lundi 22 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 106]





காதல் ஆயிரம் [பகுதி - 106]

911.
கட்டி அனைத்துக் கவிபடித்து! முத்தத்தைக்
கொட்டிக் கொடுத்துக் குளித்திட்டாய்! - தொட்டவிடம்
ஆகுதே பொன்னாய்! அதைக்கண்டு நற்பயணம்
போகுதே சோடிப் புறா!

912.
தேனூறும் தீங்கனியோ? தென்றலோ? தேவதையோ?
வானூரும் வெண்மதியோ? வண்டமிழோ? - நானூறத்
தந்தாடும் கண்ணழகைத் தான்கண்டு, காதலிலே
வந்தாடும் வண்ண மயில்!

913.
சோலை மலரழகில் சொக்கும் சிறுவண்டாய்
மாலை மயக்கம் மணம்பரப்பும்! - சேலையெழில்
தாவுதே நெஞ்சம்! தமிழ்க்கவியின் சொற்கேட்டுக்
கூவுதே சின்ன குயில்!

914.
கோவைக் கனியோ? குளிர்ந்த,செந் தாமரையோ?
பாவை படைத்த பவளவிதழ்! - சேவையெனும்
ஊற்றாடும் உள்ளழகைத் தான்கண்(டு) உயர்தென்னைக்
கீற்றாடும் பச்சைக் கிளி!

915.
அங்கே இருந்தெனைக் கொல்லும் அருங்கலையை
எங்கே இருந்து..நீ கற்றாயோ? - தங்கமே!
வேர்வையில் நின்றாலும் வேல்விழியே உன்காந்தப்
பார்வையில் கண்டேன் பருந்து!

(தொடரும்)

6 commentaires:

  1. ஊற்றாடும் உள்ளழகைத் தான்கண்(டு) உயர்தென்னைக்
    கீற்றாடும் பச்சைக் கிளி!//என்ன சொல்வது எப்படி சொல்வது

    RépondreSupprimer
  2. பறவைகளோடு நானும் சந்தோசத்தில் பறந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. வழக்கம் போல அழகாக படைத்துள்ளீர்கள்...

    RépondreSupprimer
  4. கிளிபுறா மயிலொடு குயிலினைக் கூறியே
    விழிமலர் விரிந்தது நன்றே கூடவே
    கூறினீர் கொன்றிடும் கூரிய பருந்தினை
    ஊறிய உணர்வும் உதிரமும் உறைய!

    த ம.3

    RépondreSupprimer
  5. சோலை மலரழகில் சொக்கும் சிறுவண்டாய்
    மாலை மயக்கம் மணம்பரப்பும்! - சேலையெழில்
    தாவுதே நெஞ்சம்! தமிழ்க்கவியின் சொற்கேட்டுக்
    கூவுதே சின்ன குயில்!

    ----------------------
    அழகான நடை... அருமையான கவிதை...

    RépondreSupprimer

  6. மயிலாட! பச்சைக் கிளியாட! சின்ன
    குயில்பாட! நற்புறா கொஞ்ச! - உயரப்
    பறக்கும் பருந்தும் வருகைதர! உன்பா
    சிறக்கும் இனிமை செழித்து

    RépondreSupprimer