samedi 25 avril 2015

அவள் ஒரு கவிதை




அவள் ஒரு கவிதை!

அவள்
ஒரு கவிதை!
என்னை வாழ்விக்க வந்த
தமிழ்த்...தை!

மெய்யெழுத்தாய் நான்!
உயிரெழுத்தாய் அவள்!
புணர்ந்து படைக்கின்றோம்
புதுப்புதுக் கவிதை!

அசையும் விழிகள்
ஆயிரம் கவிகளைச் சொல்லும்!

ஊடல் பார்வை
நேரசை என்பேன்!
கூடல் பார்வை
நிரையசை என்பேன்!

மாச்சீர்
அவளின் வண்ணங்கள்!
விளச்சீர்
அவளின் எண்ணங்கள்!

காய்ச்சீர்
அவளிடம் உண்டு!
கனிச்சீர்
அவள்தரும் தொண்டு!
பூச்சீர்
அவளின் பொன்முகம்!
நிழற்சீர்
அவளின் மென்னகம்!

கவிதை எழுதக்
கற்றுத் தருவதில்
அவள் ஆசிரியத்தளை!

எனக்குமட்டும்
சொந்தம் என்பதால்
அவள் வெண்டளை!

காய்மனம் கொண்ட
என்னோடு
கனிமனம் கொண்ட
அவள் இணைவதால்
கலித்தளை!

வஞ்சி என்பதால்
அவளுக்கே உரியது
வஞ்சித்தளை!

சீறடிச் செம்மலர்
சிந்தையை அள்ளும்!
சீர் அடி நல்கிச்
செந்தமிழ் துள்ளும்!

மோனை போன்று
மோகம் கொடுப்பவள்!
எதுகை போன்று
என்னோடு இருப்பவள்!

வாழைத் தொடையும்
வண்ண நடையும்
அவளிடம் உள்ளன!

விழியோ வல்லினம்!
மொழியோ மெல்லினம்!
உண்டோ இலையோ
இடையினம்?

ஆசிரியப்பா
அவளின் இல்லம்!
வெண்பா
அவளின் உள்ளம்!
கலிப்பா
அவளின் உருவம்!
வஞ்சிப்பா
அவளின் பருவம்!

கற்றோர் இடத்தில்
நூற்படை யுண்டு!
கன்னி அவளிடத்தில்
நூலிடை யுண்டு!

அணிகளால்
அருந்தமிழுக்கு அழகு!
அவளால்
அணிகளுக்கு அழகு!

கவிதையும்
போதை தரும்!
அவள் கண்களும்
போதை தரும்!

கவிதை எழுத
ஊற்றுவது மை!
அவள்
கண்களில்
தீட்டுவது மை!

கார்மேகம்
கவிதைக்குக் கரு கொடுக்கும்!
கார்க்குழல்
காதலுக்கு உரு கொடுக்கும்!

முத்தமிழின்
மொத்தச் சுவையினைப்
பெற்ற பாவை!
நெஞ்சே!
அவளைப் போற்றி
அமுதப்பா வை!

தமிழ்போல் என்றும்
இனிப்பவள்!
ஆம்...
அவள் ஒரு கவிதை! 

24.04.2015
 

13 commentaires:


  1. அரம்பை அவளே என்றெண்ணும்
    அழகின் உச்சம் அவளிடத்தில்
    மரபுக் கவியின் இலக்கணங்கள்
    மலிந்தே கிடப்பதைக் கண்டதனால்
    அரங்கை ஆளும் கவிஞருள்ளம்
    அன்பாய் சொரியும் கவிதன்னில்
    கிரகம் எல்லாம் தமிழ்வாசம்
    கேட்கத் தொடங்கும் இனியென்றும் !

    அருமை அருமை கவிஞர் அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    காரிகை காரிகை காட்டிய காதலில்
    வாரி வழியுதே வாழ்த்து !

    தம +1


    RépondreSupprimer
  2. தங்களின் அண்மைப்பதிவுகளில் நான் மிகவும் அதிகம் விரும்பி திரும்பப் திரும்பப் படித்தேன். மிகவும் அருமையாக உள்ளது. மனதில் பதிந்துவிட்டது. நன்றி. அருமையான புகைப்படத்தைத் தெரிவு செய்துள்ளீர்கள்.

    RépondreSupprimer
  3. மிகவும் ரசித்துப் படித்தேன் ஐயா...

    RépondreSupprimer
  4. ஒரு கவிதையில் அனைத்தையும் அடக்கி விட்டீர்களே! அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  5. இலக்கண அழகை வர்ணித்து கவிதை மிகவும் அருமை! ரசித்தேன்! வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer


  6. அவளோர் கவிதையெனும் ஆரமுதைச் செய்தீர்!
    சுவையோ புதிதென்று சொல்வேன்! - புவியோர்
    புகழ்ந்தேத்தும் வண்ணம் பொலிகின்ற எண்ணம்
    தவழ்ந்தேத்தும் இன்பம் தழைத்து

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      அவையோர் மகிழ அளித்த கவியைச்
      சுவையோ சுவையென்று சொன்னீர்! - கவியோ
      கடலென்று காட்டும் தமிழ்ச்செல்வா! தாழை
      மடலென்று தந்தாய் மணம்!

      Supprimer
  7. அற்புதமான கவிதை அறிய கண்டேன் இனிமை இன்பம் பொங்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் - Asokan Radjou

    RépondreSupprimer
  8. இனிய வணக்கம் கவிஞர்!!

    பாக்களின் படையலால் பாவையோ பாடுபொருளாகிறாள்!!
    தமிழ் பாடும் பாவை தமிழாளும் பாவை
    கவிஞர் உலகாளும்
    தமிழ்ப்பாவை!!!

    அருமை அருமை!!

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கவிஞர்!! - Renugadevi Velusamy

    RépondreSupprimer

  9. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

    யாப்புத் திறனுறழ ஆரணங்கின் சீர்காட்டிச்
    நாப்புத் தேனருந்தும் நற்கவிதை. - வாய்ப்பச்
    சுவைத்தேன் இதுகவியோ நற்சுவைத்தேன் பாவலர்க்கு
    உவந்தளித்தேன் நன்றியொடு வாழ்த்து.

    RépondreSupprimer
  10. Kavingnar Pasupathy Pachu En iniya nanbarey! Vananakkam! Nan thangal ninaivil lrukinreyna theriyavillai. France kamban kazhaga aandu vizha nooluku kavidai yezhudi thngal parattai petravan (pon. Pasupathy) . Thaangal pudukavidai yezhuduvirgal enru enaku theriyadu. Idu pudu kavidai vadivathil mrabu kvidaiyin angangal palavatrai miga inimaiyagavum nutpamagavum kaadal suvaiyodu pattiyalittu inbamazhi peidullir! Theli thamizhil thangal padalkalai padikumpodu,thangal ninaivu varum. Thaangal pduvai varumpodu orumuraiyavadu thangalai parkavendum enbadu ennudaiya neendanal avaa. Meendum nanriyum parattukalum!

    RépondreSupprimer

  11. செ சுவாதி அருமை.....அழகு...உங்கள் தமிழுக்கு தமிழே அடிமை

    RépondreSupprimer
  12. தமிழே காதலாய்...காதலியாய்...அருமை

    RépondreSupprimer