dimanche 16 novembre 2014

ஒரு - ஓர் விளக்கம்!




தமிழில் ஒரு ஓர் என்ற இரண்டு சொற்களும் ஒருபொருள் குறிப்பன. எவ்விடத்தில் ஒரு வரும்? எவ்விடத்தில் ஓர் வரும்? சிலர் பாடல்களில் நிரையசை வேண்டுமிடம் ஒரு என்ற சொல்லையும், நேரசை வேண்டுமிடம் ஓர் என்ற சொல்லையும் பயன்படுத்துவதைக் காண்கிறேன். பலர் விரும்பிய வண்ணம் இவ்விரு சொல்லை கையாள்வதைக் காண்கிறேன்.

ஆங்கில மொழியில் 'an' 'a' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். உயிரெழுத்துக்கு முன்னே 'an' வரும் (an apple),  மெய்யெழுத்துக்கு முன்னே 'a' வரும் (a book).

பிரஞ்சு மொழியில் 'un' 'une' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். ஆண்பால் சொல் முன்னே 'un' வரும். ஒரு பையன் என்பதை 'un garçon' என்று எழுதுவர். பெண்பால் சொல் முன்னே 'une' வரும். ஒரு பெண் என்பதை 'une femme' என்று எழுதுவர்.

தமிழில் ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில் வருமொழியில் உயிரெழுத்துக்களும், யகர ஆகாரமும் முதலாகிய மொழிகள் வருமிடங்களில் நிலைமொழியாகக் கொள்ளப்படும் ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாக, ரு என்பதன் கண் உள்ள உகரம் கெட, ஒரு என்பது ஓர் என்று ஆகும். இதனைத் தொல்காப்பியம் எழுத்து 479 ஆம் நுாற்பா உரைக்கும்.

"அதனிலை உயிர்க்கும் யாவரும் காலை
முதனிலை ஒகரம் ஓஆகும்மே
ரகரத்து உகரம் துவரக் கெடுமே"

ஒரு + அரசு = ஓர் அரசு
ஒரு + இரவு = ஓர் இரவு
ஒரு + யானை = ஓர் யானை

என்றாற்போல் வருவன வழாநிலையாம்.

இருபுலவா், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல் வருவன யாவும் வழூஉத் தொடர் ஆகும். புலவா் இருவா், ஆழ்வார் பன்னிருவா், நாயன்மார் அறுபத்து மூவா் என்றாற்போல் அமைக்கப்படும் தொடர்களே வழாநிலை யாகும்.

ஓா் அரசன் என்பது வழு. அரசன் ஒருவன் என்று கூறுதலே வழாநிலை யாகும்.

பல அரசா், சில அரசா் என்றாற்போல் வருவனவற்றைப் பலா் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்வர் உரையாசிரியர்கள். [தொ.எ.153 நச்] எனவே இவற்றையும் அரசர் பலர், அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.

16.11.2014
 

24 commentaires:

  1. வணக்கம் ஐயா!

    தகுந்த நேரத்தில் மிகத் தேவையான அவசியமான பதிவு – பாடம் தந்துள்ளீர்கள்!
    மிக்க நன்றி ஐயா!

    இப்பொழுதுகூட எனது பதிவில் தெரிந்திருந்த இதனை
    மனம் படபடப்பில் அவசரப் பதிவாக இடும்போது தவறிழைத்துத்
    தங்களின் சுட்டுதல்லாற் கண்டு திருத்தினேன்.
    இனி வருங்காலங்களில் இத்தவறு நேராமல் கவனித்துக் கொள்கின்றேன் ஐயா! தவறினைக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா!

    ஐயா!..
    // ஒரு + அரசு = ஓர் அரசு
    ஒரு + இரவு = ஓர் இரவு //

    இது வழாநிலை எனக்கூறியுள்ளீர்கள். எனக்கொரு சந்தேகம்..

    ஒரு + அரசு = (ஓர் அரசு) - ஓரரசு
    ஒரு + இரவு = (ஓர் இரவு) - ஓரிரவு

    சேர்தெழுதும் போது ஓரரசு, ஓரிரவு இப்படி
    எழுதுவது வழுவா ஐயா!..

    நல்ல பதிவு ஐயா! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓர் அரசு என்று பிாித்தும் எழுதலாம், ஓரரசு என்று சோ்த்தும் எழுதலாம்.
      இரண்டும் சாியே.

      முன்வருகை உன்வருகை! முத்தமிழ்ச் செல்வியின்
      பொன்வருகை என்பேன் புகழ்ந்து!


      Supprimer

  2. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான் இருந்தான் என்று எழுதுகிறோமே இது சரியா

    RépondreSupprimer
    Réponses

    1. ஓா் ஊாில் அரசன் ஒருவன் இருந்தான் என்று எழுதுவதே சாியான தொடா்.

      இரண்டாம் வருகையை எண்ணி மகிழ்ந்தேன்
      திரண்டு பெருகுதே தேன்!

      Supprimer

  3. ஓா்விளக்கம் கற்றேன்! உயா்திணை எண்ணியலின்
    சீா்விளக்கம் கற்றேன்! செழிப்புற்றேன்! - போ்விளக்க
    ஆக்கம் அளிப்பீா்! அமுதளிப்பீா்! எம்மனத்துள்
    ஊக்கம் அளிப்பீா் உவந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தென வந்தொளிரும் மூன்றாம் வருகைக்குக்
      கொத்தெனப் பூக்கள் கொடுக்கின்றேன்! - சத்தெனத்
      தங்கத் தமிழ்தந்த தண்டமிழ்ச் செல்வா..நீ
      பொங்கும் தமிழின் பொழில்!

