samedi 20 juillet 2013

கம்பன் விழா 2003




சுவிற்சர்லாந்து கம்பன் விழாக் கவியுரை

அன்பின் பெருமையை அகிலம் உணர
இன்பத் தமிழில் எழிலார் காவியம்
எழுதிய கம்பனின் இணையடி மலரைப்
பொழுதெலாம் போற்றும் புலவன் யானே!
முன்னைப் பிறந்த முத்தமிழ் மொழியை
அன்னையாய் அடைந்தது அடியேன் தவப்பயன்!
சந்தத் தமிழில் எந்தை மயங்கி
இந்த உலகுக்(கு) என்னை அளித்ததால்
செந்தமிழ் மணக்கும் சிந்தை பெற்றேன்!
சொந்தம் எனக்குச் சுடர்த்தமிழ் காக்கும்
நெஞ்சம் கொண்ட நேயர் அனைவரும்!
தஞ்சம் என்னிடம் தண்டமிழ்க் காரிகை!
தமிழே உயிராய்த் தமிழே உடலாய்த்
தமிழே உணவாய்த் தமிழே உணர்வாய்
அடியேன் உற்றதால் கம்பன் அவையில்
தொடக்க உரைதரும் தொண்டினைப் பெற்றேன்!
கம்பன் அரங்கம் கனிச்சுவை தருமென
நம்பி வந்தவர் நறுமணம் காண்க!
அகில உலகக் கம்பன் அமைப்பை
மகிழ்வுடன் அமைத்த மைந்தர் வாழ்க!

பொழியும் பனிபோல் மொழியும் சொற்களால்
வழிதரும் சத்திய சீலனார், வாழ்வில்
மேவு புகழ்சேர் மென்றமிழ் வாணர்!
நாவுக்கரசர்! நல்லடி பணிந்தேன்!

அன்னைத் தமிழுக்கு அணியாய் விளங்கும்
சென்னைக் கம்பன் கழகச் செயலர்
இலக்கியச் செல்வர் இராம லிங்கர்
கலக்கிய மேடைகள் கணக்கில் அடங்கா!
கண்ண தாசனைக், கவிபாரதியை,
வண்ணக் கவிதை வழங்கிய கம்பனை,
இம்மென்(று) என்றே இயம்பும் முன்னே
நம்முன் படைத்து நல்லுரை மொழிவார்!

புதுவைக் கம்பன் கழகம் பொலிய
புதுமை நாடும் புகழ்முருகேசர்
கடமை வீரர் கல்யாண சுந்தரர்
சுடர்த்தமிழ் வளர்க்கும் துயவர் ஆவார்!
அன்னவர் ஆற்றிய அரிய பணியால்
பொன்னிகர் மேன்மையைப் புதுவை பெற்றது!

எளிய தோற்றம்! இனிக்கும் பேச்சு!
தெளிந்த உள்ளம்! தீந்தமிழ்த் தேனை
அளிக்கும் ஆற்றல்! அருந்தமிழ்க் கடலில்
குளித்துக் களிக்கும் கொள்கை வாணர்!
இலங்கைச் செயராசர் உளத்துள் கம்பன்
வளமுடன் வாழ்வதை நலமுடன் நவின்றேன்!

செல்வ வடிவேல் சொல்லும் சொற்கள்
நல்லார் மனத்தை வெல்லும் என்பேன்!

வண்ணத் தமிழ்பால் எண்ணம் முழுதும்
பின்னி ஒளிரும் பிரசாந்தன் வளர்க!

பெருங்கவி கம்பனின் பெருமை பரவ
அரும்பணி ஆற்றும் குருக்கள் வாழி!

அறிஞர் பல்லோர் அமர்ந்த அவையில்
சிறியேன் என்னைச் சிறப்புற வைத்த
கம்பன் வாழ்க! கண்ணன் வாழ்க!
நம்மின் தமிழை நன்றே காத்துப்
பண்புளம் மணக்கும் அன்பர் அனைவரும்
இன்புளம் சூடிப் பொன்னுளம் காண்க!
அலைமகள் அமர்ந்தே ஆளும் நாட்டில்
கலைத்தமிழ்க் கம்பனுக்கு இரண்டாம் ஆண்டு
விழாவைத் தொடங்க அழைத்த நண்பரைத்
தொழுதே தொடக்க உரையைக் கவிதையில்
தந்து மகிழ்ந்தேன்! இந்த அரங்கில்
வந்தவர் வாழ்க! கம்பன் சீரைத்
தந்தவர் வாழ்க! தண்டமிழ் வாழ்க!
சந்தக் கம்பனைச் சாற்றும் இவ்விழாச்
சிந்துக் கவிபோல் சீரினைப் பெற்று
முந்து புகழினை முழங்கி வெல்கவே!

27-12-2003

20 commentaires:

  1. செல்வ வடிவேல் சொல்லும் சொற்கள்
    நல்லார் மனத்தை வெல்லும் என்பேன்!//உண்மையன்றோ

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நற்கவி யாழியார்
      ஆளும் கவிதை அரசு!

