mardi 2 septembre 2014

புத்துலகம் - பகுதி 1



புத்துலகைப் படைத்திடுவோம்
(தலைமைக் கவிதை)

(அன்பு மலரட்டும் - ஒற்றுமை ஓங்கட்டும் -
சாதிகள் ஒழியட்டும் -  காதல் கமழட்டும்)

இறை வணக்கம்

நெஞ்சுள் மின்னும் சிந்தனையை
            நினைவில் மின்னும் வகையினிலே
கொஞ்சும் தமிழில் கவிதீட்டிக்
            கொடுக்கும் இனிய கவிஞன்யான்!
விஞ்சும் செல்வம் எனக்கில்லை!
            வியக்கும் புலமை என்செல்வம்!
தஞ்சம் தந்த திருக்கண்ணா!
            மிஞ்சும் புகழை விளைத்திடுக!

தமிழ் வணக்கம்

பொன்னைப் பொருளை நாடாமல்
            பூக்கும் இன்பம் தேடாமல்
அன்னைத் தமிழே! உனைநாடி
            அடியேன் இங்கு வாழ்கின்றேன்!
முன்னை மொழியே! முத்தமிழே!
            முல்லைக் காடே! முக்கனியே!
என்னை அவையில் காத்தருளே!
            இனிக்கும் கவிதை தந்தருளே!

அவை வணக்கம்

வில்லன் படத்தைப் பார்க்காமல்
            விசயின் பாட்டைக் கேட்காமல்
தில்லில் நடித்த விக்ரம்தன்
            தீரச் செயலைப் போற்றாமல்
நல்ல தமிழைச் சுவைத்திடவே
            நாடி வந்த அன்பர்களே!
வல்ல புலவன் பாரதிநான்
            வணக்கம் சொன்னேன் ஏற்றிடுவீர்!

விழாக் குழுவினர் வணக்கம்

ஆற்றல் மிக்க நண்பர்அலன்
            அமைத்து நடத்தும் இச்சங்கம்
போற்றும் செயல்கள் பலவாற்றிப்
            புவியில் புகழை எய்துகவே!
ஊற்றாய் இன்பம் சுரக்கின்ற
            ஒளிரும் தமிழைப் பரப்புகவே!
காற்றாய் விரைந்து நலம்சூடும்
            கடமை வீரர் வாழியவே!

ஆட்டம் பார்த்துக் களித்திட்டீர்!
            ஆகா என்றே சுவைத்திட்டீர்!
கூட்டம் முழுதும் கிளுகிளுப்பு!
            குலவும் அன்பின் சலசலப்பு!
நாட்டம் உமக்கு நற்றிமிழ்மேல்
            நன்றே இருக்கும்! அன்பர்களே
ஊட்டத் தோடு கவிசுவைத்தே
            ஒலிப்பீர் ஓங்கிக் கைகளையே!

நான் யார்

வங்க கடலின் வரும்அலைகள்
            வண்ணத் தமிழைப் பாடிடுமே!
எங்கள் புதுவைப் பெரும்புகழை
            இயம்ப வந்த புலவன்யான்!
பொங்கும் புயலைத் தான்கண்டு
            புழுங்கும் நெஞ்சம் எனக்கில்லை!
இங்கே என்றன் மார்புடைத்தால்
            இனிக்கும் தமிழைக் காண்பீரே!

புயலோ! மழையோ! பேரிடியோ!
            புவியைப் பிளக்கும் கொடுமதிர்வோ!
துயரோ! நோயோ! முன்வினையோ!
            துரத்தித் தாக்கும் வன்விதியோ!
புயமே அறுந்து நின்றாலும்
            பொல்லா இவைகள் தாம்கண்டு
பயமோ எனக்கு வந்திடுமோ?
            பசுமைத் தமிழே பகருகவே!

என்னை அடித்துப் போட்டாலும்
            என்றன் குருதி தமிழ்பேசும்!
மண்ணைச் சுமக்கும் பொழுதென்மேல்
            மலரும் பூக்கள் கவிபாடும்!
விண்ணை அடைந்தங்(கு) என்னுயிரும்
            விஞ்சும் தமிழின் புகழ்கூறும்!
அன்னைத் தமிழின் சீர்காக்க
            அருமைக் கண்ணன் எனைச்செய்தான்!

01.12.2002 [தொடரும்]

10 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    வண்ணத் தமிழில் இசைபாட
    விண்னகம் மண்ணகம் அகம்மகிழ
    வைத்துள் வாழும் எங்களுக்கு
    நல் கவியை இசைத்துவிட்டாய்.ஐயா.
    கண்டு அகம்மலந்தது

    நன்றாக உள்ளது கவிதை பகிர்வுக்கு நன்றி
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா!

    வெல்லும் மொழியென்றே வீறாப்பாய்க் கூறுவோம்!
    சொல்லுமும் பாக்கள் சுமந்து!

    அன்று ஆற்றிய பாக்கள்
    இன்றும் கரும்பாக இனிக்கின்றது!
    மிக அருமை! தொடருங்கள் ஐயா!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer

  3. நற்றலைமை ஏற்று நவின்ற கவிதைகள்
    பொற்றலைமை ஏற்று பொலிந்தனவே! - நற்றமிழ்மேல்
    பற்றறாப் பாவலனே! பாரதி தாசனே!
    நற்பலா உன்றன் நயம்!

    RépondreSupprimer
    Réponses

    1. தலைமைக் குரலேந்தித் தந்திட்ட பாக்கள்
      நிலைமை உரைத்தனவே! நெஞ்சம் - புலமை
      வயலாய் விளைந்ததுவே! வந்தபகை மாய்க்க
      புயலாய் எழுமே புரண்டு!

      Supprimer
  4. பொங்கும் புலமை கொண்டவரே
    புவியில் தமிழை வளர்ப்பவரே
    எங்கும் இதுபோல் கண்டதில்லை
    எழிலாய் ஆனா பாட்டுக்கள்
    சங்கத் தமிழின் இனிமையெல்லாம்
    சரமாய் தொடுக்கும் கவிஞரையா
    மங்காப் புகழை பெற்றிடவே
    மனதில் நாளும் தொழுகின்றேன் !

    புத்துலகு ஆற்றப் புனைந்தகவி இவ்வுலகின்
    எத்திக்கும் சேர்க்கும் எழில் !
    தம வாக்கு 6

    RépondreSupprimer
  5. வணக்கம் கவிஞர் ஐயா!

    //அன்னைத் தமிழின் சீர்காக்க
    அருமைக் கண்ணன் எனைச்செய்தான்//
    எத்துணை உண்மை!
    ஏற்றமுறும் எம் தமிழ்மொழி கூறுவது உங்கள் பெயரே!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  6. நல்ல செய்தி சொல்ல வரும்
    சிறந்த பா வரிகள்
    தொடருங்கள்

    RépondreSupprimer
  7. கண்ணன் செய்த கீதையிலும்
    கடுகுந் தேரின் சாரதியாய்
    மண்ணுள் பெரிய போர்நடத்தி
    மணிமுடி மீட்ட காதையினும்
    திண்ணிய மலையைக் குடையாக்கித்
    திரளா விடையர் காத்ததிலும்
    புண்ணியம் உண்டாம் பலகோடி
    புலவீர் உம்மைச் செய்ததனால்!

    பகிர்விற்கு நன்றி அய்யா!

    RépondreSupprimer
  8. அகம் மகிழ வாய்விட்டுப் படித்தேன் அய்யா. என் சித்தப்பா சுந்தரபாரதி அவர்களின் தலைமையில் பங்கேற்ற கவியரங்க நினைவலைகள் மனதை தாக்குகின்றன..நன்றி அய்யா

    RépondreSupprimer
  9. வணக்கம் !
    மிகவும் ரசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் ஐயா !

    RépondreSupprimer