vendredi 21 février 2014

சொல்லோவியம் - பகுதி 1




சொல்லோவியம்

1.
தேனூறும் சோலைக்குள்
தென்றலென வந்தவனே!
மீனூரும் விழிகளுடன்
விளையாடி நின்றவனே!

2.
மானூரும் காட்டுக்குள்
மகிழ்ந்துாற வந்தவனே!
நானூறும் வண்ணத்தில்
நல்லகவி தந்தவனே!

3.
மயிலாடும் தோப்புக்குள்
மனமாட வந்தவனே!
உயிராடும் வண்ணத்தில்
உணர்வுகளைத் தந்தவனே!

4.
நாற்றாடும் வயல்வரப்பில்
நங்கையெனைத் தொட்டவனே!
காற்றாடும் பட்டானாய்க்
கூத்தாடக் கற்றவனே!

5.
மாப்பறிக்கும் தோப்பினிலே
வண்டாக வந்தவனே!
பூப்பறிக்கும் பொழிலினிலே
பொன்மழையைத் தந்தவனே!

6.
மல்லிகையின் பந்தலுக்குள்
மணந்தாட வந்தவனே!
சொல்லிக்..கை பிடித்தழகாய்ச்
சொர்க்கத்தைத் தந்தவனே!

7.
பந்தாடும் பூங்காவில்
சிந்தாட வந்தவனே!
அந்தாடு கொட்டிட்குள்
அணைத்தென்னை உண்டவனே!

8.
நெல்லறுக்கும் காலையிலே
நெடுமுத்தம் இட்டவனே!
புல்லறுக்கும் மாலையிலே
புடவையினைத் தொட்டவனே!

9.
கருத்துமழை பொழிவதுபோல்
கருத்து..மழை பொழிபவனே!
குருத்தழகாய் விரிந்ததுபோல்
பெருத்தழகாய்ச் சிரிப்பவனே!

10.
குளத்துக்கு மேல்கரையில்
கொக்காக நிற்பவனே!
நிலத்துக்கு உரமாக
நெஞ்சுக்குள் நிறைபவனே!

(தொடரும்)

17 commentaires:

  1. Réponses

    1. வணக்கம்!

      பல்லோ வியம்கொண்ட பாங்கினை என்னுடைய
      சொல்லோ வியம்காட்டும் சூழ்ந்து!

      Supprimer
  2. Réponses

    1. வணக்கம்!

      வாக்களித்து என்னை வளமுறச் செய்திட்டீா்
      பூக்கொடுத்து நின்றேன் புகழ்ந்து!

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா.
    நற்றமிழ் தேனுறூறும் கவிதை புலர்ந்த விடியல் பொழுதில் மனதுக்கு ரம்மியமாக இருந்தது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பறந்து திரியும் பறவையென வந்தீா்!
      சிறந்த தமிழில் திளைத்து!

      Supprimer
  4. சொல்லோவியம் அருமை ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அமிழ்தத் தமிழை அருந்திமகிழ் நெஞ்சுள்
      இமியும் வருமோ இருள்!

      Supprimer
  5. சொல்லோவியம் மிகவும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓவியம் போன்றே உயா்தமிழ் மின்னிடக்
      காவியம் செய்தேன் கமழ்ந்து

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      தேமதுரச் செந்தமிழைத் தேடி வருகின்ற
      மாமனத்து அன்பருக்கென் வாழ்த்து!

      Supprimer
  7. சொல்லோவியம் சுவை....

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லோ வியத்தைச் சுவைக்கின்ற நெஞ்சத்துள்
      பல்லோ வியம்மின்னும் பார்!

      Supprimer
  8. சந்தமிகு கவிதைகளை
    சரமாக்கி விட்டவரே!
    அந்தமின்றி தொடரட்டும்
    அன்னைதமிழ் வளரட்டும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெரும்புலவா் தந்த அருந்தமிழ் வாழ்த்தால்
      வரும்புகழ் என்பேன் வளா்ந்து!

      Supprimer

  9. தேனுாறும் சொற்களிலே நானுாறி நிற்கின்றேன்
    வானுாரும் எண்ணம் வளா்ந்தோங்கி! - மானுாரும்
    காட்டுக்குள் கண்டு களிக்கின்றேன்! உன்னுடைய
    பாட்டுக்குள் என்னைப் பதித்து!

    RépondreSupprimer