். முன் இரண்டடிகள் மாறிப் பொருள் வேறாக அமையவேண்டும். மேலுள்ள வெண்பாக்கள், சிறந்த வாழ்வு, இறையருள், காதல், பாடல், இல்லறம், எனப் பொருள்பெற்று வந்துள்ளன.

 'ஒரு வெண்பா ஐந்து பொருள்' வரும் இவ்வகை  வெண்பா  எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

27.08.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire