mardi 30 septembre 2014

ஓவியச் செல்வர்




ஓவியச்செல்வர் ழில்பேர் தெலாப்ளோர்!

காவியக் கம்பன் கழகத்தைக் காக்கின்ற
ஓவியச் செல்வர் உயர்ழில்பேர் - தேவிமரி
நற்றிருத் தாளினை நன்கேத்தி வாழ்கவே!
பொற்றிரு உள்ளம் பொலிந்து!

நெஞ்சத்தைக் கவ்வுகின்ற வண்ணம் தீட்டி
     நிலைத்தபுகழ் பெற்றுள்ளார் ழில்பேர் அய்யா!
மஞ்சத்தை, மலரழகை, மாலை சாய்ந்து
     மணக்கின்ற மதியழகை, மலையை, காட்டை,
பஞ்சத்தை, பகலிரவை, பாயும் ஆற்றை,
     பாடுகின்ற பசுங்குயிலை, பரமன் நற்றாள்
தஞ்சத்தை, தண்டமிழைக் கண்முன் ஏந்தித்
     தருகின்ற சித்திரங்கள் நம்முன் பேசும்!

ஓவியத்தின் நுட்பங்கள் யாவும் கற்ற
     ஒப்பில்லா உயர்கலைஞர் ழில்பேர் அய்யா!
பாவியத்தின் நுட்பங்கள் அறிந்த என்னுள்
     படையெடுத்து இவர்வண்ணம் ஆட்சி செய்யும்!
சோவியத்தின் புரட்சியினைப் பாடி நின்ற
     சுடர்க்கவிஞன் பாரதிபோல் பார்வை கொண்டு
காவியத்தின் காட்சிகளைக் கண்முன் ஏந்திக்
     கை..தீட்டும் சித்திரங்கள் நம்முன் பேசும்!

எம்கழக ஓவியராய்ப் பணிகள் ஆற்றி
     இனியதமிழ் வளர்கின்ற ழில்பேர் அய்யா!
செம்பவளத் திருச்செல்வன் கர்த்தர் சீரைச்
     செபித்துருகும் அன்புடையார்! பண்பின் செம்மல்!
நம்மழகு மனத்துக்குள் நலங்கள் நல்கி
     நடந்துவரும் பாமரனின் தொண்டைப் போற்றி
தம்மழகுச் செயலாற்றி வாழும் வல்லார்
     தந்துவக்கும் சித்திரங்கள் நம்முன் பேசும்!

27.09.2014 
                                                                                                        

10 commentaires:

  1. ஓவியத்தைக் காவியமாக்கிட
    கவிஎழுதி வாழ்த்துரைத்து இப்
    புவியறிய எடுத்துரைத்தீரே
    செவி மடுத்துக் கேட்டோம் நாமும்!

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    விதைத்த வரிகள் எல்லாம் படித்த போது.
    மெய்மறந்து துஞ்சினேன்..
    இனிச் சொல்ல என்னிடம் சொல்ல
    வார்த்தைகள் இல்லை.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    ஓவியமும் பாவியமும் ஒன்றாக நற்கவிக்
    காவியமே காட்டுகின்ற காட்சியென்னே! - கூவியதே
    பாக்களாய்ப் பாரீர் கவிக்குயிலை! பாட்டுக்கள்
    பூக்களாய் மின்னும் பொலிந்து!

    பாவியமும் ஓவியமும் கண்டேன் அரும்பாக்களில்!
    மிகச் சிறப்பு ஐயா!

    உங்கள் இருவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. ஓவியச் செல்வருக்குப் பாவியச் செல்வரின் பாராட்டு-- பா நன்று!

    RépondreSupprimer
  5. வணக்கம் கவிஞரையா!

    பாட்டும் பரதமும் போல
    ஓவியமும் பாவியமும் அற்புதம்!
    நல்ல கவிமழை! அருமை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    RépondreSupprimer
  6. நூறு பாவுக்கு
    ஓர் ஓவியம் போதுமையா - அந்த
    ஓவியரைப் பாடிய பா
    நன்று நன்று

    RépondreSupprimer
  7. ஓவியருக்கு
    காவிய வரிகளால்
    ஒரு பாராட்டு
    அருமை ஐயா

    RépondreSupprimer

  8. ஓவியச் செல்வா்! உயர்தமிழ்ப் பற்றாளா்!
    காவியக் கம்பனைக் கற்பவா்! - பாவிய
    மன்னன் வடித்திட்ட வாழ்த்துக் கவிகண்டேன்!
    மின்னும் மனத்துள் விாிந்து!

    RépondreSupprimer
  9. அந்த ஓவியர் பேறு பெற்றவர்.

    RépondreSupprimer