ஆங்கிலப் புத்தாண்டே வருக!
[ஓரடிக்கு
ஆறு மாச்சீர்]
புவியே
போற்றிப் புகழும் ஆண்டே
பொழிலாய் மலர்க!
கவியே போற்றிக் கமழும் ஆண்டே
கலையாய் வளர்க!
தவமே போற்றித் தழைக்கும் ஆண்டே
தமிழாய்ப் புலர்க!
சிவமே போற்றிச் செய்தேன் விருத்தம்
செகமே உயர்க!
மண்மேல் உழவு மாட்சி மணக்க
வழிகள் காட்டு!
கண்மேல் அழகு காட்சி மணக்கக்
காதல் கூட்டு!
விண்மேல் துாய்மை மேவி மணக்க
விதிகள் தீட்டு!
பண்மேல் என்றன் பாதை மணக்கப்
பாக்கள் சூட்டு!
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
உலகுக்[கு] ஓது!
என்றும் உழைப்பை ஏற்றோர் இடத்தில்
இன்னல் ஏது?
தின்று கொழுக்கும் சிந்தை கொண்டோர்
திசையை மோது!
நன்று நன்று நல்லோர் நெறியை
நாளும் ஊது!
மூக்கும் வாயும் மூடும் துணியை
முற்றும் நீக்கு!
நாக்கும் வாக்கும் நன்றே நடக்க
நலமே தேக்கு!
ஆக்கும் பணிகள் அமுதாய் இனிக்க
ஆண்டே நோக்கு!
தாக்கும் கொடுமை! தாழும் சிறுமைத்
தன்மை போக்கு!
ஆலும் வேலும் அளிக்கும் வன்மை
ஆன்றோர் வாக்கு!
நாலும் இரண்டும் நல்கும் நன்மை
நாடித் துாக்கு!
கோலும் ஏடும் கொண்டே வாழக்
கொள்கை யாக்கு!
வேலும் மயிலும் விளைத்த சீரால்
வினையைப் போக்கு!
முகநுால் வழியே முதலைத் தேடும்
முடமே மாற்று!
அகநுால் வழியே ஆழும் அன்பை
ஆண்டே போற்று!
தகுநுால் கற்றுத் தண்மை யுற்றுப்
சால்பே யாற்று!
மிகுநுால் தேடி வெல்லும் மனமே
மேன்மை யூற்று!
பாதை யெங்கும் பசுமை படர்ந்து
படைப்பாய் பொழிலே!
கோதை தமிழின் கோலம் உணர்த்திக்
கொடுப்பாய் எழிலே!
போதை யேறிப் புலம்பும் செயலைப்
புடைப்பாய் தனியே!
வாதை நீக்கி வளத்தைத் தேக்கி
வடிப்பாய் வழியே!
வடலுார் வள்ளல் வகுத்த வழியை
வாரி வழங்கு!
உடலுார் உயிரின் ஒளியாம் நிலையை
ஓதி முழங்கு!
கடலுார் கலமாய்க் காண வேண்டும்
கடமை ஒழுங்கு!
மடலுார் மணமாய் வாழ்வை வடித்து
மண்ணே இயங்கு!
மதத்தின் ஆட்சி மகிழ்வைப் போக்கும்
மதியைப் புகட்டு!
பதத்தின் ஆட்சி பாரைப் புரட்டும்
பாங்கைத் திரட்டு!
வதத்தின் ஆட்சி வாரா வண்ணம்
வஞ்சம் அகற்று!
சதத்தின் ஆட்சி தழைக்கும் வாழ்வைச்
சாற்றி உயர்த்து!
பண்டைத் தமிழைப் படிக்கப் படிக்கப்
பாரே மணக்கும்!
சண்டை நாடு சதிகள் விடுத்துச்
சால்பைச் சமைக்கும்!
அண்டை வீடும் அண்ணன் உறவாய்
ஆகி இனிக்கும்!
தண்டைச்
சந்தம் தந்தே பாடல்
தமிழை இசைக்கும்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு
01.01.2021
Aucun commentaire:
Publier un commentaire