dimanche 22 mars 2020

நொண்டிச் சிந்து

சிந்துப்பா மேடை - 6
  
நொண்டிச் சிந்து
  
பெயர் விளக்கம்
  
நொண்டுதல், ஒரு காலும் மற்றொரு காலும் நீளம் குறைந்தும் கூடியும் இருப்பதால் உண்டாவது. அடி வைக்கும் அளவிலும் கூடுதல் குறைதல் உண்டாகும். நொண்டிச் சிந்தின் ஓரடியில் முதல் அரையடி இரண்டாம் அரையடியைவிடக் குறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது என்றுரைபார். இக்கருத்துச் சரியன்று. இப்பாடலின் ஓரடியின் இரண்டு அரையடிகளும் சமமான இசைப்பா அசைகளைக் கொண்டவை. ஒவ்வொரு சீரும் நான்கு அசைகளைப் பெற்று இரண்டு அரையடிகளும் சமமாக நடக்கும்.
  
களவாடியதனால் தண்டனையாகக் கால்வாங்கப்பட்டு, நொண்டியாகிப் போன கள்வனின் கதையை நொண்டி நாடகம் என்ற பெயரில் சென்ற நுாற்றாண்டுகளில் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் நொண்டியானவன் பாடும் பாடல் நொண்டிச் சிந்து எனப் பெயர் பெற்றது.
  
சிந்துப் பாக்களில் அமைந்திருக்கின்ற சீர்களில் உள்ள உயிர்க்குறில்[அ] , உயிர்நெடில்[ஆ], மெய்யோடு கூடிய குறில்[க], நெடில்[கா] ஆகிய ஒவ்வோர் உயிரும் ஓரசையாகும்.
  
கலைமகளே!
  
1.
அருங்கவி புலவனை யே... - அவனியில்
அலையுறப் புரிவதேன் கலைமக ளே...
பெருஞ்சுவை கனியினை யே... - தரைதனில்
பிழிந்திடும் பழியுமேன் மொழிமக ளே...
  
2.
கொடியவர் உறவினை யே... - மனமுறக்
கொடுத்ததும் துயருற விடுத்தது மேன்...
அடியவர் அருளமு தே... - அருமகன்
அடைநலம் உறுதடை படைத்தது மேன்...
  
3.
கடைநிலை நபர்களை யே... - உயர்வெனக்
கருதுவ தோ.மனம் உருகுவ தோ...
தடைநிலை செயல்களை யே... - மகிழ்வெனத்
தரிப்பது வோ.துயர் விரிப்பது வோ...
  
4.
நறுமலர் வனத்திடை யே... - ..சிறு
நரிபல புகுந்தடம் புரிவது வோ...
திருமலர் மனத்தவ ளே... - .உன்னருள்
திகழொளி எனையுற அகமிலை யோ...
  
5.
நிலமுறு வா.ன்மழை யால்... - வளமுறு
நிலையுறு மே.புவி கலையுறு மே...
நலமுறு கவிமழை யால்... - எனதுயிர்
நனைந்திட வே.அருள் புனைந்திடு வாய்...
  
6.
இனமொளிர் செயலா.ற் றி... - .நாளும்
எழுமனம் இருளதில் முழுகுவ தோ...
மனமொளிர் கவிமக ளே... - .உன்மகன்
மதியொளி குறையுற விதியுள தோ...
  
7.
பணியொளிர் புலவனு ளம்... - சிறுநொடி
பாழ்நிலை அடைவது சூழ்நிலை யோ...
அணியொளிர் தமிழ்மக ளே... - .உன்மொழி
அகமுறும் எனக்கினி நிகரிலை யே!
  
8.
ஆ.சையின் சுழற்சியி லே... - .என்னுயிர்
அடிமுதல் முடிவரை துடிப்பது வோ...
ஓ.சையின் இசைமக ளே... - .உன்னருள்
ஓங்கிட உளமுறும் தீங்கறு மே...
9.
கற்பொளி அருளிடு வாய்... - கலையொளி
கவினுற எனதுளம் தவழ்ந்திடு வாய்...
பொற்பொளி புலமையி னால்... - ..என்றும்
புகழொளி வீ.சிடும் தகைதரு வாய்!
  
10.
உன்.னடி தொழுதிடு வேன்... - ..இன்ப
உயர்தமிழ் உவப்புற நயந்தருள் வாய்...
பொன்.னடி சுடர்மக ளே... - ..என்றன்
புலமுறும் உணர்வினில் வலம்வரு வாய்...
  
[பாட்டரசர்]
  
நொண்டிச் சிந்து என்னும் நாட்டுப்புறப் பாடல்வகையில் பத்துக் கண்ணிகள் பாடியுள்ளேன். ஓரடியில் எட்டுச் சீர்கள் இருக்கும். மேலுள்ள முதல் கண்ணியில் 'அருங்கவி' என்பது முதல் 'கலைமகளே' என்பது வரையில் ஓரடி. 'பெருஞ்சுவை' என்பது முதல் 'மொழிமகளே' என்பது வரை இரண்டாம் அடி.
  
இரண்டு எண்சீரடிகள் ஓர் எதுகையால் தொடுக்கப்பட்டிருக்கும்.
  
ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும்.
  
நான்மை என்னும் தாளநடையுடன். [ஒவ்வொரு சீரிலும் நான்கு அசைகள் இருக்கும்]
  
நான்காம் சீரில் தனிச்சொல் அமையும்.
  
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
  
பாடும்போது இசை நீளும் இடங்களைப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும்போது இப்புள்ளிகள் இடுவதில்லை. கற்போர் உணரும் பொருட்டு மேலுள்ள பாடலில் அசை நீளும் இடங்களில் புள்ளியிட்டுள்ளேன்.
  
இலக்கணம்
  
எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய்,
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து,
நான்மை நடையுடன், நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது.
நொண்டிச் சிந்தென நுவலப் படுமே.
      
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்,
ஐந்தாஞ் சீரிலும் ஏழாம் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே.
    
[முனைவர் இரா. திருமுருகனார், சிந்துப் பாவியல் - 35. 36]
    
நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நான்கு உயிர்ளைப் பெற்றுவருவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும் எதுகை பெற்றுவருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகை அளிக்கும்.
     
இன்றைய நொண்டிச் சிந்துக்களில் தனிச்சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள் அருகி வருகின்றன.
  
அத்தின புரமுண் டாம் - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்!
பத்தியில் வீதிக ளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்!
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்!
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடும்இ ரதிநிகர் தேவிக ளாம்!
  
[மகாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் - 7]
  
இதில் 'வெள்ளை', 'எங்கும்', 'அங்கு' என ஈரசைச்சொற்கள் பெரும்பாலும் தனிச்சொல்லாக உள்ளன. 'இவ்' என்னும் ஓரசைச்சொல் அருகி வந்தது.
  
விரும்பிய பொருளில் 'நொண்டிச் சிந்துவில்' இரண்டு கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
21.03.2020.

1 commentaire:

  1. இளநிலா பூமியின் மேல் - வீசும்
    எழிலொளி யால்மலர் அல்லியைப் போல்
    அளவிலா மகிழ்வடைந் தேன் - தங்கள்
    அமிழ்தன்ன கண்ணிகள் படித்துவிட் டே!
    தெளிவுறு வார்த்தைக ளால் - நொண்டிச்
    சிந்தின் இலக்கணம் எமக்குரைத் தீர்
    வளமுறு கவியர சே! - உமை
    உளமுற வேதலை வணங்கிடு வேன்!

    - இமயவரம்பன்

    https://solvelvi.blogspot.com

    RépondreSupprimer