mercredi 24 juillet 2013

வள்ளலார் காட்டும் வழி!




வள்ளலார் காட்டும் வழி!

உருப்படா மானிடரே ஒன்று கேளீர்
     ஓரூரில் பலகோவில் கட்டி வைத்தீர்!
ஒருகடவுள் உலகத்தில் இருத்தல் உண்மை
     உருவாக்கல் உருவழித்தல் அவனின் தம்மை!
பொருளையெலாம் வீணாகச் செலவ ழித்தால்
     புவியினிலே எவருக்கும் இல்லை நன்மை!
உருவாகும் எதிர்காலம் ஓங்க வேண்டின்
     உயர்சோதி வடலூரார் வழியை ஏற்பீர்!
              
கன்றுக்குத் தாய்மடியைத் காட்டி யே,பால்
     கறந்துவிடும் நம்மினந்தான் திருந்தப் போமோ?
ஒன்றுக்கும் உதவாத கதைகள் பேசி
     ஊரினையே பலபிரிவாய்ப் பிரித்தல் நன்றோ?
ஒன்றாகும் கடவுளென உணர்ந்து சொன்ன
     ஒழுக்கத்தின் சீலர்நம் வடலூர் வள்ளல்!
நன்றாகும் அருட்பெருஞ் சோதி கொள்ளை
     நாட்டோர்கள் பெறுவாரேல் ஏது தொல்லை!

பலன்காண உயிர்ப்பலியைச் செய்ய வேண்டாம்!
     பாமரரைத் தனியாக ஒதுக்க வேண்டாம்!
நிலங்கண்ட மழையினது தன்மை போன்று
     நீடுபுகழ்ச் சன்மார்க்க நெறிகள் பேணீர்!
புலங்கொழிக்கும் பொதுநோக்கும் புவியில் மேவப்
     புத்தமிழ்தாம் அறநெறிகள் வாழ்வில் சூழ
நலங்கொடுக்கும் அருட்பெருஞ் சோதி ஒன்றே
     நாட்டினிலே தனிப்பெருங் கருணை யாமே!

அருட்சோதி ஆண்டவனைப் போற்றிப் போற்றி
     அன்புதனைப் பல்லுயிர்பால் தூண்டி வைத்தார்!
மருட்சார்பு தீர்ந்திடவே வாழ்வில் என்றும்
     வள்ளலவர் அருளாட்சி வேண்டும் மென்றார்!
பொருள்சேரப் புகழ்சூழ் எவ்வு  யிர்க்கும்
     பொதுமைநிலை சன்மார்க்கம் வேண்டி நின்றார்!
இருள்நீக்கும் மாமருந்தாம் ஈடில் லாத
     இன்பவொளி அருட்சுடரை ஏற்றி னாரே!

ஒருமையுடன் இறைவனடி போற்ற வேண்டும்!
     உவகையுடன் அவனருளை வேண்ட வேண்டும்!
பெருமைபெறும் அவன்புகழைப் பேச வேண்டும்!
     பிறவாத பெருநிலையைப் பெறுதல் வேண்டும்!
அருமையுடன் அவனருளாம் சோதி தன்னில்
     அனைவருமே முழ்கிநனி யுயர்தல் வேண்டும்!
கருணைமிகும் வாழ்வொன்றே வேண்டும் என்ற
     கமழ்கின்ற வழிசொன்ன வள்ளல் வாழ்க! 

30.01.1985
      

10 commentaires:

  1. வள்ளலால் வழி நடப்போம். நன்றி அய்யா

    RépondreSupprimer
  2. வாடிய பிறக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழியை போற்றும் கவிதை உள்ளம நிறைந்தது ஐயா

    RépondreSupprimer
  3. பொருளையெலாம் வீணாகச் செலவ ழித்தால்
    புவியினிலே எவருக்கும் இல்லை நன்மை!//யாருக்கும் நன்மையில்லை

    RépondreSupprimer
  4. உயர்வான வரிகள் - வழிகள் சிறப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. ஒருமையுடன் இறைவனடி போற்ற வேண்டும்!
    உவகையுடன் அவனருளை வேண்ட வேண்டும்!

    வள்ளலார் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  6. வள்ளல் வகுத்த வாழ்க்கை நெறியை
    அள்ளக் குறையா அமிழ்தாம் பாவில்
    கள்ளம் களைந்தே கனிவோ டுயர
    உள்ளம் மகிழ உரைத்தீர் உண்மை!

    ஐயா வணக்கம்!
    இப் பாவினை எண்சீர் விருத்தம் என்றோ கூறுவது...

    மிகமிக அருமை!
    என் பணிவான நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer
  7. வள்ளலார் எனக்கும் மிகவும் விருப்பமான சன்மார்க்க போதகர்.
    அழகிய பாவில் அவர் நெறிகள் அருமை ஐயா!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  8. வள்ளலார் கருத்துக்களை வழங்கிய விதம் அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  9. வள்ளலார் காட்டிய நெறி அருமை...
    கவி வரிகள் அருமை ஐயா..

    RépondreSupprimer

  10. வள்ளல் வகுத்த வழிகளைப் பாட்டாக
    உள்ளம் உருக ஒலித்துள்ளீர்! - வெள்ளமெனப்
    பாயும் மனத்தைப் பதப்படுத்தி நாம்வாழ்ந்தால்
    ஓயும் உயிருற்ற ஊழ்!

    RépondreSupprimer