dimanche 24 janvier 2021

சிந்துப்பா மேடை

 


 சிந்துப்பா மேடை - 14

                                             

கும்மி

 

நீதியைக் காப்பவர் மாறிய தால் - இந்த

நீணிலம் நீரின்றி வாடிடு மேoo

சாதியை ஆட்சியர் சாற்றுவ தால் - கொடுந்

தன்மைகள் சாய்ந்திடப் போரிடு வோம்oo

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

 

கும்மி, ஓரடியில் 8 சீர்களைப் பெற்றிருக்கும். 'நீதியை' எனத்தொடங்கி 'வாடிடுமே' என்பது வரை ஓரடி. 'சாதியை' எனத் தொடங்கிப் 'போரிடுவோம்' என்பது வரை மற்றோரடி.

 

இவ்விரண்டு அடிகளும் 'நீதியை', 'சாதியை' என ஓரெதுகையைப் பெற்றுள்ளது.

 

ஒவ்வோர் அடியிலும் முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறவேண்டும். [நீதியை, நீணிலம்] [சாதியை, தன்மைகள்]

 

முதல் 7 சீர்களில் ஒவ்வொன்றிலும் மூன்று சிந்தசைகள் இருக்க வேண்டும். [குறில் - குறிலசை,] [குறில் ஒற்றும், நெடிலும், நெடில் ஒற்றும் - நெடிலசை]

 

8 ஆம் சீரில் ஓரசை மட்டும் வந்து இரண்டு அசைகள் அளபெடுத்து ஒலிக்கும்.  மேலுள்ள கும்மியில் அதனை  வட்டம் இட்டுக் காட்டியுள்ளேன். [மேoo] [வோம்oo]

 

ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீர், ஈரசை உடைய தனிச்சொல்லாக வரும். [இந்த, கொடுந்]

தனிச்சொல்லில் ஈரசை வந்ததால் அதன் முன் மூன்றாம் சீரின் சொல்தொடர்புடைய ஓரசை நிற்கும். அதைச் சேர்த்து நான்காம் சீர் மூன்றசையாகும்.

 

சீர்களின் தொடக்கம், குறிலொற்று, நெடில், நெடிலொற்று என அமைந்தால் ஓசை சிறப்பாக இருக்கும். சீர்களின் தொடக்கம் இணைகுறில் இன்றி இருத்தல் நன்று.  
 

விரும்பிய பொருளில் ' கும்மி' ஒன்று மட்டும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

கும்மி இலக்கணம்

 

எண்சீர் அடிகள் இரண்டொரு தொடையாய்

ஐந்தாஞ் சீர்தொறும் மோனை அமைந்தே

ஈரசை இகவாது இயலும் தனிச்சொல்

அரையடி இறுதியில் அமையப் பெற்று

மும்மையின் நடைப்பது கும்மி யாகும்.

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 38 ஆம் நுாற்பா]

 

தனிச்சொல் முதலடி இறுதியில் தாங்கியும்

தனிச்சொலே இன்றியும் சமைவன உளவே.

 

[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப்பாவியல் - 39 ஆம் நுாற்பா]

நான்மையினத் திரிபுடை மும்மை நடை. ( I4 0 0 ) ( 4+2+2 )
இதன் மொத்த எண்ணிக்கை 8

ஒரு சீரில் 3 சிந்தசைகள் வரவேண்டும் ( 8X3=24 சிந்தசைகள் )

அடி : ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்கும் எண்சீரடி

[ஓரெதுகையயில் இரண்டு அடிகள் வரவேண்டும்]

 

சீர் : மும்மை நடை [ஒரு சீரில் மூன்று சிந்தசைகள் வரவேண்டும்]

 

தனிச்சொல் :  நாலாம் சீரின் இறுதிப் பகுதியில் ஈரசைச் சொல்லாக வரும்

 

1, 5 ஆம் சீரிகளில் மோனை அமையவேண்டும்

 

8 ஆம் சீர் ஓரசை மட்டும் வரும், அடியீற்றில் இரண்டு அசைகள் அளபெடுத்து ஒளிக்கும்

 

மேலும் கும்மியைக் குறித்து அறிந்துகொள்ள 'PAAVALAR   PAYILARANGAM' - You Tube  காண்ணொளியைக் காணவும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,

கம்பன் கழகம், பிரான்சு,

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

24.01.2021.


Aucun commentaire:

Enregistrer un commentaire