      Supprimer
  4. எனது நீண்ட நாள் ஐயம் தெளிந்தது ஐயா
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஐயம் அகன்றால் அகமொளிரும்! நம்மறிவை
      வையம் புகழும் மகிழ்ந்து!

      Supprimer
  5. சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனபாலன் வந்திங்குத் தந்த கருத்து
      மனமாளும் நன்றே மணந்து!

      Supprimer
  6. ஒருவிளக்கம் என்றாலும் ஒண்டமிழ்பா தன்னில்
    தருவிளக்க மாகியது தங்கும்! - கருவிளக்கக்
    கூடாதோ மூங்கிலுறை காற்றே ? உமதருளைத்
    தேடாதோ வெண்பாத் திரு!

    இலக்கண விளக்கம் அறிந்தேன்.

    எதுகைக்காய் ஒருவை ஓர் ஆக்கியும் ஓர் என்பதை ஒருவாக்கியும் முன்னோர் ஆளக் கண்டிருக்கிறேன்.

    தங்களின் விளக்கம் கற்றேன்.

    நன்றி!!!

    RépondreSupprimer
  7. சிறப்பான இலக்கணப் பகிர்வு! அறிந்து கொண்டேன்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்றும் இலக்கணம் இன்றேன் சுவையென்று
      நன்றே உணா்தல் நலம்!

      Supprimer
  8. ஐயா, "ஓர் அரசு" என்பது சரியானால், "ஓர் அரசன்" எப்படித் தவறாகும் என்று புரியவில்லை. அரசன் உயர்திணை என்பதாலா?

    RépondreSupprimer
  9. எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கிறது

    RépondreSupprimer
  10. அய்யா வணக்கம்.
    ஒரு ஓர் விளக்கம் தேவைதான். ஊடக நண்பர்களுக்கு இதுபோலும் எளிய இலக்கணத் தேர்விற்குப் பிறகே தொலைக்காட்சியில், பத்திரிகையில், திரைப்படக் கதை-உரையாடல் பிரிவில் பணிகிடைக்கும் என்னும் நிலையை அரசுகள் ஏற்படுத்தினால் தமிழ்மொழிச் சிதைவு குறையும். “பிரஞ்சு மொழியில் 'un' 'une' என்ற இரண்டு சொற்களும் ஒன்று என்ற பொருளைச் சுட்டும் சொற்கள். ஆண்பால் சொல் முன்னே 'un' வரும். ஒரு பையன் என்பதை 'un garçon' என்று எழுதுவர். பெண்பால் சொல் முன்னே 'une' வரும். ஒரு பெண் என்பதை 'une femme' என்று எழுதுவர்“ - இதைக்கண்டதும் எனக்குள் சிறு பொறி. தங்களின் கவிதைப் படைப்புகளின் ஊடாகத் தமிழ்-ஃபிரெஞ்சு மொழி ஒற்றுமைக் கூறுகளை அவ்வப்போது எழுதுங்களேன் அ்ய்யா! தமிழ்உலகம் நன்றிபாராட்டும். நன்றி.

    RépondreSupprimer
  11. ஐயா!
    உயிர் முன் 'ஓர்' வர
    எஞ்சிய இடங்களில் 'ஒரு' வருமே!

    அதுபோல

    உயிர் முன் 'அஃது' வர
    எஞ்சிய இடங்களில் 'அது' வருமே!

    அடுத்த
    இலக்கண விளக்கமும்
    எனக்கு நிறைவைத் தருகிறதே!

    RépondreSupprimer
  12. நல்ல விளக்கம் ! தேவைதான்!

    RépondreSupprimer
  13. விளக்கம் அருமை.
    நன்றி கவிஞர்.

    RépondreSupprimer
  14. வணக்கம் ஐயா !

    பயனுள்ள சிறப்பான விளக்கம் !பகிர்வுக்கு மிக்க நன்றி .

    RépondreSupprimer
  15. அதுதான் தமிழின் சிறப்பு, இந்த விளக்க உரையை பலர் மேலோட்டமாக படித்திருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே தமிழ் மொழியில் இருக்கும் சொற்களின் சிறப்பை ரசித்துப் படித்திருப்பார்கள். "துமி" என்கிற சொல்லை கம்ப ராமாயணத்தில் கம்பர் பயன்படுத்தியபோது, தமிழறிஞ்சர்கள் எப்படியெல்லாம் ஆராய்ந்து அறிந்தபின்னர் ஏற்றுக்கொண்டனர் என்கிற ஒரு சுவையான சம்பவத்தை படித்தபோதும் இப்படித்தான் இருந்தது (தயிர் கடையும்போது, தாய் தனது குழந்தையிடம், அருகில் வராதே "துமி" தெறிக்கும், வாடை வீசும் என்று கூறிய அந்த சம்பவம் .... தமிழுக்கு பெருமை ) ....... நன்றிகளுடன் கோகி.

    RépondreSupprimer
  16. முன்னே பிறந்த முதுமொழிச் சீர்மையை
    நன்றே நவின்றீர்! நனிநன்றி! - தன்னேர்
    இலாமல் தமிழ்ப்பணி ஏந்தும் குருவே
    உலாபோல் தந்தீர் உரை!

    RépondreSupprimer
  17. என்னுள் இருக்கும் எழுத்தாணி
    எங்கோ விட்ட பிழைகளிவை
    நன்றே உரைத்தீர் நலம்மிகவே
    நானும் கற்றேன் நற்குருவே
    என்றும் உங்கள் மாணவனாய்
    இருக்கும் வரைக்கும் இடரில்லை
    என்றே உரைத்து எழில்தமிழை
    எழுதி மகிழ்வேன் தினம்தோறும் !

    அருமையான அவசியமான பாடம் கற்றேன் மிக்க நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
  18. அருமையான விளக்கம் ஐயா.

    RépondreSupprimer