      Supprimer
  2. சிறப்பான வரிகள் ஐயா.... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. திண்டுக்கல் என்றால் தனபால் நினைவுவரும்!
      கண்டுச்சொல் காரா்! கவிநேயா்! - பண்பாளர்!
      பள்ளத்தை நோக்கிவரும் நீா்போல் பதிவா்தம்
      உள்ளத்தை நோக்கும் உறவு!

      Supprimer
  3. பெருங்கவி கம்பனின் பெருமை பரவ
    அரும்பணி ஆற்றும் குருக்கள் வாழி!

    கம்பன் விழாவுக்கு வாழ்த்துகள்..!

    RépondreSupprimer
    Réponses

    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நல்வணக்கம்! என்றன்
      இருகை குவித்தேன் எழுந்து!

      Supprimer
  4. ஐயா வணக்கம்!

    கம்பன் விழாவினில் கவியுரை கண்டேன்.
    உங்கள் செம்மொழிச் சிறப்பினை எண்ணி வியக்கின்றேன்.
    மிக அருமை!
    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வானில் வளம்வரும் வெண்ணிலா ஒய்வெடுக்கும்!
      தேனில் திளைத்துத் திறனுற்றுத் - தோன்றுகிற
      இந்த இளமதிக்கு என்றும் விடுப்பில்லை!
      சிந்தை தமிழால் செழித்து!

      Supprimer

  5. கம்பன் புகழைக் கடல்கடந்து பாடுகிற
    உம்மின் பணிகள் ஒளிரட்டும்! நம்மினிய
    சந்தத் தமிழிசையை எந்த உலகோரும்
    வந்து சுவைப்பார் மகிழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. எங்கும் தமிழே! எதிலும் தமிழே!என்[று
      இங்[குஇயங்கும் என்மனம் ஏற்றமுற - வந்தளித்த
      வெண்பா! சுவைசோ் விருந்தாகும்! நற்கருத்தை
      நண்பா! நலமுற நல்கு!

      Supprimer
  6. வணக்கம் ஐயா !எனக்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி அழைப்பு
    வந்திருந்தது .நானும் பலரையும் காணும் ஆவலுடன் காத்திருந்த
    பொழுது உடல் நிலை சுகவீனம் உற்றிருந்த காரணத்தால்
    வருகை தர முடியாமல் போனது .மிகவும் சிறப்பாக வருகை
    தந்தவர்களின் (சிறப்பு விருந்தினர்களின் )சிறப்பையும் தமிழின்
    மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினையும் இன்பக் கவிதையால்
    வடித்த விதம் அருமையாக இருந்தது .உங்களுக்கு எனது
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. அம்பாள் அளித்த அருமைக் கருத்தெல்லாம்
      எம்..மால் அளித்த எழில்!

      Supprimer
  7. அழகிய கவிவரிகள்! அற்புதம்!!
    பெருமைதரும் விற்பனருடன் உங்கள் கவிமழையும் கார்மேகமெனப் பொழிந்திருக்கும்.

    இத்தகைய விழாக்களில் உங்கள் கவிநிகழ்வினை யூ டியூப்பில் நாமும் காணக் கிடைத்தால் மகிழ்வாயிருக்குமே!

    பகிர்வினுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பூங்கொடி உன்றன் புகழரை அத்தனையும்
      மாங்கனி நல்கும் மணம்!

      Supprimer
  8. கவிதை இளமையுடன் அருமையாக உள்ளது கவிஞர்.
    ஆனால் நீங்கள் தான்....!!!

    த.ம.7

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிதை இளமையெனக் கண்டுரைத்த தோழி!
      புவியைப் புரட்டும் புலவன்! - குவிக்கின்றேன்
      இன்பத் தமிழ்ச்செல்வம் நல்லிளமை பொங்குவதால்!
      என்றும் இனிமை இசைத்து!

      Supprimer

    2. வணக்கம்!

      கவிதை இளமையெனக் கண்டுரைத்த தோழி!
      புவியைப் புரட்டும் புலவன்! - குவிக்கின்றேன்
      இன்பத் தமிழ்ச்செல்வம் நல்லிளமை பொங்குவதால்!
      என்றும் இளமை எனக்கு!

      Supprimer
  9. Réponses

    1. வணக்கம்!

      சே..என்று சொல்லாமால் சே.குமார் பா..சுவைத்து
      ஓ..வென்று சொன்னார் உவந்து!

      Supprimer

  10. கம்பன் விழாவில் கவிஞன்யான் பங்கேற்று
    நம்பன் இராமனின் நற்சீரைச் - செம்மையுடன்
    சொல்லிச் சிறப்புற்றேன்! சூடிய பாட்டெல்லாம்
    மல்லி கொடுக்கும் மணம்!

    RépondreSupprimer